வியாழன், மே 12, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 3.5

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

ஒவ்வொரு குழந்தையும் தன் வாழ்நாளில் சந்திக்கும் முதலாவது ஆசிரியை அதன் 'தாய்' என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் உலகில் பெரும்பாலான பிள்ளைகள் தமது தாய்மாரிடம் கல்வி கற்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இதன் காரணமாகவே ஆசிரியர்களாக வேலைபார்க்கும் பெண்கள் கூட தங்கள் பிள்ளைகளை இன்னொருவரிடம் கல்விகற்க அனுப்புகிறார்கள். ஒன்றிரண்டு புறநடைகள்(exception cases) இல்லாமல் இல்லை. தோமஸ் அல்வா எடிசன்(விஞ்ஞானி) சிறுவனாக இருக்கும்போது பள்ளியில் ஒழுங்காகப் படிக்காததால் பள்ளியிலிருந்து இடைநிறுத்தி விட்டார்கள். அவருக்கு அவரது தாயார்தான் வாழ்நாள் முழுவதும் குருவாக இருந்தார் என்கிறது வரலாறு.
எனது நிலை எடிசனின் நிலையை ஒத்தது அல்ல என்றாலும் 'தாயாரிடம் படித்தல்' என்ற எனது புதிய முயற்சி ஒரு சில நாட்களுக்குள்ளேயே 'உலக்கை தேய்ந்து உளிப்பிடியான' கதையாகியது. அத்துடன் குடும்பத்தின் 'பாதுகாப்பு அமைச்சராகிய' என் அப்பா எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்த திடீர் முடிவு குடும்பத்தின் உள்துறை, மற்றும் கல்வி அமைச்சராகிய என் அம்மாவை மிகவும் பாதித்தது என்றே கூற வேண்டும். இதை சீர்செய்யும் வழிவகைகளைப் பற்றி தீவிரமாகச் சிந்தித்த என் தாயார் இறுதியில் 'சுயமாக' ஒரு முடிவை எடுத்தார். அதாவது எங்கள் வீட்டிற்கு மிக அருகில் வசித்துவரும் ஒரு பிரபலமான, ஓய்வுபெற்ற ஆசிரியையின் மகள், என்னைவிடப் பெரிய பிள்ளைகளுக்கு டியூசன்(Tution) கற்பித்து வந்தார். அவரது பெயரை இப்போதைக்கு 'செல்லி அக்கா' என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் என்னைப் படிக்க அனுப்புவதாக என் அம்மா ஒரு முடிவை எடுத்தார். என்னைக் கேட்டால் அது ஒரு தவறான முடிவு என்றுதான் சொல்வேன்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக