செவ்வாய், நவம்பர் 23, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 7

ஆக்கம். இ.சொ.லிங்கதாசன்

இக்கட்டுரை கடந்த 2.11.2010 அன்று அந்திமாலையில் வெளியானது, வாசிக்கத் தவறிய வாசகர்களுக்காக இங்கு மறு பிரசுரமாகிறது.

"எங்களூரில் (இலங்கையில்) நெல்லுச்சோறு என்ற பதம் உபயோகிக்கப் படுவதில்லை, ஏனென்றால் நெல்லில் இருந்து உமியை நீக்கியவுடன் கிடைக்கும் அரிசியில் பொங்கல் (ஈழத்தில் 'புக்கை' என்றும் அழைப்பர்), அல்லது கஞ்சி மட்டுமே சமைப்பார்கள்" என்று கேள்விக்குமேல் கேள்விகளைக் கேட்டு எனது சந்தேகங்களை அவர்முன் சமர்ப்பித்தேன்.
நீங்கள் கேட்டது மிகவும் பொருத்தமான, நியாயமான கேள்விகள், இதற்கு பதிலளிப்பதற்கு ஈழத்தவர்கள், மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணவுகளில் 'தானியங்களின்' முக்கியத்துவம் பற்றிக் கூற வேண்டும்" என்றவர் தொடர்ந்தார்.

"தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் உணவுகள், உணவுப் பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் ஒத்ததாகவே இருக்கும். தமிழ்நாட்டிலிருந்து 32 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் ஈழத்து மக்களின் உணவுகளும் அத்தகையதே. பெரிய மாறுபாடுகள் ஏதுமில்லை. இதுபோக 'இந்தியாவும் இலங்கையும்' ஒரே காலப் பகுதியில் ஆங்கிலேய ஆட்சிக்குள் வந்து, கிட்டத்தட்ட ஒரே தருணத்தில் சுதந்திரமடைந்தவையாகும். இவ்வாறு சுதந்திரத்திற்கு முற்பட்ட காலப்பகுதில் இவ்விரு நாட்டிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் உணவுக்காகத் தனியே நெல்லை மட்டும் நம்பியிருக்கவில்லை. நெல் தவிர்ந்த ஏனைய தானியங்களாகிய சோளம், கோதுவரை, கம்பு(ஆங்கிலத்தில் Millet என்பர், ஈழத்தில் 'இறுங்கு' என்றழைப்பர்), கேழ்வரகு(மேற்கத்திய நாட்டவர்கள் Ragi என்றழைப்பர்), குரக்கன்(தமிழ் நாட்டில் 'கேப்பை' என்பர்), வரகு, சாமை (ஈழத்தில் 'சாமி' என்பர்), தினை, கொள்ளு, வாற்கோதுமை(மேற்கத்திய நாட்டவர்கள் Barley என்றழைப்பர்) கோதுமை போன்ற இன்னோரன்ன தானியங்களை உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தி வந்தனர். இவற்றில் எந்தெந்தத் தானியங்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்" என்று புதிய கேள்வியை என்னை நோக்கித் தொடுத்தார்.

அவரிடமிருந்து கிளம்பிய புதிய கேள்வியால் கொஞ்சம் தடுமாறிய நான் எனது தடுமாற்றத்தை வெளியே காட்டாமல் தொடர்ந்தேன், "சோளத்தை நன்கு அறிவேன், அவித்த சோளம் எனக்கு மிகவும் பிடிக்கும், ஊரில் வேர்க்கடலை(கச்சான்) வறுத்து விற்பவர்கள், கண்டிப்பாக சோளத்தையும் அதனுடன் சேர்த்து விற்பது வழக்கம், சுவை அடிப்படையில் வேர்க்கடலைக்கும் சோளத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நானறியேன், 'கோதுவரை' என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது, கம்பு அல்லது 'இறுங்கு' என்ற தானியத்தை இலங்கையில், நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் 'பொரி உருண்டை' என்ற பெயரில் தின்பண்டமாகக் கடைகளில் விற்பார்கள், ஒரு உருண்டையின் விலை பத்துச் சதம், அதற்குள் செயற்கையாக 'சிவப்பு' நிறத்தையும் சேர்த்திருப்பார்கள், பொரி உருண்டையை சாப்பிட்டதும் வாயெல்லாம், ஏன் பற்கள் கூட சிறிது நேரத்திற்கு 'சிவப்பு' நிறமாகக் காட்சி தரும். எமது நாட்டில் ஒரு துள்ளிசைப் பாடல்கூட(பொப் பாடல்) உண்டு, அது "சோழஞ்சோறு பொங்கட்டுமா, இறுங்குச்சோறு பொங்கட்டுமா? சொல்லுங்கோ மருமகனே! என்றுதான் தொடங்கும், சரி இறுங்கில்(கம்பு) சோறு சமைக்க முடியும், ஆனால் சோளத்தில் சோறு சமைக்க முடியுமா? என்று எனது தரப்பு சந்தேகத்தை அவரிடம் கேள்வியாகத் திருப்பினேன்.

(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

4 கருத்துகள்:

S. Raj, Denmark சொன்னது…

very interesting

suthan சொன்னது…

nice and great article

thulasi சொன்னது…

அந்திமாலை ஒரு தமிழ் இணையம் என்பதால் கருத்து எழுதும் அன்புத் தமிழ் உள்ளங்களை மன்றாட்டமாக வேண்டுவது ! தமிழில் எழுதுவது
சாலச் சிறந்ததுவே.

ratnam finland சொன்னது…

thulasi to nanrikal.

கருத்துரையிடுக