புதன், மே 25, 2011

தாரமும் குருவும் பகுதி 3.8

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 3.8

அன்றைய தினம், என் எதிர்காலத்தின்மீது பாரியதொரு மாறுதலை ஏற்படுத்தப் போகிறதென்பது அப்போது எனக்குத் தெரியாது. அன்றைய தினம் எனக்கு 'உவப்பான தினம்' இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே போலவே அது 'சக்திவாய்ந்த' தினம் என்பதும் நூற்றுக்கு நூறு வீதம் உண்மையாகும்.
மாலை மயங்கும் நேரம் மது மயக்கத்துடன் வீட்டிற்கு வந்துசேர்ந்த தந்தையாரிடம் 'செல்லி அக்கா' என்னை ஈர்க்குக் கட்டால் அடித்த விடயம் எனது அண்ணன், மற்றும் தம்பியால் பிரஸ்தாபிக்கப் பட்டது. அவ்வளவுதான், தமிழில் என்னென்ன தூஷண வார்த்தைகள்(கெட்ட வார்த்தைகள்) உள்ளனவோ அவ்வளவும் என் தந்தையாரின் நாவிலிருந்து புறப்பட்டு வான் அலை வழியே தமது பயணத்தை தொடர்ந்தன. என் தந்தையார் 'மண்டைதீவில்' ஒரு பிரபலமான 'சண்டியன்' அல்ல, ஆனால் 'கோழையும் அல்ல' பெரும்பாலான மண்டைதீவு ஆண்கள் 'சண்டியர்கள்' எனும் வகைப்படுத்தலுக்குள் அடங்கக் கூடியவர்கள். ஒரு காலத்தில் கிருமி நாசினியைக் குடித்துத் 'தற்கொலை' செய்து கொள்ளல், மற்றும் சண்டையில் கத்தி, மற்றும் வாள் போன்ற ஆயுதங்களை உபயோகித்தல் போன்றவற்றால் இந்தக் கிராமம் அடிக்கடி பத்திரிகைச் செய்திகளில் இடம்பெற்றதும் நீங்கள் அறிந்திருக்கக் கூடிய விடயங்களாகும்.
சரி என் தந்தையார் மது போதையில் இருந்தாலும், தகராறு செய்யும் நோக்கில்  உடனடியாக 'செல்லி அக்கா' வீட்டை நோக்கிச் செல்லாததற்கும் காரணம் உள்ளது. இக்கிராம மக்கள் 'சண்டித்தனம்' மிக்கவர்கள் என்று ஏற்கனவே குறிப்பிட்டேன் அல்லவா? ஆனால் இவர்களிடம் உள்ள ஒரேயொரு சிறப்பான குணம் யாதெனில் 'கல்விச் சமூகத்திற்கு' போதுமான மதிப்புக் கொடுத்தல் ஆகும். அது பாடசாலையாக இருக்கட்டும், தனியார் வகுப்பாக(டியூசன்) இருக்கட்டும் அங்கு கற்பிக்கும் 'ஆசிரியருக்கு' உரிய மதிப்பை வழங்கத் தவறுவதே இல்லை. ஆசிரியர்கள் தங்கள் பிள்ளையைக் 'கண்மண் தெரியாமல்' அடித்தாலும், தரக்குறைவாக நடத்தினாலும் அவர்கள் ஏன் என்று கேட்க மாட்டார்கள். இது மண்டைதீவுக்கு மட்டுமின்றி ஏனைய தீவுப்பகுதிக் கிராமங்களுக்கும் பொருந்தும். ஒரு சில விதிவிலக்குகள்(Exception cases) இல்லாமலில்லை. யாழ் மாவட்டத்தின் ஏனைய கிராமங்களின் நிலை எதுவென்பதை நானறியேன்.
இந்த வகையில் 'செல்லி அக்கா' என்ற அந்தப் பெண்மணியுடன் ஏன் என் தந்தையார் சண்டைக்குப் போகவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனாலும் வழமையாக எல்லாப் பெற்றோர்களும்/பெரும்பாலான பெற்றோர்கள் தமது ஆற்றாமையின் காரணமாக தமது வீட்டிலிருந்தபடியே வாத்தியார்களை, டீச்சர்களை ஏசுவதுபோல, எனது தந்தையாரும் வீட்டில் இருந்தபடியே 'செல்லி அக்காவை' கிழி கிழியென்று கிழித்துக் கொண்டிருந்தார்.இடையிடையே எனது அம்மா தன்னிச்சையாக எடுத்த 'முடிவு' (செல்லி அக்காவிடம் என்னைப் படிக்க அனுப்பியது) தோல்வியில் முடிவடைந்ததைப் பற்றி கிண்டல் செய்தும் பேசிக் கொண்டிருந்தார். பொதுவாக ஆண்கள் மதுபோதையில் பேசும் பேச்சுக்களை, கிராமத்துப் பெண்களில் பெரும்பாலானவர்கள் காதில் வாங்குவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் எனது தாயார் சற்று வித்தியாசமானவர். 'குடிக்காமல்' இருக்கும்போது கிட்டத்தட்ட 'ஊமை' போல இருக்கும் எனது தந்தையார் 'சோம பானம், சுர பானம்' போன்றவைகள் வயிற்றிற்குள் சென்றதும் பேசுகின்ற அர்த்தமில்லாத பேச்சுக்களையும் கவனத்தில் கொள்வார்.இது ஒரு 'பலவீனம்' என்பது எனது மதிப்பீடு.
கொஞ்ச நேரம் பொறுமையாக எனது தந்தையாரின் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருந்த எனது தாயார் இறுதியாக "தாசனை(எனது வீட்டுப் பெயர் இதுவாகும்) நான், அம்மா வீட்ட(எனது பேர்த்தியாரின் வீடு) கொண்டுபோய் விட்டுப் படிப்பிக்கப் போறன்" என்று திருவாய் மலர்ந்தருளினார். இதைக் கேட்ட எனக்கு 'வயிற்றில் புளியைக் கரைத்ததுபோல் இருந்தது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக