இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 3.3
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
சாப்பிட்டு முடித்ததும் அம்மா 'நேர்மையின் மறு அவதாரமாக' நண்பகலில் நடந்த சம்பவத்தை அப்பாவிடம் கொஞ்சம் 'மென்மையான' முறையில் எடுத்துக் கூறினார். எங்கள் அப்பாவிடம் எப்போதுமே ஒரு வழக்கம் இருந்தது. அதாவது 'பர்மிய, பாகிஸ்தானிய' இராணுவ ஆட்சியாளர்கள் போல, திடீர் புடீர் என முடிவுகளை எடுப்பது. அது அற்ப விடயமாக இருந்தாலென்ன, மிகப்பெரிய விடயமாக இருந்தாலென்ன அவர் அப்படித்தான் முடிவுகளை எடுப்பார். அன்று அவர் எங்களை அடிக்கவில்லை. ஆனால் அவர் எடுத்த முடிவு என்னை மிகப்பெரும் திகைப்பிற்கு உள்ளாக்கியது.
அவரது பதில் இதுவாக இருந்தது:- "நாளையில இருந்து 'சின்னவன்'( எங்கள் குடும்பத்தில் பிள்ளைகளின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரிக்கும்வரை என்னை அவ்வாறுதான் அழைத்தார்கள்) பள்ளிக்கூடம் போகத் தேவையில்லை, அவன நீ(என் தாயாரை) வீட்டில படிப்பி" என்று ஒரே போடாகப் போட்டார். எனக்கோ பயங்கரத் திகைப்பு. என் பாலர் வகுப்பு என்ற ஒரு 'வசந்தகாலக் கனவு' என் அண்ணனதும், அவனது நண்பர்களதும் 'மாங்காய்' ஆசையால் மூன்றே நாளில் தகர்ந்து தவிடுபொடியாகிவிட்டதே!
இவ்விடத்தில் பெற்றோர்களுக்கு ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன்.
#################################################
பள்ளிக்கூடத்திலிருந்து உங்கள் பிள்ளைகள் திரும்பி வரும்போது சில பிள்ளைகள் மாங்காய், புளியங்காய், நெல்லிக்காய், கொய்யாக்காய் போன்றவற்றைத் தேடிச் செல்வதுண்டு. நான் மேலே குறிப்பிட்டவற்றில் கொய்யாக்காய் தவிர்ந்த ஏனையவை மிகவும் 'புளிப்பாக' இருக்கும் என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமாகும். இதில் ஒரு முக்கியமான விடயத்தை நாமெல்லோரும் மறந்து விடுகிறோம். மேற்குறிப்பிட்ட மாங்காய் புளியங்காய் வகையறாக்களில் இருக்கும் 'சிட்ரிக் அமிலம்'(Citric Acid) காரணமாகவே மேற்படி காய்கள் புளிப்பாக இருக்கின்றன. மேற்படி சிட்ரிக் அமிலம் மனிதனின் இரைப்பை, குடல் போன்றவற்றைக் 'கொடூரமாகத்' தாக்கும் வல்லமை கொண்டது. இதைக் குழந்தைகள் அறியமாட்டார்கள். அவர்களது மென்மையான 'இரைப்பை', 'குடல்' போன்றவற்றை அவர்கள் ஆசைப்பட்டுத் தேடி உண்ணும், மாங்காய், புளியங்காய், போன்றவை சிறு வயதிலேயே பதம்பார்த்துவிடுகின்றன. இதன் காரணமாக அவர்கள் சிறு வயதிலேயே 'குடற் புண்' போன்ற உபாதைகளுக்கு ஆளாகி விடுகின்றனர். குடற்புண்ணானது காலப்போக்கில் 'இரைப்பைப் புற்றுநோய், 'குடற் புற்றுநோய்' போன்றவை உருவாக வழிவகுத்து விடுகிறது. இவைகளை நம் சிறார்கள் அறிய மாட்டார்கள். இவர்களை மேற்படி விடயங்களில் கவனம் செல்லவொட்டாது தடுப்பது பெற்றோர்களின் கடமையாகும். "ஜப்பானியர்கள் தமது உணவுகளில் 'ஊறுகாய்களை' அதிகம் உபயோகிப்பதால் இரைப்பைப் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்" என மருத்துவ ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
#################################################
அப்பா என் அம்மாவிடம் நாளை முதல் என்னைப் படிப்பிக்கின்ற பொறுப்பை ஏற்குமாறு கூறியதற்குப் பல காரணங்கள் உள்ளன.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக