வெள்ளி, நவம்பர் 26, 2010

மண்ணும், மரமும், மனிதனும் - அத்தியாயம் 5

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
முல்லை 
இவ்வாறு தமிழ் மக்கள் தமது மண்ணோடு, மரங்களையும் செடி கொடிகளையும் நேசிக்கின்ற பாங்கு என்னை வியப்படைய வைத்தது. இது எங்கே எவ்வாறு ஆரம்பிக்கிறது? என்று ஆராய முற்பட்டபோது எனக்குக் கிடைத்த விடைகள் மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக அமைந்தன.
முதலாவதாக எமது தமிழ் இலக்கிய நூல்களில் விடை தேடியபோது கிடைத்தது ஒரு அதிசயமான செய்தி அது "முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி" என்று நம்மை வியப்படையச் செய்கிறது. அதாவது சங்க காலத்தில் வாழ்ந்த அல்லது ஆட்சிபுரிந்த கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய 'பாரி மன்னன்' காட்டிற்கு வேட்டையின் நிமித்தம் சென்றபோது காட்டில் அவனது தேர் சென்ற பாதையில் கவனிப்பாரின்றி படர்ந்து கிடந்த ஒரு முல்லைக் கொடியானது, பற்றிப் படர்வதற்கு ஒரு கொழுகொம்பு(பற்றிப் பிடித்துப் படர்வதற்கு ஏற்ற மரம்போன்ற ஒரு துணை)இல்லாததால் காற்றில் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப் பட்டுக் கிடப்பதைக் கண்டான், அதன் நிலை கண்டு இரங்கிய அம்மன்னன் தனது தேரிலிருந்து இறங்கி,
அத்தேரில் அம்முல்லைக் கொடியைப் படரவைத்துவிட்டுக் கானகத்திலிருந்து நடந்தே அரண்மனைக்கு சென்றான் என்று சாட்சி கூறுகிறது எமது சங்க இலக்கியம். கொடைக்குப் பெயர்போனவன் பாரி மன்னன் என்பது நம்மில் பலர் அறிந்த விடயமாகும், இருப்பினும் ஒரு முல்லைக் கொடிக்காக தனது தேரையே தானமாக வழங்கிய அவனது பெருந்தன்மை யாருக்கு வரும்? அதனால் தான் இன்று வரை எம்மவர் நாவுகளில் 'வள்ளல்' என்ற அடைமொழிக்கு அர்த்தமாக பாரிமன்னன் நிலைத்து நிற்கிறான். எனது நண்பரொருவர் இந்தப் பாரி மன்னனின் செயலைப் பற்றிக் கிண்டலாக ஒரு கருத்துக் கூறினார், அது சரியா தவறா என்ற முடிவை வாசகர் பக்கமே விட்டு விடுகிறேன் அவர் கூறியது இதுதான்: "இக்காலத்தில் பெராரி(Ferrari) அல்லது
பெராரி (Ferrari)
ரோல்ஸ்ரோய்ஸ்(Rolls-Royce) கார்கள் போல அக்காலத்தில் மன்னர்களின் தேர்கள் மிகவும் பெறுமதி வாய்ந்தவை, அவ்வாறு இருக்கையில் ஒரு பெறுமதியான தேரை, மன்னன் முல்லைக் கொடிக்காக இழந்தது எவ்வகையில் விவேகமானது? இதற்குப் பதிலாக தனது படை, பரிவாரங்களிடம் சொல்லி முல்லைக் கொடிக்கு ஒரு பந்தல் அமைத்துக் கொடுத்திருக்கலாமே? என்று என்னிடம் கேட்டார். அவருக்குக் கூறுவதற்கு என்னிடம் ஏற்புடைய பதில் இல்லாவிட்டாலும், அவரிடம் நான் பின்வருமாறு கூறி அவ்விவாதத்தில் இருந்து விடுபட்டேன் "அம்முல்லைக் கொடியின் அவலம் தீரவேண்டும் என்று எண்ணிய மன்னனுக்கு, இரக்கம் என்ற உணர்ச்சி மட்டுமே மேலோங்கி நின்றது, அவ்விரக்க உணர்ச்சிக்கு முன்னால் தேரின் பெறுமதி ஒரு பொருட்டாக அவனுக்குப் படவில்லை. அதனால்தான் தமிழ்ச் சரித்திரத்தில் இன்றுவரை அழியாமல் வாழ்கிறான் பாரி மன்னன்"
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.  

3 கருத்துகள்:

Haran சொன்னது…

மன்னர்கள் தம்மை அடையாளம் கட்டுவதர்க்காக் செய்த செயல்கல்கள் பல அதில் ஒன்றுதான் இது. மனநிதிகண்ட சோழன் என்ன செய்தான் என்று சற்று யோசித்துப்பருங்கள். அடையாளம் கட்டுவதர்க்காக செய்த தீவிரமான செயல் என்றும் சொல்லெலாம்.

HN சொன்னது…

எமது அரசர்களின் சிந்தனைகள் மேன்மையாக இருந்தாலும் செஎல்பாடுகள் செரியாக இருந்ததில்லை.

சே.ஜெ சொன்னது…

அந்த நண்பரின் கருத்தே எனது கருத்தும். மன்னன் ஒருவனுக்கு பணமும், வசதி வாய்ப்புகளும் யாரிடமிருந்து கிடைக்கிறது? அவனின் குடி மக்களிடமிருந்துதானே? அதனால் அவற்றை தவறாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கதே. இதைத்தானே இன்றைய பல அரசியல் தலைவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

கருத்துரையிடுக