சனி, செப்டம்பர் 25, 2010

'எந்தக் குழந்தையும்'


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 
"மனம் முழுக்க வேதனைகளும், சஞ்சலங்களும் சூழ்ந்திருக்கும் தருணங்களில் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் கண்களை மூடி, நம் குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்த்தோமேயானால், எவ்வளவு மகிழ்ச்சி, எவ்வளவு புத்துணர்ச்சி பிறக்கிறது! குழந்தைப் பருவத்தில் நாம் வாழ்ந்த இனிய நாட்கள் எம்மைவிட்டு எங்கே போயின? அப்பழுக்கற்ற, மாசு மருவற்ற நம் குழந்தைப் பருவம் காலப்போக்கில் சிதைந்து, பலரின் ஆளுகைக்கும், அடக்குமுறைக்கும் உட்பட்டு கவலை இல்லாத, கபடமில்லாத எம் குழந்தைப் பருவ வாழ்வு எம்மிடமிருந்து எம்மைச் சுற்றியிருப்பவர்களாலேயே பறிக்கப்பட்டுவிடுகிறது"


அன்பார்ந்த வாசக உள்ளங்களே! நான் இந்தத் தொடரை எழுதப் புகுந்தமைக்குக் காரணங்கள் உள்ளன. நாம் அந்திமாலையின் உருவாக்கம் சம்பந்தமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடியபோது நான் அவர்களிடம் முன்வைத்த கேள்வி இதுதான். அதாவது "அந்திமாலையின் பக்கங்களை எப்படிப்பட்ட கட்டுரைகள் நிரப்பியிருக்க வேண்டும்"? என்பதுதான். இதில் பலரும் பல ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்தார்கள். இவர்களில் அந்திமாலையின் வாசகரும், எமது உறவினருமாகிய, டென்மார்க், ஸ்கெயான் (Skjern) நகரத்தில் வாழும் திரு.சி.சக்திதாசன் அவர்கள் எம்மிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். சகல அம்சங்களும் அந்திமாலையில் இடம்பெறவேண்டும், ஆனால் 'குழந்தை வளர்ப்பு பற்றிய அறிவூட்டல் கட்டுரைகள் இடம்பெறுதல் அவசியம்' என்று தான் கருதுவதாகக் கூறியிருந்தார். அவரது கருத்துக்கும், ஏனைய வாசகர்கள் சிலரது கருத்துக்கும் மதிப்பளித்து, புலம்பெயர் சமுதாய வாழ்வில் பாரியதொரு சவாலாக விளங்கும் இந்தக் குழந்தை வளர்ப்புப் பற்றியும் ஆராய முற்படுகிறேன்.

மனிதவாழ்க்கையின் பல கட்டங்களில் 'குழந்தைப்பருவமே' மிக முக்கியமானது என்பது மானுடவியல் ஆய்வாளர்கள் தொடங்கி சாதாரண மக்கள்வரை உள்ள அடிப்படைக் கருத்தியலாகும். சரி, குழந்தைப்பருவம் ஏன் முக்கியமானது? இந்தக் கேள்விக்கு விடைகாணுவதற்கு முன்னர், நமது நவீன காலத்தில் வாழ்ந்த, வாழ்ந்துவருகின்ற கவிஞர்களிலேயே, குழந்தைப்பருவத்தைப் பற்றியும், அதன் அதி முக்கியத்துவத்தைப் பற்றியும் நூற்றுக்கணக்கில் பாடல்கள் எழுதிய, இப்போதும் எம்மத்தியில் வாழ்ந்து வருகின்ற, நம்மில் பலரால் மறக்கப் பட்டுவிட்ட ஒரு கவிஞனை  உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அவர்தான் கண்ணதாசனுக்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்ற பாடல்களை எழுதிய கவிஞர் 'புலமைப்பித்தன்'. அவர் எழுதிய பாடல்களிலேயே, ஒவ்வொரு பெற்றோருக்கும் பாடமாகவும், வேதமாகவும் அமையவேண்டிய பாடலொன்றைப் பற்றிப் பார்ப்போம். அந்தப்பாடலை வாழ்வில் கேட்டிருந்தும், மறந்தவர்களுக்காகவும், பாடலை ஒருதடவை கூடக் கேட்கும் பாக்கியத்தை இழந்தவர்களுக்காகவும் அந்தப் பாடல் வரிகளை அப்படியே எழுத்தில் தருகிறேன். அப்பாடலை எழுதிய ஒப்பற்ற கவிஞனைக் கௌரவிக்கும் ஒரு முயற்சியாக அந்தப் பாடலிலுள்ள இரண்டு வார்த்தைகளையே எனது கட்டுரைத் தொடருக்குத் தலைப்பாகவும் வைத்துள்ளேன். இதோ உங்களுக்காக அந்தப் பாடல் வரிகள்:

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத் 
தொட்டிலில் கட்டி வைத்தேன்-அதில்
பட்டுத்துகிலுடன் அன்னச்சிறகினை மெல்லென இட்டுவைதேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட-இன்னும்
யாராரோ வந்து பாராட்ட                       (இந்தப் பச்சைக்...)

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் 
மண்ணில் பிறக்கையிலே-பின்
நல்லவராவதும் தீயவராவதும் 
அன்னை வளர்ப்பதிலே 
அன்னை வளர்ப்பதிலே                                               (நான் ஆராரோ...)

தூக்க மருந்தினைப் போன்றவை பெற்றவர் 
போற்றும் புகழுரைகள் -நோய் 
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர் 
கூறும் அறிவுரைகள்                          (நான் ஆராரோ...)

ஆறு கரையில் அடங்கி நடந்திடில் 
காடு வளம் பெறலாம்                                                  (ஆறு கரையில்...)
தினம் நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில் 
நாடும் நலம் பெறலாம்                         
நாடும் நலம் பெறலாம்                        (நான் ஆராரோ...)

பாதை தவறிய கால்கள் விரும்பிய 
ஊர்சென்று சேர்வதில்லை                                          (பாதை தவறிய)
நல்ல பண்புதவறிய பிள்ளையைப் பெற்றவள் 
பேர்சொல்லி வாழ்வதில்லை
பேர்சொல்லி வாழ்வதில்லை              (இந்தப் பச்சைக்கிளிகொரு...)

பிள்ளை வளர்ப்பைப் பற்றித் தற்காலப் பெற்றோர்கள் நீதி நூல்கள் எதனையும் படிக்க வேண்டியதில்லை, எந்த உளவியல் கையேடுகளையும் புரட்ட வேண்டியதில்லை. இதோ மேலேயுள்ள பாடல் வரிகளை மட்டும் மனதில் வரிக்கு வரி, இடைவிடாமல் பதிய வைத்துக் கொண்டாலே போதுமானது. அந்த அளவுக்கு மிகவும் அழகிய, எளிமையான தமிழில் பாடல் என்ற பெயரில் ஒரு மாபெரும் தத்துவத்தையே நமக்குத் தந்திருக்கிறார் அந்த ஈடு இணையற்ற கவிஞர்.    
(அடுத்த வாரமும் தொடரும்) 
                               


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக