புதன், ஏப்ரல் 06, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 2.5



பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

இது 'மண்டைதீவு' என்னும் கிராமத்தில் எனது பாலர் வகுப்பின் இரண்டாவது நாள் எனக் கூறியிருந்தேன் அல்லவா? எனது இந்தத் தொடரை தவறாமல் வாசித்து வருகின்ற வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கும். அதாவது வருடத்தில் வந்த அத்தனை நாட்களைப் பற்றியும் உங்களிடம் விபரிக்கப் போகிறேன் என நினைத்திருப்பீர்கள். பயப்பட வேண்டாம். முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்ற அல்லது நெஞ்சின் ஆழத்தில் பதிவுகளை ஏற்படுத்திய நாட்களை மட்டுமே உங்கள்முன் சமர்ப்பிப்பேன்.
சரி இன்று பாடசாலை விட்டாயிற்று என்னை அழைத்துப் போக என் அண்ணா தன் நண்பர்கள் புடைசூழ வந்திருந்தான். இன்று 'கந்தையாப்பா' வளவில் இலந்தைப் பழம் பொறுக்கப் போகின்ற நோக்கம் யாருக்கும் இல்லை, காரணம் நேற்று நடைபெற்ற சம்பவம்.ஆனாலும் பள்ளிக்கூடம் விட்டதும் நல்ல பிள்ளைகளாக வீட்டுக்குச் செல்ல என்னைத் தவிர வேறு யாருக்கும் எண்ணமில்லை. ஆனாலும் இவர்களைத் தவிர்த்து 'தனியே' வீட்டுக்குச் செல்லும் துணிச்சல் எனக்கில்லை. எங்கள் வீடு இருப்பது என்னவோ சுமார் இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவில்தான். ஆனாலும் தனியே வீட்டுக்குச் செல்ல எனக்குப் பாதை தெரியாதே.
இன்றைய திட்டத்தை வகுத்த 'சூத்திரதாரி' என் அண்ணன். அண்ணனைச் 'சூத்திரதாரி' எனக் குறிப்பிட்டேன். ஆனாலும் அவன் வகுத்த திட்டம் ஒன்றும் அவ்வளவு ஆபத்தானதில்லை. அதாவது நேற்றைய தினம் இலந்தைப் பழத்தைத் திருட்டுத் தனமாக பொறுக்கப் போனதால்தானே கந்தையாப்பாவையும், அவர்தம் நாயையும் கண்டவுடன் ஓடவேண்டியும், காயம்படவும் நேர்ந்தது. ஆதலால் இன்று "எங்கும் 'திருடப் போகாமல்' எங்கள் உறவினர்களின் வீடொன்றில் நிற்கும் 'நெல்லிக்காய்' மரத்திலிருந்து அவர்களின் அனுமதியுடன் நெல்லிக்காய்களை 'நேர்மையாகப்' பொறுக்கி எடுப்போம்" என்பது திட்டம். இது ஒன்றும் 'நாயைக் கண்டு ஓடவேண்டிய திட்டமில்லை' என்பதால் இதற்கு நானும் சம்மதித்தேன்.
இவ்வாறு என் அண்ணன் செல்வதற்குத் திட்டமிட்டது எங்கள் தந்தையாரின் 'சிறியதாய்'(*சித்தி, சின்னம்மா) உறவு முறையான ஒரு ஆச்சியின் வீட்டிற்கு.அந்தப் பயணத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன்பாக அந்த ஆச்சியின் பெயரையும், அவரது அழகான பெயரை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 'காட்டு மிராண்டி' மக்கள் எவ்வாறு 'சிதைந்து போகச்' செய்தார்கள் என்பதையும் கூறி விடுகிறேன். அந்தக் காலத்தில் இலங்கையில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் ஆண்களுக்கு நல்லதம்பி, சின்னத்தம்பி, முத்துத் தம்பி போன்ற பெயர்களும், பெண்களுக்கு நல்லம்மா, செல்லம்மா, தில்லம்மா, பொன்னம்மா போன்ற பெயர்களும் வழங்கி வந்துள்ளன என்பதை உங்களில் பெரும்பாலானோர் அறிவீர்கள். ஆனால் நான் மேலே குறிப்பிட்ட எனது தந்தையாரின் சிறிய தாயாருக்கு அவரது பெற்றோர்கள். அந்தக் காலத்திலேயே மிகவும் மதிப்பு மிக்கதான ஒரு பெயராக 'சுகிர்தம்மா' என்று பெயரிட்டார்கள். 
இப்போது கிராம மக்களில் பெரும்பாலானவர்களின் ஒரு குறைபாட்டை உங்கள் நினைவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதாவது எவ்வாறு தமிழ்ச் சொற்கள் கிராமங்களில் திரிபடைந்து வேறு சொல்லாக மாற்றம் பெறுகின்றனவோ, அதேபோலவே அழகிய தமிழ்ப் பெயர்களும் நம்மவர்களின் நாக்குகளில் சிக்கிச் சின்னாபின்னமாகி விடுகின்றன. உதாரணமாக ஒருவரது பெயர் 'அருணாசலம்' என்றால் அந்தப் பெயரை 'அருணாசலம்' என உச்சரிக்கவோ, அழைக்கவோ மாட்டார்கள். பதிலாக 'அர்னாயிலம்' என மாற்றி உச்சரித்து "அது பெயர் திரிபடைந்து போய் விட்டது" என்று காரணம் கூறுவார்கள். இவ்வாறே கிராமத்தில் 'இராசரெத்தினம்' என்பவர் 'ராரெத்தினமாகவும்' 'கணபதிப்பிள்ளை' 'கணேப்பிள்ளையாகவும்' மறுபிறவி எடுப்பார்கள். இதேபோல் எனது பாட்டி முறையான 'சுகிர்தம்மாவும்' 'சூறுதம்மாவாக' மாற்றம் பெற்றார். இதில் யாரையும் குறைகூறிப் பயனில்லை.காரணம் கேட்டால், தமிழ்ச்சொல் 'மருவி விட்டது' அல்லது 'திரிபடைந்து விட்டது' என்பார்கள். 'சூறு' எனும் தமிழ் வார்த்தையின் அர்த்தம் யாழ் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பெரியவர்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.(*தமிழ்நாட்டு வாசகர்கள் Rectum அல்லது Anus எனும் ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான தமிழ் வார்த்தை எவ்வளவு கீழ்த் தரமானது என்பதை அறிவீர்கள் அதேபோலவே 'சூறு' என்பது யாழ் மாவட்டத்தில் கீழ்த்தரமான வார்த்தை) ஆனால் யாழ் நகரிலிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவிலிருந்தும், இக்கிராம மக்கள் 'சுகிர்தம்மா' எனும் அழகிய தமிழ்ப் பெயரை 'சூறுதம்மா' என சிதைத்து சின்னாபின்னப் படுத்தியதாலேயே 'காட்டு மிராண்டி மக்கள்' எனக் குறிப்பிட்டேன். மாறாக நான் பிறந்த மண்ணின் மக்களை 'அவதூறு செய்வதில்' எனக்கு எந்த லாபமும் இல்லை.
இவ்வாறாக பலரும் எங்கள் பாட்டியின் பெயரைக் கொச்சைப் படுத்திக் கொண்டிருக்க, 'அப்பம்மா' என அழைக்க வேண்டிய நாங்களோ அவரை 'பால் தாற ஆச்சி' என அழைக்கத் தொடங்கியிருந்தோம்.
(தொடரும்)
  உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக