வியாழன், செப்டம்பர் 30, 2010

மண்ணும், மரமும், மனிதனும் - அத்தியாயம் 1



ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பாக, 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் இயக்கத்தில் 'கிழக்குச் சீமையிலே' எனும் பெயரில் திரைப்படமொன்று வெளியாகியது. அது ஒரு கிராமியக் கதையைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படமாக இருந்த போதிலும், தமிழ் ரசிகர்கள் அதற்குப் பேராதரவு நல்கி அதனை வெற்றிப்படமாக்கியிருந்தனர்.
அந்தத் திரைப்படத்தில் பாடல் காட்சியொன்றில், படத்தின் துணைக் கதாநாயகன்(விக்னேஷ்), பல வருடக் கல்லூரி, நகர வாழ்க்கையை முடித்துக்கொண்டு தனது சொந்தக் கிராமத்திற்கு வருவான். அவன் கிராமத்திற்குள் நுழையும்போது ஆற்றங்கரையிலுள்ள மரத்தைப் பார்த்து, நம் ஊரில் அனைவரும் நலமாக உள்ளார்களா? என்று கேட்பதுபோல் அமைந்த:

                     "ஆத்தங்கரை மரமே, அரசமர இலையே!
                      ஆலமரக் கிளையே, அதிலுறங்கும் கிளியே"

என்று தொடங்கும் பாடலில் வரும், பின்வரும் வரிகள், கதாநாயகனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழ்க் குடிமகனுக்கும்/மகளுக்கும் இயற்கையோடு உள்ள அழகான, ஆழமான உறவை வெளிக்காட்டுவதாக அமைந்தன. இதோ அந்த வியத்தகு வரிகள்:

                    "தொட்டபூ இங்கே சுகம்தானா?
                     தொடாத பூவே சுகம்தானா?
                     தோப்புல(தோப்பிலே) ஜோடி(சோடி) மரங்கள் சுகம்தானா?
                     அத்தையும் மாமனும் சுகம்தானா?
                     ஆத்தில மீனும் சுகம்தானா?
                     அன்னமே உன்னையும் என்னையும், சேர்த்து வளர்த்த
                     திண்ணையும் சுகம்தானா?"

என்று கேட்டுக் கதாநாயகன், கதாநாயகியை மட்டும் சுகம் கேட்பதோடு நின்று விடாமல், ஊரிலுள்ள மரங்களையும், இயற்கையையும் சுகம் விசாரிக்க வைத்த, கவிஞர்.வைரமுத்துவின் முத்தான வரிகளுக்கு, மேற்குறிப்பிட்ட வரிகள் சிறிய உதாரணங்கள் மட்டுமே.

பாடலைப் பார்த்து ரசிக்க இங்கே அழுத்தவும்

மேற்படி திரைப்படத்தில் வரும் கதாநாயகனையும், பாடலை எழுதிய கவிஞனையும் போலவே, நாமும் நமது புலம்பெயர் வாழ்வில், எமது மண்ணையும், பசுமை நினைவுகளையும், மறக்க முடியாதவர்களாகவும், ஆனால் புலம்பெயர் நாட்டின் சமூக, பொருளாதார, கலாச்சாரச் சூழலுக்கு முகம் கொடுக்க முடியாதவர்களாகவும், வேதனையிலும், விரக்தியிலும், திண்டாடியே வாழ்கிறோம் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

அந்தத் திரைப்படத்தில், இன்னுமோர் பாடல் காட்சியில், படத்தின் பிரதான கதாநாயகி(ராதிகா) திருமணமாகிப் புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது........................!
(உறவுகள் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக