வியாழன், செப்டம்பர் 30, 2010

மண்ணும், மரமும், மனிதனும் - அத்தியாயம் 1ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பாக, 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் இயக்கத்தில் 'கிழக்குச் சீமையிலே' எனும் பெயரில் திரைப்படமொன்று வெளியாகியது. அது ஒரு கிராமியக் கதையைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படமாக இருந்த போதிலும், தமிழ் ரசிகர்கள் அதற்குப் பேராதரவு நல்கி அதனை வெற்றிப்படமாக்கியிருந்தனர்.
அந்தத் திரைப்படத்தில் பாடல் காட்சியொன்றில், படத்தின் துணைக் கதாநாயகன்(விக்னேஷ்), பல வருடக் கல்லூரி, நகர வாழ்க்கையை முடித்துக்கொண்டு தனது சொந்தக் கிராமத்திற்கு வருவான். அவன் கிராமத்திற்குள் நுழையும்போது ஆற்றங்கரையிலுள்ள மரத்தைப் பார்த்து, நம் ஊரில் அனைவரும் நலமாக உள்ளார்களா? என்று கேட்பதுபோல் அமைந்த:

                     "ஆத்தங்கரை மரமே, அரசமர இலையே!
                      ஆலமரக் கிளையே, அதிலுறங்கும் கிளியே"

என்று தொடங்கும் பாடலில் வரும், பின்வரும் வரிகள், கதாநாயகனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழ்க் குடிமகனுக்கும்/மகளுக்கும் இயற்கையோடு உள்ள அழகான, ஆழமான உறவை வெளிக்காட்டுவதாக அமைந்தன. இதோ அந்த வியத்தகு வரிகள்:

                    "தொட்டபூ இங்கே சுகம்தானா?
                     தொடாத பூவே சுகம்தானா?
                     தோப்புல(தோப்பிலே) ஜோடி(சோடி) மரங்கள் சுகம்தானா?
                     அத்தையும் மாமனும் சுகம்தானா?
                     ஆத்தில மீனும் சுகம்தானா?
                     அன்னமே உன்னையும் என்னையும், சேர்த்து வளர்த்த
                     திண்ணையும் சுகம்தானா?"

என்று கேட்டுக் கதாநாயகன், கதாநாயகியை மட்டும் சுகம் கேட்பதோடு நின்று விடாமல், ஊரிலுள்ள மரங்களையும், இயற்கையையும் சுகம் விசாரிக்க வைத்த, கவிஞர்.வைரமுத்துவின் முத்தான வரிகளுக்கு, மேற்குறிப்பிட்ட வரிகள் சிறிய உதாரணங்கள் மட்டுமே.

பாடலைப் பார்த்து ரசிக்க இங்கே அழுத்தவும்

மேற்படி திரைப்படத்தில் வரும் கதாநாயகனையும், பாடலை எழுதிய கவிஞனையும் போலவே, நாமும் நமது புலம்பெயர் வாழ்வில், எமது மண்ணையும், பசுமை நினைவுகளையும், மறக்க முடியாதவர்களாகவும், ஆனால் புலம்பெயர் நாட்டின் சமூக, பொருளாதார, கலாச்சாரச் சூழலுக்கு முகம் கொடுக்க முடியாதவர்களாகவும், வேதனையிலும், விரக்தியிலும், திண்டாடியே வாழ்கிறோம் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

அந்தத் திரைப்படத்தில், இன்னுமோர் பாடல் காட்சியில், படத்தின் பிரதான கதாநாயகி(ராதிகா) திருமணமாகிப் புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது........................!
(உறவுகள் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. 

புதன், செப்டம்பர் 29, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ், சாதனையாளனா, கொடியவனா? - அத்தியாயம் 2


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
கொலம்பஸின் பெற்றோர்கள் எப்போதுமே தமது கிராமத்துடனும், அதனை அண்டிய தொழில்களிலுமே தமது வாழ்நாட்களைச் செலவிட்டனர். ஆனால் சிறுவன் கொலம்பஸின் அக்கறையும், பொழுதுபோக்குகளும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது. அவன் எப்பொழுதுமே கடற்கரையை அண்டியே விளையாடச் செல்வான். மீனவக் குடும்பத்துச் சிறுவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டான். கடலையும், அதில் மீன்பிடிப்பதற்குச் செல்லுகின்ற, மீன்பிடித்துக்கொண்டு கரைக்குத் திரும்புகின்ற மீன்பிடிப் படகுகளையும், ஆழக் கடலில் செல்லுகின்ற, உள்நாட்டு, வெளிநாட்டு வணிகக் கப்பல்களையும் நீண்டநேரம் பார்த்து ரசித்துக்கொண்டு நிற்பான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து, விரிந்துகிடக்கும் கடலையும், வானத்தையும் நீண்டநேரம், கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு நிற்பது அவனது வழமையான பொழுது போக்குகளில் ஒன்று.
அவனுக்குப் பத்து வயதாகும்வரை, அவன் தனது தாயிடமும், தந்தையிடமும் ஆயிரக்கணக்கான தடவைகள் இரண்டு கேள்விகளைமட்டுமே கேட்டிருக்கிறான். அந்தக் கேள்விகள் இவைதான் 1. இந்த வானம் எங்கே முடிவடைகிறது? 2. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீல நிறமாகக் காட்சியளிக்கும் இந்தக் கடல் எங்கே முடிவடைகிறது? இந்த இரு கேள்விகளுக்கும் விடையாக அவனது பெற்றோர்களிடமிருந்து, பெரும்பாலான நேரங்களில் "உன் வாயை மூடு" என்ற பதிலே கிடைத்தது. ஆனால் விதிவிலக்காகச் சிலவேளைகளில் அவனது தந்தையிடமிருந்து சில வேடிக்கையான பதில்கள் கிடைக்கும். அதாவது அவனது தந்தை மனச்சுமை எதுவும் இல்லாது, ஓய்வாக இருக்கும் தருணங்களில், நகைச்சுவை உணர்வோடு பின்வருமாறு பதிலளிப்பார்: "இந்த நீல வானம் 'வெனிஸ்' நகரத்தில் முடிகிறது, இந்த நீலக்கடல் 'ரோமாபுரியில்' முடிவடைகிறது" என்பார். சிலவேளைகளில் அவனைக் கிண்டல் செய்யும் நோக்கத்தோடு, பதிலை மாற்றுவார். "இந்த வானம் 'மிலான்' நகரத்துடன் முடிகிறது, இந்தக்கடல் 'நேப்பில்ஸ்' நகரத்துடன் முடிகிறது என்பார். ஞாபக சக்தி அதிகமுள்ள சிறுவன் கொலம்பஸை இத்தகைய வெவ்வேறு பதில்கள், குழப்பமூட்டுவதுடன், எரிச்சலூட்டவும் செய்தன. அவன் தந்தையிடம் திருப்பிக் கேட்பான், "அன்று அவ்வாறு சொன்னீர்கள், இன்று இவ்வாறு சொல்கிறீர்களே" என்று. அதற்குத் தகுந்தாற்போல் தந்தையும் பதிலளிப்பார், "அன்று விடை தெரியாததால், தவறாகச் சொன்னேன், இன்று சொன்னது சரியான விடை" என்பார். போதிய புவியியல் அறிவில்லாத அந்த, ஏழைத் தந்தைக்குத் தெரியவில்லை, பின்நாளில் சரித்திரம் படைக்கப்போகும் தன் மகனைத் தனது அறியாமையாலும், வேடிக்கை உணர்வாலும், பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது.

கடற்கரையில் தினமும் விளையாடச் செல்லும் சிறுவன் கொலம்பஸ், அங்கே தினமும் விளையாட வரும், மீனவச் சிறுவர்களில் ஒருவனான 'அன்டோனியோவை' தனது நெருங்கிய நண்பனாக்கிக் கொண்டான். இவர்களிருவரும் தினமும், கடற்கரையில், தண்ணீரில் நனைவதும், நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் சிறிய மீன்பிடிப் படகுகளில் ஏறிப், பின் தண்ணீரில் குதிப்பதும், சிறிய கட்டுமரங்களை எடுத்துக் கடற்கரையோரம் படகுப்பயிற்சி செய்வதும் இப்படியாக அவர்களது விளையாட்டுக்கள் தொடர்ந்தன. ஒருநாள் கொலம்பஸ் தன் நண்பனான அன்டோனியோவை, ஒரு புதிய விளையாட்டுக்கு அழைத்தான், ஆனால் அது உண்மையில் ஒரு விளையாட்டு அல்ல, உயிருக்கே உலை வைக்கும் விஷப்பரீட்சை. இந்த விளையாட்டை இருவரும் சேர்ந்து விளையாடலாமா? என்று சிறுவன் கொலம்பஸ், அண்டோனியோவைக் கேட்டபோது அன்டோனியோ நடுநடுங்கிப் போய்விட்டான்.
(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

செவ்வாய், செப்டம்பர் 28, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு- அத்தியாயம் 2


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்

செட்டிநாட்டு உணவகங்கள் பிரபலமாகக் காரணம் என்ன? செட்டிநாட்டுச்சமையலில் அப்படி என்ன விசேஷம்? இந்தக் கேள்விகளோடு, சிங்கப்பூரில் செட்டிநாட்டு உணவகம் ஒன்றை நடத்திவரும் திரு.பழனிச்சாமி என்பவரை அணுகினேன், ஆனால் அவரது பதில்கள் என்னைப் பெரியளவில் ஆச்சரியப்பட வைக்கவில்லை. அவர் கூறினார், "நாங்கள் எங்கள் சமையலில், சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்கிறோம்" அவரது இந்தப் பதில் என்னைத் திருப்திப் படுத்தவில்லை, நான் அவரிடம் திருப்பிக் கேட்டேன் "பெரும்பாலான உணவகங்கள்  சுத்தத்தைத் தானே கடைப்பிடிக்கிறார்கள்? அவரிடமிருந்து பதில் அமைதியாக வந்தது. "இல்லை அது உங்கள் தவறான பார்வையும், போலித்தோற்றமும்" என்றார். அவர் மேலும் என்னிடம் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு: இலங்கையில், தமிழகத்தில் மட்டுமன்றி, மேற்கத்திய நாடுகளிலும் பெரும்பாலான உணவகங்கள் சுத்தத்திற்கு முக்கியத்துவம் தருவது குறைவு. வாடிக்கையாளர்களின் வரவு இதனால்தான் குறைய ஆரம்பிக்கிறது. இதை வாடிக்கையாளர்கள் நன்கு அறிவார்கள். எந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறதோ, அங்கு சுவை மட்டுமின்றி சுத்தமும் மேம்பட்டதாயிருக்கிறது  என்று அர்த்தம்.
அப்படியில்லாவிட்டால் ஒரேயொரு விதிவிலக்கு மட்டும் உண்டு, அதாவது, அந்த உணவகங்களுக்கு அருகில் வேறெந்த உணவகங்களும் இல்லாமல் இருந்தால் 'வேறு வழியில்லாமல்' அந்த உணவகத்தை மக்கள் தேர்வு செய்வார்கள். அப்படியானால் செட்டிநாடு உணவகங்கள் எல்லாமே சுத்தத்திற்கு முதலிடம் கொடுப்பவையா? இதுதான் நான் அவரிடம் கேட்ட அடுத்த கேள்வி.
(அடுத்த வாரமும் தொடரும்)உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

திங்கள், செப்டம்பர் 27, 2010

நாடுகாண் பயணம் - அல்பேனியா

நாட்டின் பெயர்:
அல்பேனியா

முழுப் பெயர்:
அல்பேனியக் குடியரசு.

அமைவிடம்:
தென் கிழக்கு ஐரோப்பா.

தலைநகர்:
டிரானா.

நாட்டு எல்லைகள்:-
வடமேற்கு - மொண்டநிகிரோ.
வடகிழக்கு - கொசவோ.
கிழக்கு - மசிடோனியா.
தெற்கு, தென்கிழக்கு - கிரேக்கநாடு.

நாட்டு மொழிகள்:
அல்பேனியன்(பெரும்பான்மை)
கிரேக்கம், மசிடோனியன்(சிறுபான்மை)

சமயம்:
70% முஸ்லீம்கள்,
20% கீழைத்தேயப் பழமைவாத முஸ்லீம்கள்,
10% ரோமன் கத்தோலிக்கம்.

கல்வியறிவு:
85%

சனத்தொகை:
3195000 (ஏறக்குறைய)

நாட்டின் பரப்பளவு:
28748 சதுர கிலோமீட்டர்கள்.

அரசாங்கமுறை:
பாராளுமன்றக் குடியரசு.

ஜனாதிபதி:
பாமிர் தோபி.

பிரதமர்:
சாலி பெரிஸா.

நாணயம்:
லெக்(அல்பேனியன் லெக்)

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-355

ஒட்டோமான் இராச்சியத்திடமிருந்து(முன்னாள் துருக்கி) விடுதலை பெற்ற திகதி: 28.11.1912

இந்நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருட்கள்:
கோதுமை, தானியங்கள், புகையிலை, அத்திப்பழம்.

கனியவளங்கள்:
சிறிய அளவில் பெற்றோலியம், சிறிய அளவில் எரிவாயு, சிறிய அளவில் இரும்பு மற்றும் செம்பு.

சரித்திரக்குறிப்பு:
இந்நாடு துருக்கியைத் தலைமையகமாகக் கொண்ட ஒட்டோமான் இராச்சியத்தின் ஆளுகைக்குள் 500 ஆண்டுகள் உட்பட்டிருந்தது.

இந்நாடு ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஒருசில வறிய நாடுகளுள் ஒன்று. இருப்பினும், கடந்த 28.04.2009 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில்(EU) உறுப்பினராவதற்கு விண்ணப்பித்துள்ளது.

சனி, செப்டம்பர் 25, 2010

முதற் பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 2

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
அந்த டேனிஷ் பொருளியல் நிபுணர் கூறியது இதுதான்: "உங்களுக்கு வருடாந்தம் லொத்தரில் மூவாயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசு விழவேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்; உங்களுக்கு எப்போதெல்லம் லொத்தர் வாங்கவேண்டுமென்று ஆவல் ஏற்படுகிறதோ, அந்தத் தொகையை (நீங்கள் பரிசுச் சீட்டு வாங்க நினைக்கும் தொகையை) உண்டியலில் போட்டுச் சேமியுங்கள், மற்றும் மூன்று விடயங்களில் மிக, மிக, மிகச் சிக்கனமாக இருங்கள். அவையாவன: 
1. தண்ணீர்,
2. சுடுதண்ணீர்(அல்லது வீட்டின் வெப்பமேற்றிகள்), 
3. உங்கள் வீட்டுத்தேவைக்கு நீங்கள் உபயோகிக்கும் மின்சாரம்.


இந்த மூன்று விடயங்களிலும் நீங்கள் சிக்கனமாக இருந்தால், கடந்த வருடம் நீங்கள் உபயோகித்த மேற்படி வளங்களுக்காக செலுத்திய அதே தொகையை இவ்வருடமும் நீங்கள் செலுத்தியிருந்தால், எதிர்வரும் வருடத்தில் தண்ணீர், மின்சாரம், சுடுதண்ணீர் (அல்லது வெப்பமேற்றி) போன்றவற்றை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து உங்களுக்குத் திரும்பிவரும் தொகையுடன், நீங்கள் ஏற்கனவே உண்டியலில் சேர்த்த பணத்தொகையையும் சேர்த்தால், உறுதியாக உங்கள் கையில் மூவாயிரம் அமெரிக்க டொலர்கள் சேர்ந்திருக்கும் என்று அடித்துக் கூறுகிறார் அந்தப் பொருளியல் நிபுணர். சிக்கனமாக இருப்பதற்குப் பொருளியல் நிபுணரிடம் ஆலோசனை கேட்கவேண்டிய அவசியமில்லை என்று கருதுவோருக்கும், சிக்கனம் என்றாலே கஞ்சத்தனம்தான் என்று கருதுவோருக்கும், இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்வோருக்கும் ஒரு உண்மைச் சம்பவத்தைக் குட்டிக் கதையாகக் கூற விரும்புகிறேன்.


சிக்கனம் வேறு, கஞ்சத்தனம் வேறு
அவர் ஒரு அமெரிக்கத் தொழிலதிபர், அமெரிக்காவின் லூசியான மாநிலத்தில், அவருக்குத் தொழிற்சாலைகளும், வணிக வளாகங்களும் உள்ளன. ஒருநாள் மாலை நேரத்தில் அவரைச் சந்திக்கவென்று நான்குபேர் வந்திருந்தனர். அவர்கள் தொழிலதிபரைச் சந்திக்க வந்த நோக்கம் இதுதான்; அதாவது அவ்வூரில் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் ஒரு வறிய, சிறுவர் பாடசாலைக்கு ஒரு கட்டிடம் கட்டுவதற்குத் தொழிலதிபரிடம் நிதியுதவி கேட்கும் நோக்கத்திலேயே நற்பணி மன்றத்தைச் சேர்ந்த அந்த நான்கு பெரும் வந்திருந்தனர். நான்கு பேரையும் வாசலில் வந்து வரவேற்ற தொழிலதிபர், அவர்களை விருந்தினர் அறையில் அமர வைத்தபின் பின்வருமாறு கூறினார்; "அனைவரும் சிறிது அமர்ந்து கொள்ளுங்கள், வாசலிலும், நடுக்கூடத்திலும் எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்குகளை அணைத்துவிட்டு வருகிறேன்" என்று கூறி எழுந்து சென்றார். அவ்வளவுதான், வந்தவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. "இவ்வளவு கஞ்சனாக இருக்கிறாரே, சொற்ப மின்சாரத்திற்குக் கணக்குப் பார்க்கும் இவரா நமக்கு நிதி தரப்போகிறார்" என்று எண்ணி நால்வரும் மனம் சோர்ந்துபோய் விட்டனர். விளக்குகளை அணைத்துவிட்டுத் திரும்பி வந்த தொழிலதிபர் அவர்களோடு அமர்ந்திருந்து அவர்கள் சொல்வதை எல்லாம் மிகவும் கவனத்தோடு கேட்டபின்னர், நம்பினால் நம்புங்கள் , தனது காசோலைப் புத்தகத்தை எடுத்து ஐம்பதினாயிரம் அமெரிக்க டொலர்களுக்கான காசோலையை எழுதி அவர்களிடம் கொடுத்தார்.
இப்போது சொல்லுங்கள் கஞ்சத்தனம் என்பதும், சிக்கனம் என்பதும் ஒன்றா? அல்லது வேறு வேறா?
(அடுத்தவாரம் தொடரும்) 

 பிற்குறிப்பு:- உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

'எந்தக் குழந்தையும்'


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 
"மனம் முழுக்க வேதனைகளும், சஞ்சலங்களும் சூழ்ந்திருக்கும் தருணங்களில் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் கண்களை மூடி, நம் குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்த்தோமேயானால், எவ்வளவு மகிழ்ச்சி, எவ்வளவு புத்துணர்ச்சி பிறக்கிறது! குழந்தைப் பருவத்தில் நாம் வாழ்ந்த இனிய நாட்கள் எம்மைவிட்டு எங்கே போயின? அப்பழுக்கற்ற, மாசு மருவற்ற நம் குழந்தைப் பருவம் காலப்போக்கில் சிதைந்து, பலரின் ஆளுகைக்கும், அடக்குமுறைக்கும் உட்பட்டு கவலை இல்லாத, கபடமில்லாத எம் குழந்தைப் பருவ வாழ்வு எம்மிடமிருந்து எம்மைச் சுற்றியிருப்பவர்களாலேயே பறிக்கப்பட்டுவிடுகிறது"


அன்பார்ந்த வாசக உள்ளங்களே! நான் இந்தத் தொடரை எழுதப் புகுந்தமைக்குக் காரணங்கள் உள்ளன. நாம் அந்திமாலையின் உருவாக்கம் சம்பந்தமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடியபோது நான் அவர்களிடம் முன்வைத்த கேள்வி இதுதான். அதாவது "அந்திமாலையின் பக்கங்களை எப்படிப்பட்ட கட்டுரைகள் நிரப்பியிருக்க வேண்டும்"? என்பதுதான். இதில் பலரும் பல ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்தார்கள். இவர்களில் அந்திமாலையின் வாசகரும், எமது உறவினருமாகிய, டென்மார்க், ஸ்கெயான் (Skjern) நகரத்தில் வாழும் திரு.சி.சக்திதாசன் அவர்கள் எம்மிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். சகல அம்சங்களும் அந்திமாலையில் இடம்பெறவேண்டும், ஆனால் 'குழந்தை வளர்ப்பு பற்றிய அறிவூட்டல் கட்டுரைகள் இடம்பெறுதல் அவசியம்' என்று தான் கருதுவதாகக் கூறியிருந்தார். அவரது கருத்துக்கும், ஏனைய வாசகர்கள் சிலரது கருத்துக்கும் மதிப்பளித்து, புலம்பெயர் சமுதாய வாழ்வில் பாரியதொரு சவாலாக விளங்கும் இந்தக் குழந்தை வளர்ப்புப் பற்றியும் ஆராய முற்படுகிறேன்.

மனிதவாழ்க்கையின் பல கட்டங்களில் 'குழந்தைப்பருவமே' மிக முக்கியமானது என்பது மானுடவியல் ஆய்வாளர்கள் தொடங்கி சாதாரண மக்கள்வரை உள்ள அடிப்படைக் கருத்தியலாகும். சரி, குழந்தைப்பருவம் ஏன் முக்கியமானது? இந்தக் கேள்விக்கு விடைகாணுவதற்கு முன்னர், நமது நவீன காலத்தில் வாழ்ந்த, வாழ்ந்துவருகின்ற கவிஞர்களிலேயே, குழந்தைப்பருவத்தைப் பற்றியும், அதன் அதி முக்கியத்துவத்தைப் பற்றியும் நூற்றுக்கணக்கில் பாடல்கள் எழுதிய, இப்போதும் எம்மத்தியில் வாழ்ந்து வருகின்ற, நம்மில் பலரால் மறக்கப் பட்டுவிட்ட ஒரு கவிஞனை  உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அவர்தான் கண்ணதாசனுக்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்ற பாடல்களை எழுதிய கவிஞர் 'புலமைப்பித்தன்'. அவர் எழுதிய பாடல்களிலேயே, ஒவ்வொரு பெற்றோருக்கும் பாடமாகவும், வேதமாகவும் அமையவேண்டிய பாடலொன்றைப் பற்றிப் பார்ப்போம். அந்தப்பாடலை வாழ்வில் கேட்டிருந்தும், மறந்தவர்களுக்காகவும், பாடலை ஒருதடவை கூடக் கேட்கும் பாக்கியத்தை இழந்தவர்களுக்காகவும் அந்தப் பாடல் வரிகளை அப்படியே எழுத்தில் தருகிறேன். அப்பாடலை எழுதிய ஒப்பற்ற கவிஞனைக் கௌரவிக்கும் ஒரு முயற்சியாக அந்தப் பாடலிலுள்ள இரண்டு வார்த்தைகளையே எனது கட்டுரைத் தொடருக்குத் தலைப்பாகவும் வைத்துள்ளேன். இதோ உங்களுக்காக அந்தப் பாடல் வரிகள்:

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத் 
தொட்டிலில் கட்டி வைத்தேன்-அதில்
பட்டுத்துகிலுடன் அன்னச்சிறகினை மெல்லென இட்டுவைதேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட-இன்னும்
யாராரோ வந்து பாராட்ட                       (இந்தப் பச்சைக்...)

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் 
மண்ணில் பிறக்கையிலே-பின்
நல்லவராவதும் தீயவராவதும் 
அன்னை வளர்ப்பதிலே 
அன்னை வளர்ப்பதிலே                                               (நான் ஆராரோ...)

தூக்க மருந்தினைப் போன்றவை பெற்றவர் 
போற்றும் புகழுரைகள் -நோய் 
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர் 
கூறும் அறிவுரைகள்                          (நான் ஆராரோ...)

ஆறு கரையில் அடங்கி நடந்திடில் 
காடு வளம் பெறலாம்                                                  (ஆறு கரையில்...)
தினம் நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில் 
நாடும் நலம் பெறலாம்                         
நாடும் நலம் பெறலாம்                        (நான் ஆராரோ...)

பாதை தவறிய கால்கள் விரும்பிய 
ஊர்சென்று சேர்வதில்லை                                          (பாதை தவறிய)
நல்ல பண்புதவறிய பிள்ளையைப் பெற்றவள் 
பேர்சொல்லி வாழ்வதில்லை
பேர்சொல்லி வாழ்வதில்லை              (இந்தப் பச்சைக்கிளிகொரு...)

பிள்ளை வளர்ப்பைப் பற்றித் தற்காலப் பெற்றோர்கள் நீதி நூல்கள் எதனையும் படிக்க வேண்டியதில்லை, எந்த உளவியல் கையேடுகளையும் புரட்ட வேண்டியதில்லை. இதோ மேலேயுள்ள பாடல் வரிகளை மட்டும் மனதில் வரிக்கு வரி, இடைவிடாமல் பதிய வைத்துக் கொண்டாலே போதுமானது. அந்த அளவுக்கு மிகவும் அழகிய, எளிமையான தமிழில் பாடல் என்ற பெயரில் ஒரு மாபெரும் தத்துவத்தையே நமக்குத் தந்திருக்கிறார் அந்த ஈடு இணையற்ற கவிஞர்.    
(அடுத்த வாரமும் தொடரும்) 
                               


புதன், செப்டம்பர் 22, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் - சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 1
ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 
"அமெரிக்காவைக் கண்டுபிடித்த காவிய நாயகன்",  "இந்தியாவை மேற்குப்பக்கக் கடலாலும் சென்றடையலாம் என்று கண்டுபிடித்த தலைசிறந்த சிந்தனையாளன்", "அமெரிக்கா என்ற தலைசிறந்த தேசம் உருவாகக் காரணமான சிற்பி",  "ஐரோப்பியர்களைத் தலைநிமிர வைத்த போற்றுதலுக்குரிய தலைசிறந்த கடலோடி" இவ்வாறு நூற்றுக் கணக்கில் நீண்டுகொண்டே செல்கிறது அவரைப்பற்றிய புகழாரம். சரி இவ்வாறெல்லாம் புகழ்மாலை சூட்டப்படும் அந்தக் கொலம்பஸ் யார்? இத்தகைய புகழைப் பெற அவர் செய்த சாதனைதான் என்ன? அவரது வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?


பதினான்காம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர்களுடைய 'பொற்காலம்' ஆரம்பமாகிறது என்று சொல்லலாம். ஏனெனில் 14 ஆம் நூற்றாண்டுவரை சிறு,சிறு தொழில்களும், தமது அண்டை நாடுகளுடன் சிறு,சிறு யுத்தங்களும் செய்துகொண்டு வாழ்ந்த ஐரோப்பியர்கள், 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் நாடு காண் கடல் பயணங்களையும், நாடுபிடிக்கும் கடல் பயணங்களையும் ஆரம்பித்தனர்.


நம் கட்டுரையின் நாயகன் கிறிஸ்தோபர் கொலம்பஸ் 25 ஆகஸ்ட் தொடங்கி 31 ஒக்டோபருக்கு இடைப்பட்ட காலத்தில் 1451 ஆம் ஆண்டில் அப்போதைய ஜினோவா குடியரசில் (தற்போதைய இத்தாலியின் ஒரு நகரம்) பிறந்தார். (இவரது பிறந்த திகதி பற்றிய ஊகத்தின் அடிப்படையிலான பதிவுகளே கிடைக்கப் பெற்றுள்ளது) இவர் பிறந்த ஆண்டு பற்றி மட்டுமே சரியான வரலாற்றுத் தகவல்கள் கிடைத்துள்ளன. கொலம்பஸின் தந்தையாரின் பெயர் டொமினிக்கோ கொலம்போ என்பதாகும், அவர் ஒரு நெசவுத் தொழிலாளியாவார். தாயாரின் பெயர் சுசானா போன்டனா ரோசா என்பதாகும். இவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். இவர்களில் மூத்தவரே கொலம்பஸ் ஆவார்.


கொலம்பஸ் தனது தாய் மொழியைக் கற்றதுமில்லை, பேசியதுமில்லை, பள்ளிப் படிப்பிலும் போதிய ஆர்வம் காட்டியதுமில்லை, ஆனால் அவர் தனது 10 ஆவது வயதில் செய்த ஒரு சாகசமே அவரது எதிர்காலச் சாதனைக்குக் கட்டியம் கூறியது.   


(அடுத்த வாரமும் தொடரும்)  செவ்வாய், செப்டம்பர் 21, 2010

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 1

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 
தமிழ்த் திரையிசைப் பாடல்களில் கதாநாயகன், கதாநாயகிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களே அதிகம். இவற்றில் உணவைப்பற்றிப் புகழ்ந்தோ, அன்றேல் வியந்தோ பாடப்பட்ட பாடல்கள் மிகக் குறைவு. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இவ்வாறு 'சாப்பாட்டைப்பற்றி' பாடப்பட்ட பாடல்களில் இரண்டு பாடல்கள் ரசிகர்களால் முக்கியத்துவம் கொடுத்து ரசிக்கப்பட்டது மட்டுமன்றி, அவை ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தும் விட்டன. முதலாவது பாடல் கறுப்பு, வெள்ளைத் திரைப்படமாகிய 'மாயா பஜார்' திரைப்படத்தில் இடம்பெற்ற "கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்" என்ற பாடல். இரண்டாவது பாடல் கலர்த் திரைப்படக் காலத்தில் வெளிவந்த 'முள்ளும் மலரும்' திரைப்படத்தில் இடம்பெற்ற "நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்தரிக்கா" என்ற பாடலாகும்.

இதில் முதலாவது பாடலானது, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த போதும், பெரிய அளவில் அடித்தட்டு மக்களையும் சென்றடையவில்லை. அதற்குக் காரணமாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். அந்தப் பாடலில் பெரும்பாலும் இனிப்பு வகைகளும், பலகார வகைகளுமே இடம்பிடித்திருந்தன. அப்பாடலில் குறிப்பிடப்பட்ட இனிப்பு வகைகளும், பலகார வகைகளும் பணக்காரர்களால் மட்டுமே உண்ணப்பட்ட பதார்த்தங்களாக இருந்தன. மற்றும் அப்பாடல் பாடப்பட்ட விதம் கிராமிய மக்களையும் சென்றடையும் வகையில் அமைந்திருக்கவில்லை.
ஆனால் இரண்டாவது பாடலானது மிகப்பெரிய அளவில் படித்தவர், பாமரர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டும், வாயால் அடிக்கடி உச்சரிக்கப்பட்டும், ரசிக்கப்பட்டும் நினைவில் கொள்ளப்பட்டது. அதற்குக் காரணமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:- முதலாவதாக அது பாடப்பட்ட கிராமிய மெட்டு, பாடலைப் பாடிய வாணி ஜெயராமின் மதுரமான குரல், அந்தத் திரைப்படத்தில் நடித்திருந்த, ஆனால் ஒருசில வருடங்களுக்கு முன்  தமிழ் மக்களுக்கு அறிமுகமாகியிருந்த  நடிகர் ரஜினிகாந்த், மற்றும் பாடலில் வியந்து போற்றப்பட்ட, சாதாரண மக்களின் நாளாந்த உணவுகள் போன்றவை பாடலைக் கேட்போரைக் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை.

சரி, பாடலின் வெற்றியைப் பார்த்தோம், பாடலின் கவிஞரை, அவர்தம் சொல்லாட்சியைப்  பார்க்க வேண்டாமா? பாடலை எழுதிய கவியரசு கண்ணதாசன் தமிழ் நாட்டில் காரைக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பிறந்த இந்தக் காரைக்குடி, மற்றும் சிவகங்கைப் பகுதிகள் 'செட்டிநாடு' என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. ஆங்கிலேயர் காலம்தொட்டு இன்றுவரை தமிழ்நாட்டிலும், இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் வியாபாரத்தில் 'கொடிகட்டிப் பறப்பது' இந்தச் 'செட்டியார்' என்ற சமுதாயப் பிரிவினரே.
இந்தப் பிரிவினர் வியாபாரத்தில் மட்டும் வெற்றி பெற்ற மக்கட் பிரிவாக இருக்கவில்லை. "ஆம், நீங்கள் நினைப்பது சரியே"., இவர்கள் 'உண்போரை மயக்கும்' சுவையான உணவுகளைச் சமைக்கும் அற்புதமான சமையல் கலையிலும் வல்லுனர்கள்.
தமிழ் நாட்டில் மட்டுமின்றி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் வரை இவர்களது சமையல் கலையும், 'செட்டிநாடு உணவகங்களும்' மிகவும் பிரபலம். அண்மைக் காலங்களில் அமெரிக்காவிலும் ஏன் ஐரோப்பிய நாடுகளிலும் செட்டிநாடு உணவகங்கள் தோன்றிவிட்டன. எல்லாம் சரி, இவர்களது சமையலில் அப்படி என்ன விசேஷம்? இவர்களது உணவகங்கள் பிரபலமாகக் காரணம் என்ன?
(அடுத்தவாரம் தொடரும்) 

திங்கள், செப்டம்பர் 20, 2010

நாடுகாண் பயணம் - ஆப்கானிஸ்தான்


நாட்டின் பெயர்:
ஆப்கானிஸ்தான்

முழுப்பெயர்:
ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு

அமைவிடம்:
ஆசியாக் கண்டம்

தலைநகர்:
காபூல்

நாட்டு எல்லைகள்:
வடக்கு - தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்.
தெற்கு - பாகிஸ்தான்
வடகிழக்கு - சீனா
மேற்கு - ஈரான்

நாட்டு மொழிகள்:
தாரி(பாரசீகம்), பஸ்தோ.

ஜனாதிபதி: கமீட் கர்சாய்

நாட்டின் பரப்பளவு: 647 500 சதுர கிலோ மீட்டர்.

சனத்தொகை:
1 கோடியே 30 லட்சம் (அண்ணளவாக)

நாணயம்:
ஆப்கானி

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு ஆரம்பிக்கும் எண் : 0093 -

இந்த நாடு பின்வரும் பொருட்களுக்கு பிரபலமானது:
மாதுளம்பழம், திராட்சை, போதை 
வஸ்துக்கள், கம்பள விரிப்புக்கள்.

இந்நாட்டில் கனிய வளங்களாக : சிறிய அளவில் இயற்கை எரிவாயுவும், பெற்றோலியமும், நிலக்கரியும், மிகச்சிறிய அளவில் தங்கம், செப்பு, இரும்பு போன்றவையும் காணப்படுகின்றன.

சரித்திரக்குறிப்பு: இந்தியச் சரித்திரத்தைப் படிக்கின்ற மாணவர்கள் ஆப்கானிஸ்தானை மறக்கவே மாட்டார்கள் ஏனெனில் இந்தியாவின்மீது 22 தடவை படையெடுத்த 'கஜினி முஹம்மது' என்ற அரசன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவன்.

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலையாகிய 'பாமியான் புத்தர்சிலை' இந்நாட்டில்தான் இருந்தது, ஆனால் அது 2001 ஆம் ஆண்டில் தலிபான்களால் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது.
ஆப்கானிஸ்தானில் "பயங்கரவாதத்தை ஒழிக்க" என்ற நோக்கத்தோடு 22 நாடுகளைச் சேர்ந்த 1 லட்சம் (அண்ணளவாக) நேட்டோ படைகள் 2001 ஆம் ஆண்டிலிருந்து நிலைகொண்டுள்ளனர்.


ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

உங்கள் முன்னால் நான்

இனிய உறவுகளே வணக்கம், எமது இந்த இணையப்பக்கத்தில் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். பாடசாலையில் படித்த காலத்தில் பகுதிநேர நிருபராக பணியாற்ற வாய்ப்புக் கிடைத்த கணப்பொழுதுகளில் என் மனதில் உதித்த ஆவல் சுமார் இருபது வருடங்களின் பின்னர் செயலாக மலர்கிறது. ஐரோப்பிய மண்ணில் கால் வைத்த காலப்பகுதியிலும் என் மனதை விட்டகலாத "ஒரு பத்திரிகை நடத்த வேண்டும்" என்ற கனவு, புலம்பெயர் மண்ணில் தமிழ் பத்திரிகைகள் செல்வாக்கிழந்து சென்றதாலும்,  இணையத்தளங்கள் அந்த இடத்தைப்  பிடித்துக் கொண்டதாலும் 'இணையம்'  ஆரம்பிக்க வேண்டும் என்ற லட்சியமாக மாறியது. இந்த இலட்சியத்தினை எட்டுவதற்கு, போதிய வாய்ப்புக்கள் வரும்வரை நான் ஏழு வருடங்கள் காத்திருந்தேன். சகல அம்சங்களும், உதவிகளும் கைகூடி வந்த இந்த இனிய தருணத்தில் 'அந்திமாலை' என்ற பெயருடன் இவ் இணையத்தளத்தினை உங்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன். 
எனது ஆவலைப் பூர்த்தி செய்ய இடமளித்த கூகிள் நிறுவனத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகுக. இணையம் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கியபோது ஏற்பட்ட சந்தேகங்களுக்குத் தயங்காமலும், நல்லுள்ளத்தோடும் விளக்கமும் ஆலோசனையும் வழங்கிய என் இனிய இணையநண்பன் நெதர்லாந்துவாழ் கலையரசனுக்கும், கணனித் தொழில் நுட்பத்தில் உதவிகள் வழங்கி வரும் என் இனிய தோழி பிருந்தா இராமலிங்கத்திற்கும் எனது உளமார்ந்த நன்றிகள் .
அறிவுப்பசியோடு இந்தப்பக்கத்தில் வருகை தந்திருக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும், எதிர்காலத்தில் ஆக்கங்களையும், ஆலோசனைகளையும் வழங்க காத்திருக்கும் படைப்பாளிகளுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.  


மிக்க அன்புடன் 
 இ.சொ.லிங்கதாசன்

வியாழன், செப்டம்பர் 16, 2010

முதல் பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 1

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்இலங்கையில் இனப்பிரச்சினை தீவிரமடைந்த காலத்திற்கு முன்பாகவுள்ள காலப்பகுதியில் இலங்கையின் பெரிய நகரங்களில் தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று ஒலிபெருக்கி ஒன்றைக் கட்டிக்கொண்டுலொத்தர் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்திருக்கும். அந்த வாகனத்தில் இருந்து வரும் விளம்பரம் இதுதான் "நாளை மறுதினம் நீங்கள் காரில் செல்லலாம், ஆனால் உங்கள் முதலீடு ஒரு ரூபாய் மட்டுமே". இந்த விளம்பரத்தை கேட்கும் சாதாரண பொது மக்களில் பலரும் "போனால் போகிறது ஒரு ரூபாய் தானே" என்று நினைத்துக்கொண்டு ஒரு லொத்தர் சீட்டை வாங்குவர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு விடயம் நினைவுக்கு வருவதே இல்லை அதாவது தம்மைப்போல் லொத்தர் வாங்குகின்ற பல லட்சம் பேர்களில்(ஆகக் குறைந்தது ஐந்து லட்சம் பேர்கள் ) ஒரே ஒருவருக்கு மட்டுமே 'ஒரு லட்சம் ரூபாய்' பரிசு கிடைக்கப் போகிறது என்பது. சரி அப்படியே நம் புலம்பெயர் சமுதாயத்திற்கு வருவோம், நம்மிலும் ஒரு குறிப்பிட்ட தொகையினர் அடிக்கடி பரிசுச் சீட்டு வாங்குகின்ற வழக்கம் உள்ளவர்கள். இங்கு வெளி நாடுகளில்  இலங்கைஇந்தியப் பரிசுச் சீட்டுகளுடன் ஒப்பிடுகையில் பரிசுத் தொகையும், பரிசுச் சீட்டின் விலையும் மிக அதிகம். ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகவேண்டும் என்ற பேராசைநம்மைப் போல் மேற்கத்திய நாட்டவர்களுக்கும் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மைஆனால் அவர்கள் இதனை ஒரு குறைந்த இழப்புள்ள சூதாட்டமாக நினைத்து விளையாடுகிறார்கள்ஆனால் நாமோ பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே முதல் பரிசு என்ற சராசரிக் கணக்கை அறியாமலே முதலீடு செய்து அடிக்கடி தோற்றுப் போகிறோம். இதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்த வேளையில் ஒரு டேனிஷ் பொருளியல் நிபுணரின் கூற்று எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. அவர் கூறுகிறார் "உங்களுக்கு வருடாந்தம் லொத்தரில் மூவாயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசு விழவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்...
(அடுத்தவாரம் தொடரும் )