டேனிஷ் மொழியில்: ரொமினா மக்கின்னஸ்
தமிழில்: இ.சொ.லிங்கதாசன்
கண்ணீரும் கதைசொல்லும்! - பாகம் 2
மனிதர்கள் நாம் ஏன் அழுகிறோம்? விடை நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதானே, நம் உடல் அல்லது உள்ளம்(மனம்) தாக்கப் படும்போது அழுகிறோம். இன்றுவரை விஞ்ஞானிகளால் உறுதி செய்யப் படாவிட்டாலும், ஒரு உண்மை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது "உணர்வுகளால் தாக்கப்படும்போது அழுகின்ற, அல்லது உணர்ச்சிவசப்படும்போது கண்ணீர் சிந்துகின்ற ஒரேயொரு விலங்கு, 'மனிதன்' மட்டுமே". 1980 களில் அமெரிக்காவின் Minneapolis நகரத்திலுள்ள ராம்சே மருத்துவ கழகத்தைச் சேர்ந்த வில்லியம் பெய் என்ற விஞ்ஞானி கண்ணீரைப் பற்றிய தனது ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டார். அதன்படி "பிரதிபலிப்புக் கண்ணீரில் 98% தண்ணீர் மட்டுமே உள்ளதாகவும், ஆனால் 'உணர்வெழுச்சிக் கண்ணீரில்' பெருமளவில் மன அழுத்தக் ஹோர்மோன்கள் உள்ளது" என்றும் தெரிவித்தார். மனிதன் கவலையாக, துன்பத்தில் இருக்கும் போது அழுவது ஒரு அத்தியாவசியமான உடலியல் செயற்பாடு என்று கூறிய அவர் இதன் மூலம் உடலானது தன்னுள்ளே உருவாகிய நச்சுப் பொருட்களை (துன்பத்தின் காரணமாக ஏற்பட்ட நச்சுப் பொருட்கள்) வெளியேற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது, இதன்மூலம் மனித 'மனம்' பழைய நிலைக்கு, அல்லது மகிழ்ச்சியான நிலைக்குச் செல்வதற்கு உடலும், உள்ளமும் ஒத்துழைக்கின்றன.
டேனிஷ் மருத்துவ நிபுணர்களில் ஒருவராகிய மறீச பியர் உணர்வெழுச்சிக் கண்ணீருக்குக் காரணங்களாக பின்வருவனவற்றைப் பட்டியலிடுகிறார். ,
- ஆழமான(பலம் மிக்க) உணர்ச்சிகளாகிய கோபம், ஆத்திரம், விரக்தி, ஏமாற்றம், ஏக்கம், ஆனந்தம்,எல்லைமீறிய உணர்ச்சிவயப்படுதல்.
- "நான் கவலையாயிருக்கிறேன்" என்று ஒரு மனித உடல்+ஆன்மா, அடுத்தவர்களுக்குத் தெரியப் படுத்தும் ஒரு 'மொழி' கண்ணீராகும்.
"நான் துக்கமாயிருக்கிறேன், நான் ஆனந்தமாயிருக்கிறேன்"
ஒரு ஆழமான உணர்ச்சியின் காரணமாக எம் மனதில் ஏற்படும் இறுக்கமான நிலையிலிருந்து எம் மனதைத் தளர்விப்பதற்கு அழுகை இன்றியமையாததாகின்றது. இதன்மூலம் உள்ளத்தில் ஏற்பட்ட வலியும், உடலில் ஏற்பட்ட வலியும் நம்மைவிட்டு விலகுவதற்கு வழிபிறக்கிறது. உணர்சிகள் பலவகை, அவை பயம், ஆனந்தம், அதிர்ச்சி, வலி, துக்கம் என்று எண்ணிலடங்காதவையாக இருக்கலாம் ஆனால் அவற்றை மனிதர்கள் வெளிப்படுத்தும் விதம் அல்லது 'மொழி' அநேகமாகக் 'கண்ணீராகத்தான்' இருக்கும். இதை நீங்கள் அனுபவ ரீதியாக உணர்ந்திருப்பீர்கள், ஒரு விவாதத்தில் தன் கருத்தைச் சரியான முறையில் தெரிவிக்க முடியாத நண்பன்/நண்பி ஏன் அழ நேரிடுகிறது? திடீரென்று கீழே விழ நேரிடும் ஒருவரின் கண்களில் இருந்து ஏன் கண்ணீர் வருகின்றது, இவையெல்லாம் தன்னைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில் ஒரு மனிதன் வெளிப்படுத்தும் ஒரு 'மொழியாகும்' என்கிறார் பியர். சரி துக்கமான சூழலில் கண்ணீர் வருவது இயற்கை, ஆனந்தமான சூழலிலும் கண்ணீர் துளிர்க்கிறதே அது ஏன்?
(தொடரும்
நன்றி: Metro உலகச் செய்திகள்,
24timer டென்மார்க்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக