வியாழன், மே 19, 2011

தாரமும் குருவும் பகுதி 3.7

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 3.7


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
நான் வீட்டை நோக்கிச் செல்லும்போது விக்கி விக்கி அழுதுகொண்டே சென்றேன். என்னோடு வீடுவரை வந்த, என்னைவிட மூன்று வயது மூத்த பெண் பிள்ளையான 'சிவானந்தி' என் அழுகையை நிறுத்துவதற்குப் படாத பாடு பட்டாள். நானும் "நியாயம் கேட்பதற்கு ஐ.நா.அதிகாரிகள் வந்தாலொழிய, என் அழுகையை நிறுத்துவதில்லை" என்ற 'திடசங்கற்பத்துடன் அழுதுகொண்டே சென்றேன். மெல்லிய சத்தத்தில் அழுதுகொண்டு சென்ற நான், எங்கள் வீட்டை அண்மித்ததும் 'பெருங்குரலெடுத்து' அழுதேன்.எனது அழுகைச் சத்தம் வீட்டுக்குள்ளிருந்த என் தாயாருக்குக் கேட்டிருக்க வேண்டும், வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த அவர் ஓட்டமும் நடையுமாக என்னை நோக்கி வந்தார். நானும் ஓடிச்சென்று என் அம்மாவின் கால்களைக் கட்டிக்கொண்டு அழுதேன். என்னை யாரோ அடித்திருக்கிறார்கள் என்பதை நொடிப்பொழுதில் புரிந்து கொண்ட என் தாயார் அருகில் நின்ற சிவானந்தியிடம் "ஆர் ஆச்சி இவன அடிச்சது?" என்றார். சிவானந்தி அக்காவும் தன் பங்கிற்கு சில மிகைப்படுத்தல்களுடன் நடந்த சம்பவத்தை என் அம்மாவிடம் விபரித்தாள். ஆனாலும் செல்லி அக்கா(டீச்சர்) என்னை 'ஈர்க்குக் கட்டால்' அடித்த விடயத்தை தணிக்கை செய்யாமல் சொல்லி வைத்தாள். அவள் என் தாயிடம் நடந்த சம்பவத்தைப் பற்றி கூறும்போது தவறு என் பக்கம் என்பது போல மிகைப்படுத்தி கூறியது சற்று வருத்தமாக இருந்தாலும் கதையின் 'கிளைமாக்ஸ்'(முக்கிய கட்டம்) கட்டமாகிய 'ஈர்க்குக் கட்டால்' அடித்தார் எனும் விடயத்தை மறக்காமல் கூறியது சற்றே ஆறுதலாக இருந்தது.
எனது கைகளிலும், கால்களிலும், முதுகிலும் ஈர்க்குக் கட்டால் அடித்ததால் ஏற்பட்ட சிறு காயங்களைக் கண்டதும் என் தாயாரால் அழுகையையும் ஆத்திரத்தையும் அடக்க முடியவில்லை. கிராமத்துப் பெண்களில் பெரும்பாலானோர் கெட்ட வார்த்தைகளால் அடுத்தவர்களைத் திட்டுவது சாதாரணமான ஒரு விடயம். ஆனால் என் தாயார் அவ்வாறு செய்வது மிக அபூர்வம். இம்முறை என் தாயாரின் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் சரமாரியாகப் பறந்தன. "பொரிவாள், போக்கறுவாள், ஆட்டக்காறி, தோறை, ஒரு பச்சப் பாலனுக்கு போட்டு இப்பிடி அடிக்க அவளுக்கு எப்பிடித்தான் மனம் வந்துதோ?" என்று சட சடவென்று திட்டுக்களை மழையாகப் பொழிந்தார். எனக்கு ஆச்சரியம் ஒருபக்கம், சந்தோசம் மறுபக்கம். ஆச்சரியம் எதற்கென்றால் எங்கள் வீட்டிலிருந்து பத்துப் பதினைந்து வீடுகள் தள்ளி வசிக்கும் 'செல்லி அக்காவுக்கு' என் அம்மா திட்டுவது கேட்கவா போகிறது? சந்தோசம் எதற்கெனில் அம்மா கூறிய வார்த்தைகளில் எதுவுமே எனக்குப் புரியாவிட்டாலும், அவர் 'செல்லி அக்காவை' சகட்டு மேனிக்குத் திட்டுகிறார் என்பதை புரிந்துகொண்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சியாகும்.
இவ்வாறு ஒருவரை இன்னொருவர் திட்டும்போது நமக்கு 'மகிழ்ச்சி' ஏற்படுவதற்கு உளவியல் காரணம் ஒன்று உள்ளது என்கிறார் உளவியலின் தந்தையாகிய 'சிக்மண்ட் பிராய்ட்' அவர்கள். அதைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
உடனடியாகவே எனக்கு என் தாயாரால் 'கை வைத்தியம்' ஆரம்பிக்கப் பட்டது. ஈர்க்குக் கட்டால் அடி பட்ட பகுதிகளுக்கு 'நல்லெண்ணெய்' தடவப்பட்டது. அம்மா செல்லி அக்காவைத் திட்டியதாலும், என்னை அரவணைத்து 'சிகிச்சை'??? செய்ததாலும் உடம்பில் எனக்கிருந்த நோவு பறந்தே போனது. மதிய உணவை நீண்ட நாட்களுக்குப் பிறகு என் அம்மா எனக்கு ஊட்டிவிட்ட சம்பவமும் அன்றுதான் நடந்தது. என் அண்ணனும், தம்பியும் மேற்படி சம்பவங்களை உன்னிப்பாகக் கவனித்தபின் என்னை ஒரு 'நோயாளிபோல்' ஓரிரு நாட்களுக்கு கவனமாகப் பார்த்துக்கொண்டனர். அவ்வேளைகளில் எல்லாம் 'தொடர்ந்து நோயாளியாக இருந்தால் எவ்வளவு நல்லது? என்று மனம் முட்டாள் தனமாக ஏங்கியதும் உண்டு.
மேற்படி சம்பவத்தினால் இரண்டு பின்விளைவுகள் ஏற்பட்டன.ஒன்று பாலர் வகுப்பில் கல்வி கற்பதற்கு எனக்கு இருந்த கடைசி வாய்ப்பும் இல்லாமல் போனது, இரண்டாவதாக எனது அம்மாவுக்கும் 'செல்லி அக்காவுக்குமிடையில்' இருந்த 'நீண்டகால நட்பில்' ஒரு இடைவெளி அல்லது விரிசல் ஏற்பட்டது. இவ்வாறு ஆசிரியர்கள் அல்லது கல்வி கற்பிப்போர் பிள்ளைகளை 'கண்மண் தெரியாமல்' அடிப்பதற்கு காரணம் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் என்று பின்னாளில் அறிந்துகொண்டேன். அதுவும் ஆசிரியைகள் தமது மாணவர்களை சிறிய தவறுக்குக்கூட கடுமையாகத் தண்டிப்பதற்குக் காரணம் 'மாதவிலக்குக்' காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் 'மன அழுத்தம்'(Menstrual Stress) என பின்னாளில் நான் பணியாற்றிய மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அவர்கள் ஒரு கருத்தரங்கில் குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர்கிறேன்.
(தொடரும்)
உங்கள் கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக