செவ்வாய், மே 31, 2011

நாடுகாண் பயணம் - கம்போடியா

நாட்டின் பெயர்:
கம்போடியா (Cambodia)


வேறு பெயர்கள்:
கம்போடிய இராச்சியம் மற்றும் கம்பூச்சியா(இது 'கம்போடியா' என்பதன் பிரெஞ்சு மொழி உச்சரிப்பாகும்)


அமைவிடம்:
தென்கிழக்கு ஆசியா
எல்லைகள்:
வடமேற்கு - தாய்லாந்து 
வடகிழக்கு - லாவோஸ் 
கிழக்கு - வியட்னாம் 
தென்மேற்கு - தாய்லாந்துக் குடாக்கடல் 


தலைநகரம்:
பினொம் பென் (Phnom Penh)

அலுவலக மொழி:
கிமெர் (Khmer)

சமயங்கள்:
புத்த சமயம் 92 %
தாவோயிசம் 4 %
கிறீஸ்தவம் 2 %
இஸ்லாம் 2 %


ஆயுட்காலம்:
ஆண்கள் 60 வருடங்கள் 
பெண்கள் 65 வருடங்கள் 

கல்வியறிவு:
73 %

அரசாங்க முறை:
கூட்டாட்சியுடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் சம்பிரதாயபூர்வமான மன்னராட்சி

மன்னர்:
நோரோடொம் சிகாமொனி(Norodom Sihamoni)

பிரதமர்:
ஹுன் சென் (Hun Sen)

பிரான்ஸ் நாட்டிடமிருந்து விடுதலை:
09.11.1953 

பரப்பளவு:
181,035 சதுர கிலோமீட்டர்கள் 

சனத்தொகை:
14,805,358 (2011 மதிப்பீடு)

நாணயம்:
ரியெல் (Riel / KHR)


இணையத் தளக் குறியீடு:
.kh

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-855 

இயற்கை வளங்கள்:
மரம், வைரக் கற்கள், இரும்பு, மங்கனீஸ், பொஸ்பேட், நீர் மின்சாரம்.

விவசாய உற்பத்திகள்:
அரிசி, ரப்பர், சோளம், காய்கறிகள், பருப்புகள்(முந்திரிப் பருப்பு), மரவள்ளிக் கிழங்கு, பட்டு.

தொழிற்துறைகள்:
சுற்றுலா, துணிகள், கட்டிடம், அரிசி, மீன்பிடி, மரம், தளபாடங்கள், ரப்பர், சீமெந்து, இரத்தினக் கற்கள் தோண்டுதல்.

ஏற்றுமதிகள்:
துணிகள், மரம், ரப்பர், அரிசி, மீன், புகையிலை, பாதணிகள்(காலணிகள் / செருப்பு, சப்பாத்து)

நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
 • இந்தியாவின்(வட இந்திய)மன்னர்களாலும், தமிழ் மன்னனாலும்(ராஜ ராஜ சோழன்) புராதன காலத்தில் ஆளப்பட்ட நாடு. இந்நாட்டைக் கைப்பற்றியதன் காரணமாகவே ராஜ ராஜ சோழனுக்கு 'கடாரம் கொண்டான்' எனும் பெயரும் நிலைத்தது.
 • இந்நாட்டிலுள்ள 'ஆங்கூர் வாட்' எனும் கோயில் தமிழ்நாட்டின் 'தஞ்சைப் பெருங் கோயிலை' விடப் பெரியதாகும். இந்திய மன்னனாகிய ராஜ வர்மனால் விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்ட கோயில் காலப் போக்கில் கம்போடியா ஒரு பௌத்த நாடாகியபோது உலகின் மிகப்பெரிய பௌத்த ஆலயமாகியது.
 • இந்நாட்டில் நிகழ்ந்த இருபது வருடகால உள்நாட்டு யுத்தத்தில் இந்நாட்டின் செம்படைக் கெரில்லாக்களாலும், வியட்நாமிய படைகளாலும், அமெரிக்க விமானக் குண்டு வீச்சுக்களாலும் முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப் பட்டனர். 
 • இந்நாட்டில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தங்களால் சுமார் இருபது லட்சம் பேர் அகதிகளாயினர்.
 • உலகின் கொடுங்கோலர்களில் ஒருவனாக வர்ணிக்கப்படும் போல் போட் தலைமையிலான 'செம்படைக் கெரில்லாக்களின்' ஆட்சியில் இருபது லட்சம் வரையான மக்கள் பசி, பட்டினி, கொடிய நோய்கள், 'உடனடி மரண தண்டனை' நிறைவேற்றம் போன்றவற்றால் கொல்லப் பட்டனர்.
 • கம்யூனிஸ்டுகளாகிய செம்படைக் கெரில்லாக்கள் 1975 தொடக்கம் 1993 காலப் பகுதியில் கம்போடியாவின் கல்விச் சமூகத்தையே அழித்தொழித்தனர்.
 • செம்படைக் கெரில்லாக்களின் ஆட்சியில் பல லட்சம் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் போன்றோர் கொன்றழிக்கப் பட்டனர்.
 • அமெரிக்க-வியட்னாம் யுத்த காலத்திலும், செம்படைக் கெரில்லாக்களின் காலத்திலும் கம்போடியாவில் எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டு வீச்சுகள் போன்றவற்றால் கம்போடியாவின் வன விலங்குகளில் 75% மானவை அழிக்கப்பட்டு விட்டன. 
 • ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் அளவிற்கு செல்வச் செழிப்போடு திகழ்ந்த கம்போடியா இன்று உலக அரங்கில் 'பிச்சைப் பாத்திரம்' ஏந்தி நிற்கிறது. 
 • உலகின் ஏழை நாடுகளின் வரிசையில் கம்போடியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
 • பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில் கம்போடியாவும் ஒன்று.2011 நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலரின் கம்போடிய மதிப்பு 4095 ரியல்கள்(கம்போடிய நாணயம்).
 • நாட்டில் போசாக்குக் குறைவினால் ஏராளமான குழந்தைகள் ஐந்து வயதிற்குள்ளாகவே இறந்துவிடும் நிலை காணப் படுகிறது.
 • பெரியவர்களில் பலர் மலேரியா, எயிட்ஸ் போன்ற நோய்களால் குறைந்த வயதிலேயே இறக்கும் நிலை காணப் படுகிறது.
 • இந்நாட்டில் ஆசியாவிலேயே அதிக அளவான எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.மொத்தச் சனத்தொகையில் 2.8 % பேர் (170.000) எயிட்ஸ் நோயாளிகள் ஆவர். இதுவரையில் எயிட்ஸ் நோயினால் 80.000 பேர் இறந்துள்ளனர்.(தகவலுக்கு நன்றி:www.utopia-asia.com)
 • முற்றாக அழிந்து போன நாடாகிய கம்போடியா தற்போது ஐ.நா, மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவிகளால் மெல்ல மெல்ல உயிர்பெற்று வருகிறது.   

இன்றைய பழமொழி

மூத்தோர் சொல்
இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது,
உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை 
அன்றே ஒழிய விடல். (113)  

பொருள்: நடுநிலை தவறி ஈட்டிய பொருள் நன்மையே தருவதாக இருந்தாலும் அதை அப்போதே கைவிட வேண்டும்.

திங்கள், மே 30, 2011

தாய்லாந்துப் பயணம் - 3


ஆக்கம்: திருமதி.வேதா இலங்காதிலகம்
விமான நிலையத்தின் கீழ் உள்ள ரயில் நிலையம் 
டென்மார்க் தலைநகர் கொப்பென்கேகன் காஸ்ருப் விமான நிலையத்திற்குச் செல்லும் தொடருந்தால் விமான நிலையத்திற்குள் சென்றோம்.
தாராளமான நேரம் இருந்தது. மாலை 4.30க்கு ஒஸ்ரியன் விமானத்தில் நாம் ஒஸ்ரியா வீயென் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.                                                 
Wien  என்பது டெனிஷ் உச்சரிப்பு. ‘ஐ’ என்ற ஆங்கில எழுத்து டெனிஷில் ‘ஈ’ என்ற உச்சரிப்பைப் பெறுகின்றது. இதுவே வீன்னா, வைன் என்றும் வேற்று மொழியில் உச்சரிப்பு வரலாம்.                                                  
காஸ்ருப் விமான நிலையம் 
நேரம் வர தகவல் பலகையில், உள்ளே செல்லும் படலை இலக்கம் அறிந்தோம். பயணக் கண்காணிப்புக்கு ‘ செக் இன்னுக்கு’ வரிசையில் நின்று எமது பெட்டிகளை ஒப்படைத்தோம். அப்பாடா! இனி தாய்லாந்தில் அதை எடுக்கலாமே! ஒரு பாரச் சிறகை உள்ளே மடக்கியது போல இலேசாக இருந்தது. இரண்டு பெட்டிகளும் 16, 16 கிலோ இருந்தது என்றதும் மகிழ்வாக இருந்தது. ஏனென்றால் வரும் போது இன்னும் பாரத்துடன் வரலாமேயென்ற மகிழ்வு.                                               
உலகத்துத் தொல்லைகள் அனைத்தையும் விட்டு வீசி விட்டு வேறொரு உலகத்துள் புகுவதாக மாலை 4.30க்கு விமானத்திற்குள் சென்றோம். நாமும் எமக்குச் செல்லம் கொடுக்க விரும்பி எடுத்த பயணம் இது. மனம் நூறு விகிதமும் ஆனந்தத்தில் மிதந்தது. அது என்ன செல்லம் கொடுத்தல் என்கிறீர்களா?
காஸ்ருப் விமான நிலையம் 
டென்மார்க்கில் ஒருவர் மிகத் துன்பத்தில் இருந்தால் அவருக்கு நண்பர்கள், நெருங்கியவர்கள் புது உடை, சப்பாத்து, என்று ஏதாவது பரிசுகள் வாங்கிக் கொடுத்து துன்பப்படுபவரை மகிழ்விப்பார்கள், செல்லம் கொடுப்பார்கள்.
துன்பப்படுபவரும் தன்னை உற்சாகப் படுத்த தலையலங்காரத்தை மாற்றுதல், பயணம் செல்லுதல் என்று தனக்குத் தானே செல்லம் கொடுப்பார். மனதில் தைரியம் உள்ளவர்கள் தான் இதைச் செய்வார்கள். மற்றவர்கள் துன்பத்தில் விழுந்து தத்தளிப்பார்கள். இதைத் தான் டெனிஷில் "Forkæle"  பண்ணுதல், செல்லம் கொடுத்தல் என்போம்.
”….ஒரு சோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் 
    உறவன்றி வேறு இல்லை கவனங்களில்.”….
ஒஸ்ரியன் விமானம் 
விமானத்தில் பேசியபடி, சாளரம் ஊடாகப் பார்த்தபடி, தொலைக் காட்சியில் நாடுகளுக்கு ஊடாகச் செல்வதை ஆர்வமாகப் பார்த்தபடியும் பயணித்தோம்.
சிறிது நேரத்தால் உணவு வண்டில் வந்தது. இந்த விமானத்தில் எனக்கு சைவ உணவு பதிவு செய்ய இயலாது என்றனர்.  என்ன உணவு வருமோ என்று குழப்பமாக இருந்தது. நல்ல வேளை ஒஸ்ற், கத்தரிக்காய், பஸ்ரா எல்லாம் கலந்த சூடான ஒரு உணவுக் கலவையும், புடிங், பாண், பழங்கள் என்றும் தந்தனர். மகிழ்வு தான். கணவர் கோலாவுடன், நான் தேனீருடன் உணவு கொண்டோம். மிக அருமையாக, திருப்தியாக இருந்தது.                                        
மாலை 6.30க்கு வீயென் விமான நிலையமடைந்தோம்.   
வீயென் விமான நிலையம்
உள்ளே சுற்றுசுற்றென்று சுற்றினோம். அங்கிருந்து பாங்கொக்கிற்கு இரவு 11.20 ற்கே விமானம். ஆமாம்! காத்திருந்த நேரம் அதிகம் தான். நடந்து கால்கள் நோக, அமர்ந்திருந்தும் நேரத்தை ஓட்டினோம். புத்தகத்திலும் பாதிக்குக் கிட்ட வாசித்துவிட்டேன்.
சுமார் 10.00 மணிக்கு படலை திறக்க உள்ளே சென்றோம். இது வரை ஐரோப்பாவில் சுற்றினோம்.
இனி பத்து மணி நேரப் பயணம், ஐந்து மணித்தியால நேர வித்தியாசத்தில் பாங்கொக் விமானநிலையம்  சென்று சேருவோம்.
பயணம் தொடரும்

ஞாயிறு, மே 29, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி தோண்டிக்கொள்கிறான்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி 
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. (112)

பொருள்: நடுநிலையிலிருந்து தேடி வைத்த செல்வம் இடையில் அழிந்து போகாமல் அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும்.

சனி, மே 28, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான், சாத்தானிடம் செல்லத் துள்ளி ஓடுகிறான்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

தகுதி எனஒன்று நன்றே பகுதியால் 
பால்பட்டு ஒழுகப் பெறின். (111)

பொருள்: அறவழி நின்று பகை, நட்பு, நொதுமல்(அயலார்) ஆகிய மூவிடத்திலும் வேறுபாடு இன்றி நடத்தலே நடுவுநிலையின் பயனாகும்.

வெள்ளி, மே 27, 2011

இன்றைய பொன்மொழி

 மூத்தோர் சொல்
கடவுள் பாவங்களை மன்னிக்கிறார், இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்.

வணக்கம்,வருக, வருக.

எமது இணையப் பக்கத்திற்குப் புதிதாக வருகைதரும் அனைத்து வாசகப் பெருமக்களையும் இருகரம் கூப்பி வரவேற்பதில் பெருமகிழ்வு எய்துகிறோம். இப்பக்கத்திற்குப் புதிதாக வரும் வாசகர்களிடமிருந்து ஒரு 'முறைப்பாடு' எமக்குக் கிடைத்துள்ளது. எம்மால் வெளியிடப்படும் தொடர்களை ஆரம்பத்தில் இருந்து வாசிப்பதில், சில வாசகர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக எழுதியுள்ளனர். உங்கள் அனைவருக்கும் நாங்கள் தெரிவிக்க விரும்புவது யாதெனில்:
எமது இணையத் தளமானது 20.09.2010 இல் ஆரம்பிக்கப் பட்டது. எமது இணையத்தில் வெளியாகும் தொடர்களில் பெரும்பாலானவை செப்டெம்பர் மாதம் 2010 ஆம் ஆண்டிலிருந்தே வெளியாகின்றன. இவைகளை நீங்கள் தொடக்கத்திலிருந்து வாசிக்க விரும்பினால், இவ்விணையப் பக்கத்தின் இடது பக்கத்தில் காணப்படும் குறிப்பிட்ட ஆண்டில் சொடுக்கினால்(கிளிக் செய்தால்) நீங்கள் குறிப்பிட்ட ஆண்டில் வெளியாகிய பழைய இடுகைகளுக்குச் செல்ல முடியும். அதன் பின்னர் நீங்கள் குறிப்பிட்ட மாதத்தின் மீது சொடுக்கினால்(கிளிக் செய்தால்) அம்மாதத்தில் வெளியாகிய பழைய இடுகைகளுக்குச் செல்ல முடியும்.

மேற்படி தகவல், புதிய வாசகர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
அன்புடன் 
ஆசிரியபீடம் 
அந்திமாலை 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம்; உய்வுஇல்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (110) 

பொருள்: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டு. ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உயர்வே கிடையாது.

வியாழன், மே 26, 2011

இன்றைய பழமொழி

மூத்தோர் சொல்
தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை, காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

கொன்றுஅன்னா இன்னா செயினும் அவர்செய்த 
ஒன்றுநன்று உள்ளக் கெடும். (109) 

பொருள்:முன்பு உதவி செய்தவர், பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைத்தால் அத்துன்பம் மறைந்து போகும்.

புதன், மே 25, 2011

தாரமும் குருவும் பகுதி 3.8

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 3.8

அன்றைய தினம், என் எதிர்காலத்தின்மீது பாரியதொரு மாறுதலை ஏற்படுத்தப் போகிறதென்பது அப்போது எனக்குத் தெரியாது. அன்றைய தினம் எனக்கு 'உவப்பான தினம்' இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே போலவே அது 'சக்திவாய்ந்த' தினம் என்பதும் நூற்றுக்கு நூறு வீதம் உண்மையாகும்.
மாலை மயங்கும் நேரம் மது மயக்கத்துடன் வீட்டிற்கு வந்துசேர்ந்த தந்தையாரிடம் 'செல்லி அக்கா' என்னை ஈர்க்குக் கட்டால் அடித்த விடயம் எனது அண்ணன், மற்றும் தம்பியால் பிரஸ்தாபிக்கப் பட்டது. அவ்வளவுதான், தமிழில் என்னென்ன தூஷண வார்த்தைகள்(கெட்ட வார்த்தைகள்) உள்ளனவோ அவ்வளவும் என் தந்தையாரின் நாவிலிருந்து புறப்பட்டு வான் அலை வழியே தமது பயணத்தை தொடர்ந்தன. என் தந்தையார் 'மண்டைதீவில்' ஒரு பிரபலமான 'சண்டியன்' அல்ல, ஆனால் 'கோழையும் அல்ல' பெரும்பாலான மண்டைதீவு ஆண்கள் 'சண்டியர்கள்' எனும் வகைப்படுத்தலுக்குள் அடங்கக் கூடியவர்கள். ஒரு காலத்தில் கிருமி நாசினியைக் குடித்துத் 'தற்கொலை' செய்து கொள்ளல், மற்றும் சண்டையில் கத்தி, மற்றும் வாள் போன்ற ஆயுதங்களை உபயோகித்தல் போன்றவற்றால் இந்தக் கிராமம் அடிக்கடி பத்திரிகைச் செய்திகளில் இடம்பெற்றதும் நீங்கள் அறிந்திருக்கக் கூடிய விடயங்களாகும்.
சரி என் தந்தையார் மது போதையில் இருந்தாலும், தகராறு செய்யும் நோக்கில்  உடனடியாக 'செல்லி அக்கா' வீட்டை நோக்கிச் செல்லாததற்கும் காரணம் உள்ளது. இக்கிராம மக்கள் 'சண்டித்தனம்' மிக்கவர்கள் என்று ஏற்கனவே குறிப்பிட்டேன் அல்லவா? ஆனால் இவர்களிடம் உள்ள ஒரேயொரு சிறப்பான குணம் யாதெனில் 'கல்விச் சமூகத்திற்கு' போதுமான மதிப்புக் கொடுத்தல் ஆகும். அது பாடசாலையாக இருக்கட்டும், தனியார் வகுப்பாக(டியூசன்) இருக்கட்டும் அங்கு கற்பிக்கும் 'ஆசிரியருக்கு' உரிய மதிப்பை வழங்கத் தவறுவதே இல்லை. ஆசிரியர்கள் தங்கள் பிள்ளையைக் 'கண்மண் தெரியாமல்' அடித்தாலும், தரக்குறைவாக நடத்தினாலும் அவர்கள் ஏன் என்று கேட்க மாட்டார்கள். இது மண்டைதீவுக்கு மட்டுமின்றி ஏனைய தீவுப்பகுதிக் கிராமங்களுக்கும் பொருந்தும். ஒரு சில விதிவிலக்குகள்(Exception cases) இல்லாமலில்லை. யாழ் மாவட்டத்தின் ஏனைய கிராமங்களின் நிலை எதுவென்பதை நானறியேன்.
இந்த வகையில் 'செல்லி அக்கா' என்ற அந்தப் பெண்மணியுடன் ஏன் என் தந்தையார் சண்டைக்குப் போகவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனாலும் வழமையாக எல்லாப் பெற்றோர்களும்/பெரும்பாலான பெற்றோர்கள் தமது ஆற்றாமையின் காரணமாக தமது வீட்டிலிருந்தபடியே வாத்தியார்களை, டீச்சர்களை ஏசுவதுபோல, எனது தந்தையாரும் வீட்டில் இருந்தபடியே 'செல்லி அக்காவை' கிழி கிழியென்று கிழித்துக் கொண்டிருந்தார்.இடையிடையே எனது அம்மா தன்னிச்சையாக எடுத்த 'முடிவு' (செல்லி அக்காவிடம் என்னைப் படிக்க அனுப்பியது) தோல்வியில் முடிவடைந்ததைப் பற்றி கிண்டல் செய்தும் பேசிக் கொண்டிருந்தார். பொதுவாக ஆண்கள் மதுபோதையில் பேசும் பேச்சுக்களை, கிராமத்துப் பெண்களில் பெரும்பாலானவர்கள் காதில் வாங்குவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் எனது தாயார் சற்று வித்தியாசமானவர். 'குடிக்காமல்' இருக்கும்போது கிட்டத்தட்ட 'ஊமை' போல இருக்கும் எனது தந்தையார் 'சோம பானம், சுர பானம்' போன்றவைகள் வயிற்றிற்குள் சென்றதும் பேசுகின்ற அர்த்தமில்லாத பேச்சுக்களையும் கவனத்தில் கொள்வார்.இது ஒரு 'பலவீனம்' என்பது எனது மதிப்பீடு.
கொஞ்ச நேரம் பொறுமையாக எனது தந்தையாரின் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருந்த எனது தாயார் இறுதியாக "தாசனை(எனது வீட்டுப் பெயர் இதுவாகும்) நான், அம்மா வீட்ட(எனது பேர்த்தியாரின் வீடு) கொண்டுபோய் விட்டுப் படிப்பிக்கப் போறன்" என்று திருவாய் மலர்ந்தருளினார். இதைக் கேட்ட எனக்கு 'வயிற்றில் புளியைக் கரைத்ததுபோல் இருந்தது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.   

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும் அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

நன்றி மறப்பது நன்று அன்று; நன்று அல்லது 
அன்றே மறப்பது நன்று. (108)

பொருள்:பிறர் செய்த நன்மையை மறப்பது அறமாகாது. அவர் செய்த தீமையை உடனே மறந்து விடுவதே அறமாகும்.

செவ்வாய், மே 24, 2011

நாடுகாண் பயணம் - புருண்டி

நாட்டின் பெயர்:
புருண்டி (Burundi) 

வேறு பெயர்:
புருண்டி குடியரசு

அமைவிடம்:
கிழக்கு ஆபிரிக்கா

எல்லைகள்:
வடக்கு - ருவாண்டா
கிழக்கு மற்றும் தெற்கு - தன்சானியா
மேற்கு - கொங்கோ ஜனநாயகக் குடியரசு

தலைநகரம்:
புஜும்புரா(Bujumbura)


அலுவலக மொழிகள்:
கிருண்டி, பிரெஞ்ச்.

பிரதேச மொழிகள்:
கிருண்டி, ஸ்வஹிலி.


சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கம் 62 %
ஆதிச் சமயங்கள்(இயற்கைச் சமயம்) 23 %
இஸ்லாம் 10 %
புரட்டஸ்தாந்துகள் 5 %


கல்வியறிவு:
59.3 %

ஆயுட்காலம்:
ஆண்கள் 57 வருடங்கள் 
பெண்கள் 60.5 வருடங்கள் 

ஆட்சிமுறை:
குடியரசு 

ஜனாதிபதி:
பியரே ங்குருன்சிசா (Pierre Nkurunziza)

துணை ஜனாதிபதி:
டெரென்ஸ் சினுன்குருசா (Terence Sinunguruza)


பெல்ஜியத்திடமிருந்து சுதந்திரம்:
1.07.1962

பரப்பளவு:
27,834 சதுர கிலோமீட்டர்கள் 

சனத்தொகை:
8,988,091 (2009 மதிப்பீடு)

நாணயம்:
புருண்டியன் பிராங்(FBu / BIF)

இணையத் தளக் குறியீடு:
.bi

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-257


இயற்கை வளங்கள்:
கோபால்ட்,செப்பு, யுரேனியம்,நிக்கல்,பிளாட்டினம்.

விவசாய உற்பத்திகள்:
பருத்தி,தேயிலை, கோப்பி(காப்பி), சீனி, சோளம், இறுங்கு, இனிப்புக் கிழங்கு(வற்றாளங் கிழங்கு), வாழைப்பழம், மரவள்ளிக் கிழங்கு, மாட்டிறைச்சி, பால்.

தொழிற்சாலை உற்பத்திகள்:
துணிகள், போர்வைகள், சப்பாத்துகள், சவர்க்காரம்(Soap) இயந்திரங்களை ஒன்றுபடுத்துதல்/பொருத்துதல், உணவுகள் பதனிடுதல்.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
 • ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளால் ஆளப்பட்ட நாடு.
 • உலகிலுள்ள மிகவும் வறிய பத்து நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
 • உலகில் ஊழல் தலைவிரித்தாடும் நாடுகளில் ஒன்று.
 • இந்நாட்டு மக்களில் 80 % பேர் ஏழைகள்.
 • இந்நாட்டின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 56 % பேர் போதிய ஊட்டச் சத்து இன்றி அவதியுறுகின்றனர்.
 • பணவீக்கம் அதிகரித்து வரும் ஏழை நாடுகளில் ஒன்று. தற்போதைய நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலரின் புருண்டி நாணய மாற்று 1234 புருண்டி பிராங்குகள் ஆகும்.
 • இந்நாட்டு மக்களில் 2 % பேருக்கு மட்டுமே வங்கிக் கணக்கு உள்ளது.
 • இவர்களிலும் 0.5 % பேர் மட்டுமே வங்கியில் கடன் பெறும் வசதி/ வல்லமை உள்ளவர்கள்.
 • இந்நாட்டில் 4.2 % பேர் எயிட்ஸ்(HIV) நோய்த் தொற்று உள்ளவர்கள். எயிட்ஸ் நோய்க்குப் பயந்து 5 லட்சம் பொதுமக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டனர்.
 • 2006 ஆம் ஆண்டில் இந்நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக இரண்டு லட்சம் வரையான பொதுமக்கள் கொல்லப் பட்டனர். 5 லட்சம் பேர் அகதிகளாயினர்.
 • வைத்திய சேவைகளும் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது ஒரு லட்சம் நோயாளிகளுக்கு மூன்று மருத்துவர்கள் எனும் நிலை காணப்படுகிறது.
 • இந்நாட்டில் ஒரேயொரு பல்கலைக் கழகம் மட்டுமே(University of Brundi) உள்ளது.