செவ்வாய், செப்டம்பர் 21, 2010

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 1

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 
தமிழ்த் திரையிசைப் பாடல்களில் கதாநாயகன், கதாநாயகிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களே அதிகம். இவற்றில் உணவைப்பற்றிப் புகழ்ந்தோ, அன்றேல் வியந்தோ பாடப்பட்ட பாடல்கள் மிகக் குறைவு. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இவ்வாறு 'சாப்பாட்டைப்பற்றி' பாடப்பட்ட பாடல்களில் இரண்டு பாடல்கள் ரசிகர்களால் முக்கியத்துவம் கொடுத்து ரசிக்கப்பட்டது மட்டுமன்றி, அவை ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தும் விட்டன. முதலாவது பாடல் கறுப்பு, வெள்ளைத் திரைப்படமாகிய 'மாயா பஜார்' திரைப்படத்தில் இடம்பெற்ற "கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்" என்ற பாடல். இரண்டாவது பாடல் கலர்த் திரைப்படக் காலத்தில் வெளிவந்த 'முள்ளும் மலரும்' திரைப்படத்தில் இடம்பெற்ற "நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்தரிக்கா" என்ற பாடலாகும்.

இதில் முதலாவது பாடலானது, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த போதும், பெரிய அளவில் அடித்தட்டு மக்களையும் சென்றடையவில்லை. அதற்குக் காரணமாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். அந்தப் பாடலில் பெரும்பாலும் இனிப்பு வகைகளும், பலகார வகைகளுமே இடம்பிடித்திருந்தன. அப்பாடலில் குறிப்பிடப்பட்ட இனிப்பு வகைகளும், பலகார வகைகளும் பணக்காரர்களால் மட்டுமே உண்ணப்பட்ட பதார்த்தங்களாக இருந்தன. மற்றும் அப்பாடல் பாடப்பட்ட விதம் கிராமிய மக்களையும் சென்றடையும் வகையில் அமைந்திருக்கவில்லை.
ஆனால் இரண்டாவது பாடலானது மிகப்பெரிய அளவில் படித்தவர், பாமரர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டும், வாயால் அடிக்கடி உச்சரிக்கப்பட்டும், ரசிக்கப்பட்டும் நினைவில் கொள்ளப்பட்டது. அதற்குக் காரணமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:- முதலாவதாக அது பாடப்பட்ட கிராமிய மெட்டு, பாடலைப் பாடிய வாணி ஜெயராமின் மதுரமான குரல், அந்தத் திரைப்படத்தில் நடித்திருந்த, ஆனால் ஒருசில வருடங்களுக்கு முன்  தமிழ் மக்களுக்கு அறிமுகமாகியிருந்த  நடிகர் ரஜினிகாந்த், மற்றும் பாடலில் வியந்து போற்றப்பட்ட, சாதாரண மக்களின் நாளாந்த உணவுகள் போன்றவை பாடலைக் கேட்போரைக் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை.

சரி, பாடலின் வெற்றியைப் பார்த்தோம், பாடலின் கவிஞரை, அவர்தம் சொல்லாட்சியைப்  பார்க்க வேண்டாமா? பாடலை எழுதிய கவியரசு கண்ணதாசன் தமிழ் நாட்டில் காரைக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பிறந்த இந்தக் காரைக்குடி, மற்றும் சிவகங்கைப் பகுதிகள் 'செட்டிநாடு' என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. ஆங்கிலேயர் காலம்தொட்டு இன்றுவரை தமிழ்நாட்டிலும், இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் வியாபாரத்தில் 'கொடிகட்டிப் பறப்பது' இந்தச் 'செட்டியார்' என்ற சமுதாயப் பிரிவினரே.
இந்தப் பிரிவினர் வியாபாரத்தில் மட்டும் வெற்றி பெற்ற மக்கட் பிரிவாக இருக்கவில்லை. "ஆம், நீங்கள் நினைப்பது சரியே"., இவர்கள் 'உண்போரை மயக்கும்' சுவையான உணவுகளைச் சமைக்கும் அற்புதமான சமையல் கலையிலும் வல்லுனர்கள்.
தமிழ் நாட்டில் மட்டுமின்றி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் வரை இவர்களது சமையல் கலையும், 'செட்டிநாடு உணவகங்களும்' மிகவும் பிரபலம். அண்மைக் காலங்களில் அமெரிக்காவிலும் ஏன் ஐரோப்பிய நாடுகளிலும் செட்டிநாடு உணவகங்கள் தோன்றிவிட்டன. எல்லாம் சரி, இவர்களது சமையலில் அப்படி என்ன விசேஷம்? இவர்களது உணவகங்கள் பிரபலமாகக் காரணம் என்ன?
(அடுத்தவாரம் தொடரும்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக