ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
கொலம்பஸின் பெற்றோர்கள் எப்போதுமே தமது கிராமத்துடனும், அதனை அண்டிய தொழில்களிலுமே தமது வாழ்நாட்களைச் செலவிட்டனர். ஆனால் சிறுவன் கொலம்பஸின் அக்கறையும், பொழுதுபோக்குகளும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது. அவன் எப்பொழுதுமே கடற்கரையை அண்டியே விளையாடச் செல்வான். மீனவக் குடும்பத்துச் சிறுவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டான். கடலையும், அதில் மீன்பிடிப்பதற்குச் செல்லுகின்ற, மீன்பிடித்துக்கொண்டு கரைக்குத் திரும்புகின்ற மீன்பிடிப் படகுகளையும், ஆழக் கடலில் செல்லுகின்ற, உள்நாட்டு, வெளிநாட்டு வணிகக் கப்பல்களையும் நீண்டநேரம் பார்த்து ரசித்துக்கொண்டு நிற்பான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து, விரிந்துகிடக்கும் கடலையும், வானத்தையும் நீண்டநேரம், கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு நிற்பது அவனது வழமையான பொழுது போக்குகளில் ஒன்று.அவனுக்குப் பத்து வயதாகும்வரை, அவன் தனது தாயிடமும், தந்தையிடமும் ஆயிரக்கணக்கான தடவைகள் இரண்டு கேள்விகளைமட்டுமே கேட்டிருக்கிறான். அந்தக் கேள்விகள் இவைதான் 1. இந்த வானம் எங்கே முடிவடைகிறது? 2. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீல நிறமாகக் காட்சியளிக்கும் இந்தக் கடல் எங்கே முடிவடைகிறது? இந்த இரு கேள்விகளுக்கும் விடையாக அவனது பெற்றோர்களிடமிருந்து, பெரும்பாலான நேரங்களில் "உன் வாயை மூடு" என்ற பதிலே கிடைத்தது. ஆனால் விதிவிலக்காகச் சிலவேளைகளில் அவனது தந்தையிடமிருந்து சில வேடிக்கையான பதில்கள் கிடைக்கும். அதாவது அவனது தந்தை மனச்சுமை எதுவும் இல்லாது, ஓய்வாக இருக்கும் தருணங்களில், நகைச்சுவை உணர்வோடு பின்வருமாறு பதிலளிப்பார்: "இந்த நீல வானம் 'வெனிஸ்' நகரத்தில் முடிகிறது, இந்த நீலக்கடல் 'ரோமாபுரியில்' முடிவடைகிறது" என்பார். சிலவேளைகளில் அவனைக் கிண்டல் செய்யும் நோக்கத்தோடு, பதிலை மாற்றுவார். "இந்த வானம் 'மிலான்' நகரத்துடன் முடிகிறது, இந்தக்கடல் 'நேப்பில்ஸ்' நகரத்துடன் முடிகிறது என்பார். ஞாபக சக்தி அதிகமுள்ள சிறுவன் கொலம்பஸை இத்தகைய வெவ்வேறு பதில்கள், குழப்பமூட்டுவதுடன், எரிச்சலூட்டவும் செய்தன. அவன் தந்தையிடம் திருப்பிக் கேட்பான், "அன்று அவ்வாறு சொன்னீர்கள், இன்று இவ்வாறு சொல்கிறீர்களே" என்று. அதற்குத் தகுந்தாற்போல் தந்தையும் பதிலளிப்பார், "அன்று விடை தெரியாததால், தவறாகச் சொன்னேன், இன்று சொன்னது சரியான விடை" என்பார். போதிய புவியியல் அறிவில்லாத அந்த, ஏழைத் தந்தைக்குத் தெரியவில்லை, பின்நாளில் சரித்திரம் படைக்கப்போகும் தன் மகனைத் தனது அறியாமையாலும், வேடிக்கை உணர்வாலும், பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது.
கடற்கரையில் தினமும் விளையாடச் செல்லும் சிறுவன் கொலம்பஸ், அங்கே தினமும் விளையாட வரும், மீனவச் சிறுவர்களில் ஒருவனான 'அன்டோனியோவை' தனது நெருங்கிய நண்பனாக்கிக் கொண்டான். இவர்களிருவரும் தினமும், கடற்கரையில், தண்ணீரில் நனைவதும், நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் சிறிய மீன்பிடிப் படகுகளில் ஏறிப், பின் தண்ணீரில் குதிப்பதும், சிறிய கட்டுமரங்களை எடுத்துக் கடற்கரையோரம் படகுப்பயிற்சி செய்வதும் இப்படியாக அவர்களது விளையாட்டுக்கள் தொடர்ந்தன. ஒருநாள் கொலம்பஸ் தன் நண்பனான அன்டோனியோவை, ஒரு புதிய விளையாட்டுக்கு அழைத்தான், ஆனால் அது உண்மையில் ஒரு விளையாட்டு அல்ல, உயிருக்கே உலை வைக்கும் விஷப்பரீட்சை. இந்த விளையாட்டை இருவரும் சேர்ந்து விளையாடலாமா? என்று சிறுவன் கொலம்பஸ், அண்டோனியோவைக் கேட்டபோது அன்டோனியோ நடுநடுங்கிப் போய்விட்டான்.
(அடுத்த வாரமும் தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக