சனி, அக்டோபர் 09, 2010

முதல் பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 4

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
மூன்றாவது உலகப்போரானது, தண்ணீரை காரணமாக வைத்தே ஆரம்பிக்கும் என்று ஒரு அறிஞர் கூறியதாகத் தெரிவித்திருந்தேன் அல்லவா? ஆனால் இது எந்த வகையில் சாத்தியம் என்று எண்ணுகிறீர்களா? உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை ஆனால் உலகம் எதிர்கொள்கின்ற, எதிர்கொள்ளப்போகின்ற தண்ணீர்ப் பஞ்சத்தைப் பற்றிய சில தரவுகள் என்னிடமுள்ளன. அதனை அடிப்படையாக வைத்து உலகப்போர் தொடங்குமா, இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

இந்தப் பூமியின் மேற்பரப்பில் 2/3 பங்கு தண்ணீரால் சூழப்பட்டிருப்பினும், அத்தண்ணீரில் 2.5% மட்டுமே மனிதரால் குடிக்கவோ, குளிக்கவோ, பயிர்செய்யவோ அன்றியும் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தவோ தக்க நிலையில் உள்ளது. சரி, மீதி 97.5% தண்ணீரும் என்னவாயிற்று? ஆம், நீங்கள் நினைப்பது மெத்தச் சரியே, மீதியுள்ள 97.5% மும் கடல் நீராக அல்லது உவர் நீராக உள்ளது. மனிதரால் பயன்படுத்தக் கூடிய தண்ணீரின் பங்குகூட போதுமானதாக இல்லை. அந்தத் தண்ணீரில் ஒரு 2/3 பங்கானது பூமியின் வட,தென் துருவங்களில் உறைபனி மலையாகக் கிடக்கிறது. மற்றும் மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடிய நல்ல தண்ணீரில் மேலும் ஒரு 20% மனிதர்களால் எட்டமுடியாத இடத்தில் அதாவது மனிதர்கள் வாழாத பாலைவனப் பிரதேசங்களிலும், வனாந்தரப் பிரதேசங்களிலும் மண்ணுக்கடியில் காணப் படுகிறது. இப்போது சிந்தித்துப் பாருங்கள் இன்னும் பத்து வருடங்களில் தண்ணீர்ப் பஞ்சத்தால் இந்தப் பூமியில் மக்கள் படப்போகும் பாட்டை.

இந்த இயற்கையானது மக்களுக்குத் தேவையான இடத்தில் தண்ணீரைத் தாராளமாகக் கொடுக்கவில்லை. உதாரணம் : மத்திய கிழக்கு நாடுகளிலில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாடு, ஆபிரிக்கநாடுகளில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாடு. இதில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தண்ணீர்ப் பஞ்சத்திற்குக் காரணம் அவற்றின் சுற்றுப் புறச் சூழலானது பெரும்பாலும் பாலைவனத்தை ஒத்த நிலப்பகுதியாக அமைந்திருப்பது.ஆனால் ஆபிரிக்க நாடுகளில் உள்ள தண்ணீர்ப் பஞ்சத்திற்குக் காரணம், அந்நாடுகளில் பலவருடங்களாக மழை பெய்யாமையே. சோமாலியாவில் சில பகுதிகளில் கடந்த 7 வருடங்களாக மழை பெய்யவில்லை. அங்கோலா நாட்டிலும், எத்தியோப்பியாவிலும் கடந்த 11 வருடங்களாக மழை பெய்யாத பகுதிகள் பெருமளவு உள்ளன. இவ்வாறு மனித இனத்தை தண்ணீர்ப் பஞ்சத்தால் வாட்டியெடுக்கும் இயற்கை உலக மக்களின் தேவைக்காக 0.08% தண்ணீரையே கைக்கெட்டிய தூரத்தில் வைத்துள்ளது. ஆனால் மனிதன் வாடுகின்ற வேளையில் தண்ணீரை வார்க்காத முகில்கள், அளவுமீறிப் பெய்கின்ற மழையாக மாறி மனித இனத்தை அடிக்கடி துன்புறுத்துகின்றது. உதாரணம்: இந்தியா, பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு. கடந்த 2000 ஆவது ஆண்டிற்குப் பின்பு உலகத்தலைவர்களையும், ஐ.நா.வையும் மிகவும் கவலையுறச் செய்த பிரச்சனைகளில் புவி வெப்பமடைதலுக்கு அடுத்தபடியாக தண்ணீர்ப் பிரச்சனையே முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது. உலகில் உள்ள 200 இற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எச்சரிப்பதெல்லாம் இன்னும் 10 வருடங்களில் மனித இனத்தைத் தண்ணீர்ப் பஞ்சம் அதிகமாக வாட்டப் போகிறது என்பதாகும். நாம் இந்தப் பூமியில் கிடைக்கும் நல்ல தண்ணீரில் 70% தை விவசாயத்திற்குப் பயன்படுத்துகிறோம். இந்தக் கணக்கின் படி பார்த்தால் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் மனித இனத்தின் தண்ணீர்த் தேவை 17% தினால் அதிகரிக்கும். தற்போது இவ்வுலக மக்கள் செய்வது போல் தண்ணீரை விரயம் செய்யும் நிலை தொடர்ந்தால் எதிர்வரும் 2020 ஆண்டளவில் பூமியில் உள்ள மனிதர்களில் ஐந்து பேரில் ஒருவருக்குக் குடிப்பதற்குச் சுத்தமான குடிநீர் கிடைக்காது. இதனால் பசி மற்றும் தாகத்தினால் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கானோர் மடிவர். இந்நிலை தொடர்ந்தால் தினமும் உலகிலுள்ள வறிய நாடுகளைச் சேர்ந்த 30000 குழந்தைகள் தங்களது ஐந்தாவது வயதை எட்டுவதற்கு முன்னரே மரணத்தைத் தழுவுவர்.





(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக