சனி, அக்டோபர் 02, 2010

முதல் பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 3

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
தண்ணீர், மின்சாரம், வெப்பமேற்றிகள் இம்மூன்றையும் சிக்கனமாகப் பாவிப்பதால், வருடாந்தம் பல ஆயிரக்கணக்கான, அமெரிக்க டொலர்களைச், சேமிக்க முடியும் என்று பார்த்தோம். இவற்றில் முதலிடத்தில் உள்ளதும் முக்கியமானதுமாகிய தண்ணீரைப் பற்றிப் பார்ப்போம்.

தமிழ்த் திரைப்படங்களுக்கென்றே சில காட்சியமைப்புச் சம்பிரதாயங்கள் உள்ளன. கதாநாயகனுக்கும், நாயகிக்கும் மோதலுக்குப் பின்தான் கண்டிப்பாகக் காதல் வரும், அதுபோல் கதையில் வரும் மருத்துவர், நமக்கு முன்பின் கேட்டறியாத ஒரு நோயின் பெயரைக்கூறி அது லட்சத்தில் ஒருவருக்குத்தான் வரும் என்று கூறி நம்மையும் கலங்க வைப்பார். படம் முடிவுறும் தருணத்தில்தான் காவல்துறை அதிகாரி(Inspector) குற்றவாளியை நோக்கி mr.......you are under arrest (திரு.....) அவர்களே, நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள்) என்பார்.  இவற்றை எல்லாம் விட நம்மைக் கலங்க வைக்கும் ஒரு காட்சி ஏராளமான தமிழ்ப் படங்களில் இடம்பெற்றிருக்கும். அக்காட்சி இதுதான்: கதாநாயகனோ, நாயகியோ, அவர்களின் பெற்றோர்களோ, அல்லது கதைக்கு மிகவும் வேண்டப்பட்ட பாத்திரமோ, நோயினாலோ, விபத்தினாலோ, அல்லது கத்தியால் குத்தப் பட்டோ உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் "தண்ணீர்,தண்ணீர்" என்பார்கள். அருகில் நிற்கும் உரியவர்கள் ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து வருவதற்கிடையில் சம்பந்தப்பட்டவரின் உயிர் போய்விடும்.
இத்தகைய காட்சிகளைப் பார்க்கும்போது என்மனதில் ஒரேயொரு எண்ணவோட்டம் ஏற்படும். அது இன்னும் ஒருசில நூற்றாண்டுகளில் இந்த மனித இனமே தண்ணீர்ப் பஞ்சத்தினால் மடியப்போகின்ற நிலை வரப்போகிறதே, இதைத் தடுக்க முடியாதா? ஏன் இதைப்பற்றி யாரும் அவ்வளவாகப் பேசுவதில்லை. "அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் வாழப்போகிற மக்களைப் பாதிக்கப் போகிற பிரச்சினை என்பதால், இந்தத் தலைமுறையினர், இதனைக் கருத்தில் எடுக்கவில்லைப் போலும்".

ஆனால் அந்த எண்ணமும் தவறானதே, ஏனெனில் சூரியனில் வெப்பநிலை  குறைவடைந்து செல்வதால், இன்னும் ஐம்பதாயிரம் வருடங்களில் சூரியன் முற்று முழுதாகத் தனது வெப்பத்தை இழந்து, குளிர்வடைந்து போகப்போகிறது என்பதால், இன்னும் ஐம்பதாயிரம் வருடங்களில் இந்தப் பூமியில் எந்தவிதமான உயிரினங்களுமே வாழமுடியாது போகும் நிலை ஏற்படப்போகிறது என்று சிந்திக்கும் விஞ்ஞானிகள், இன்னும் ஒரு முப்பது, நாற்பது வருடங்களில் பூமியில் பெற்றோலியப் பொருட்கள்  எல்லாம் அருகிப் போய்விடும் என்பதால், பெற்றோலியத்திற்கு மாற்றீடு கண்டு பிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் கூட்டமும், அரசியல் வாதிகள் கூட்டமும், இந்த நூற்றாண்டில் வாழுகின்ற மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாகியிருக்கும் தண்ணீர்ப் பஞ்சத்தைப் பற்றியே பேசாதிருப்பது ஏன்???

"மூன்றாவது உலக யுத்தமானது, தண்ணீருக்கான போட்டியால்தான் ஏற்படும்" என்று ஒரு அறிஞன் கூறினானே, அதை யாரும் காதில் வாங்கியதாகத் தெரியவில்லையே.

(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக