இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 3.4
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
அப்பா என் அம்மாவிடம் நாளை முதல் என்னைப் படிப்பிக்கின்ற பொறுப்பை ஏற்குமாறு கூறியதற்குப் பல காரணங்கள் உள்ளன.ஒவ்வொரு முறையும் தனது பிள்ளை காணாமல் போகும் வாய்ப்பு இருப்பதால், அதைத் தவிர்க்க விரும்பியவர் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை(உரிய வயது வரும்வரை) என்ற கோழைத்தனமான முடிவை எடுத்திருக்கலாம்.அல்லது என் அம்மா திருமணம் முடித்து, 'மண்டைதீவுக் கிராமத்திற்கு' வாழ்க்கைப்பட்டு வரும்வரை அல்லைப்பிட்டியில் நெசவுத்(துணி நெய்தல்) தொழிலுடன், சிறு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார் என்பதை என் தந்தையார் நன்கு அறிவார். பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் 'தகமையோடு' தாய் வீட்டிலிருக்க, பிள்ளையை அதிக தூரத்திற்குப் பள்ளிக்கு அனுப்புவானேன்? என்று நினைத்திருக்கலாம். அவருக்கு அவ்வாறு 'முடிவு' எடுக்கும்போது ஒரு விடயம் புலப்படவேயில்லை. அஃதாவது 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை', அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், போன்ற 'ஆன்றோர் வாக்குகள் இவ்வுலகில் நீடித்து நிலைத்திருந்தாலும், உலகில் 99% மான பிள்ளைகள் தன் தாயிடம் ஒழுங்காகப் பாடம் படிக்க மாட்டார்கள். இவ்விடத்தில் தாயானவள் தன் பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும்போது 'பாசம்' அல்லது 'கண்டிப்பு' என்ற இரண்டில் ஒன்றை தியாகம் செய்ய வேண்டிய ஒரு 'உணர்வுச் சிக்கல் ஏற்படும். இந்தச் சிக்கலை 'மௌன கீதங்கள்' என்ற திரைப்படத்தில் பாக்கியராஜ் அவர்கள் சிறிதளவு காட்டியிருப்பார். அந்தத் திரைப்படத்தை ஒரு 'முருங்கைக்காய்ச் சமாச்சாரம்' என்ற கோணத்தில் பார்த்தவர்கள், உங்கள் 'பார்வையை' மாற்றிப் பாருங்கள் அத்திரைப்படத்தில் ஒரு அழகான கதை பின்னப்படிருக்கிறது.
என் அம்மா தன் வீட்டு வேலை நேரம் போக மீதமிருந்த நேரங்களில் எனக்குப் பாடம் சொல்லித்தர மறக்கவில்லை. பாலர் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுவனுக்கு அப்படி என்ன பெரிதாகப் படிப்பு இருந்துவிடப் போகிறது.எப்போதும் அ, ஆ, இ எழுதுவதும், ஒன்று இரண்டு என ஆரம்பித்து இருபதுவரை கூறுவது மற்றும் ஒரு சில 'சிறுவர் கதைகள்' இதுதான் எனக்கான என் தாயாரின் 'பாடத்திட்டமாக' இருந்தது. அ, ஆ எழுதுவதற்கு என்னிடமிருந்த ஒரேயொரு சிலேற்றையும் தொலைத்து விட்டேன் அல்லவா? ஆதலால் எனக்குத் தண்டைனையாக, எல்லா ஏழைப் பிள்ளைகளுக்கும் கிடைக்கும் வாய்ப்பாகிய வீட்டு நிலத்தில் கொஞ்சம் மணலைப் பரப்பி விரலால் அ, ஆ எழுதக் கற்றுக் கொடுத்தார் என் தாய். இவ்விடத்தில் ஒரு முக்கியமான தகவலை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். 'தேனிசைச் செல்லப்பாவின்' ஒரேயொரு பாடல், என்னைக் கேட்கும்போதெல்லாம் அழ வைத்தது. "அழகான அந்தப் பனைமரம், அடிக்கடி நினைவில் வரும்" என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? அந்தப் பாடலில் வரும்
"அன்று முற்றத்தில் அழித்து அழித்து - நான்
ஆனா எழுதிய மண்ணல்லவோ!
என்ற வரிகள் காதில் விழும்போதெல்லாம், கண்கள் குளமாகும். எனக்குத்தான் இவ்வாறு ஒரு பாடலைக் கேட்டுக் கண்கள் கலங்கும் அளவிற்கு மென்மையான ஒரு இதயம் என்று நினைத்திருந்த எனக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு ஆச்சரியமான அனுபவம் கிடைத்தது. பெரும்பாலும் 'முரட்டுத் தனத்தை' இயல்பாகக் கொண்ட 'ஜெர்மனியில்' வாழும் எனது 'மாமன்மார்களில்' ஒருவரிடம் பேசும்போது, என்னிடம் பின்வருமாறு கேட்டார்: அடேய் 'அழகான அந்தப் பனை மரம்' பாட்டைக் கேட்டிருக்கிறாயா? நான் "ஆம்" என்று மட்டும் பதிலிறுத்தேன். இறுதியாக ஒரு வாசகம் அவரிடமிருந்து வந்தது, "ஏனோ தெரியவில்லையடா, அந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் அழுகை வருகிறது" அவருக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் விழித்தேன் நான்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக