சனி, செப்டம்பர் 25, 2010

முதற் பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 2

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
அந்த டேனிஷ் பொருளியல் நிபுணர் கூறியது இதுதான்: "உங்களுக்கு வருடாந்தம் லொத்தரில் மூவாயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசு விழவேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்; உங்களுக்கு எப்போதெல்லம் லொத்தர் வாங்கவேண்டுமென்று ஆவல் ஏற்படுகிறதோ, அந்தத் தொகையை (நீங்கள் பரிசுச் சீட்டு வாங்க நினைக்கும் தொகையை) உண்டியலில் போட்டுச் சேமியுங்கள், மற்றும் மூன்று விடயங்களில் மிக, மிக, மிகச் சிக்கனமாக இருங்கள். அவையாவன: 
1. தண்ணீர்,
2. சுடுதண்ணீர்(அல்லது வீட்டின் வெப்பமேற்றிகள்), 
3. உங்கள் வீட்டுத்தேவைக்கு நீங்கள் உபயோகிக்கும் மின்சாரம்.


இந்த மூன்று விடயங்களிலும் நீங்கள் சிக்கனமாக இருந்தால், கடந்த வருடம் நீங்கள் உபயோகித்த மேற்படி வளங்களுக்காக செலுத்திய அதே தொகையை இவ்வருடமும் நீங்கள் செலுத்தியிருந்தால், எதிர்வரும் வருடத்தில் தண்ணீர், மின்சாரம், சுடுதண்ணீர் (அல்லது வெப்பமேற்றி) போன்றவற்றை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து உங்களுக்குத் திரும்பிவரும் தொகையுடன், நீங்கள் ஏற்கனவே உண்டியலில் சேர்த்த பணத்தொகையையும் சேர்த்தால், உறுதியாக உங்கள் கையில் மூவாயிரம் அமெரிக்க டொலர்கள் சேர்ந்திருக்கும் என்று அடித்துக் கூறுகிறார் அந்தப் பொருளியல் நிபுணர். சிக்கனமாக இருப்பதற்குப் பொருளியல் நிபுணரிடம் ஆலோசனை கேட்கவேண்டிய அவசியமில்லை என்று கருதுவோருக்கும், சிக்கனம் என்றாலே கஞ்சத்தனம்தான் என்று கருதுவோருக்கும், இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்வோருக்கும் ஒரு உண்மைச் சம்பவத்தைக் குட்டிக் கதையாகக் கூற விரும்புகிறேன்.


சிக்கனம் வேறு, கஞ்சத்தனம் வேறு
அவர் ஒரு அமெரிக்கத் தொழிலதிபர், அமெரிக்காவின் லூசியான மாநிலத்தில், அவருக்குத் தொழிற்சாலைகளும், வணிக வளாகங்களும் உள்ளன. ஒருநாள் மாலை நேரத்தில் அவரைச் சந்திக்கவென்று நான்குபேர் வந்திருந்தனர். அவர்கள் தொழிலதிபரைச் சந்திக்க வந்த நோக்கம் இதுதான்; அதாவது அவ்வூரில் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் ஒரு வறிய, சிறுவர் பாடசாலைக்கு ஒரு கட்டிடம் கட்டுவதற்குத் தொழிலதிபரிடம் நிதியுதவி கேட்கும் நோக்கத்திலேயே நற்பணி மன்றத்தைச் சேர்ந்த அந்த நான்கு பெரும் வந்திருந்தனர். நான்கு பேரையும் வாசலில் வந்து வரவேற்ற தொழிலதிபர், அவர்களை விருந்தினர் அறையில் அமர வைத்தபின் பின்வருமாறு கூறினார்; "அனைவரும் சிறிது அமர்ந்து கொள்ளுங்கள், வாசலிலும், நடுக்கூடத்திலும் எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்குகளை அணைத்துவிட்டு வருகிறேன்" என்று கூறி எழுந்து சென்றார். அவ்வளவுதான், வந்தவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. "இவ்வளவு கஞ்சனாக இருக்கிறாரே, சொற்ப மின்சாரத்திற்குக் கணக்குப் பார்க்கும் இவரா நமக்கு நிதி தரப்போகிறார்" என்று எண்ணி நால்வரும் மனம் சோர்ந்துபோய் விட்டனர். விளக்குகளை அணைத்துவிட்டுத் திரும்பி வந்த தொழிலதிபர் அவர்களோடு அமர்ந்திருந்து அவர்கள் சொல்வதை எல்லாம் மிகவும் கவனத்தோடு கேட்டபின்னர், நம்பினால் நம்புங்கள் , தனது காசோலைப் புத்தகத்தை எடுத்து ஐம்பதினாயிரம் அமெரிக்க டொலர்களுக்கான காசோலையை எழுதி அவர்களிடம் கொடுத்தார்.
இப்போது சொல்லுங்கள் கஞ்சத்தனம் என்பதும், சிக்கனம் என்பதும் ஒன்றா? அல்லது வேறு வேறா?
(அடுத்தவாரம் தொடரும்) 

 பிற்குறிப்பு:- உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக