வியாழன், ஏப்ரல் 07, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 2.6


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)


இவ்வாறாக பலரும் எங்கள் பாட்டியின் பெயரைக் கொச்சைப் படுத்திக் கொண்டிருக்க, 'அப்பம்மா' என அழைக்க வேண்டிய நாங்களோ அவரை 'பால் தாற ஆச்சி' என அழைக்கத் தொடங்கியிருந்தோம்.அவரை நாங்கள் முறைப்படி அப்பம்மா(*பேத்தி/பாட்டி) என்றே அழைத்திருக்க வேண்டும் ஆனால் அவரை நாங்கள் 'பால் தாற ஆச்சி' என அழைத்தமைக்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம் எங்கள் தந்தையாருக்கு 'மண்டைதீவில்' மட்டும் பத்துப் பதினைந்து குஞ்சியம்மாக்கள்(*சித்திகள்/சின்னம்மாக்கள்) இவர்களில் ஒரு சிலருடன் மட்டுமே எங்களுக்கு உறவு இருந்தது. இதில் யாரை 'அப்பம்மா'(*அப்பத்தா) என அழைப்பது? எங்கள் உண்மையான அப்பம்மா(அப்பாவின் தாயார்) நானும் என் அண்ணாவும் கைக் குழந்தைகளாக இருக்கும்போதே இறந்துவிட்டார். மேற்படி நான் குறிப்பிட்ட 'சுகிர்தம்மா' என்ற ஆச்சி பல கால்நடைகளை(ஆடுகள்,மாடுகள்) வளர்த்து வந்தார். இவரிடம் நாங்கள் குறிப்பிட்ட ஒரு காலப் பகுதியில் தினமும் காசு கொடுத்துப் 'பசுப் பால்' வாங்கிக் குடித்து வந்தோம். பொருளாதாரத்தில் 'ஓட்டை' விழவும் பால் வாங்குவதை நிறுத்தி விட்டோம். ஆனாலும் எங்கள்மீது இரக்கம் கொண்ட அந்த ஆச்சி தனது ஆடுகளிலிருந்து கிடைக்கும் பாலை தினமும் எங்களுக்கு இலவசமாகத் தந்து தனது 'மனிதாபிமானத்தை' நிலைநாட்டினார். இதன் காரணமாகவே நானும் எனது அண்ணனும் அவருக்கு 'பால் தாற ஆச்சி' எனப் பெயர் சூட்டினோம். ஒவ்வொரு தடவையும் நாங்கள் அவரைப் 'பால் தாற ஆச்சி' எனப் பெயர் குறிப்பிடும்போது "அப்பம்மா எனக் கூறுங்கள்" என எங்கள் தாயார் கூறுவதுண்டு, நாங்களும் திருத்தியபாடில்லை, இறுதியில் எங்கள் தாயாரும் "நாய் வாலை நிமிர்த்த முடியாது" என்று களைத்துப் போய் விட்டு விட்டார். 
நானும் என் அண்ணனும், என் அண்ணனின் 'பரிவாரங்கள்' ஒரு மூன்று பேருமாக 'பால் தாற ஆச்சியின்' வீட்டுப் படலையைத்(*கதவு/Gate) திறந்துகொண்டு தைரியமாக நுழைந்தோம். அந்த ஆச்சி நாய் வளர்ப்பதில்லை. ஆகவே நாங்கள் பயமில்லாமல் நுழைந்தோம். ஆச்சி! ஆச்சி! எனக் குரல் எழுப்பினோம். வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த 'கருணையே வடிவமான' அந்த ஆச்சியிடம் முறைப்படி 'நெல்லிக்காய்' பொறுக்குவதற்கு அனுமதி பெற்றோம். ஆச்சி ஒரேயொரு நிபந்தனை விதித்தார். அதாவது மரத்தில் காய்த்திருக்கும் நெல்லிக் காய்களில் பெரும்பாலானவை 'பிஞ்சாக' இருப்பதால் அவற்றைப் பிடுங்காமல்(*பறிக்காமல்)  'கீழே விழுந்து கிடக்கும்' நெல்லிக் காய்களை மட்டுமே பொறுக்கவேண்டும். 
(தொடரும்)

  உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன
நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக