செவ்வாய், அக்டோபர் 12, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 4

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்

"என்னது அரிசிக்கு அமெரிக்கா காப்புரிமை கேட்டு வழக்குத் தொடர்ந்ததா"? என்றேன் திரு.பழனிச்சாமியைப் பார்த்து, ஆச்சரியம் மாறாதவனாக. அவர் புன்னகைத்தவாறு தொடர்ந்தார் "ஆம் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும், ஆனாலும் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும், இது நடந்ததது 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அமெரிக்காவில் உள்ள Texas Rice Tec (டெக்சாஸ் அரிசி தொழிலகம்) என்ற நிறுவனம் இந்த வழக்கை அமெரிக்காவில் உள்ள சர்வதேசக் காப்புரிமைச் சங்கத்தில் தொடர்ந்தது, சுவிட்சர்லாந்துக்குள் இறைமையுள்ள ஒரு குறுகிய மன்னராட்சி நாடு உள்ளதல்லவா"? "ஆம் தெரியும் 'லீக்ட்டேன்ச்டைன்'(Liechtenstein) என்று அந்தக் குட்டி நாட்டுக்குப் பெயர் என்றேன் எனது புவியியல் அறிவைக் காட்டுவதற்காக". "நீங்கள் கூறியது மெத்தச் சரி" என்றார் அவர். "சரி, பாசுமதி அரிசி வழக்கிற்கும், இந்த குட்டி நாட்டிற்கும் என்ன சம்பந்தம்"? என்றேன் சற்றுக் குழம்பியவனாக, அவர் தொடர்ந்தார் "சொல்கிறேன், சொல்கிறேன், அந்த நாட்டின் இளவரசருக்குச் சொந்தமானதுதான் நான் மேலே குறிப்பிட்ட Rice Tec நிறுவனம், மேற்படி நிறுவனம் உலக நாடுகள் பலவற்றில், அரிசி ஏற்றுமதி, இறக்குமதி
வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது, வருகிறது. அந்த நிறுவனம் ஒரு உண்மையை அனுபவ ரீதியாக அறிந்து கொண்டது" "என்ன அது"? என்றேன் குழப்பம் மாறாதவனாக, அவர் தொடர்ந்தார், "உலகில் பல நாடுகளால் பல லட்சக்கணக்கான இயற்கை, செயற்கை பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்றன,
இவற்றில் பல செயற்கைப் பொருட்கள் சர்வதேசக் காப்புரிமைக் கழகத்தில் (Patent and Trademark Office) மேற்படி நாடுகளாலோ அல்லது நிறுவனங்களாலோ பதிவு செய்யப் பட்டிருக்கும். ஆனால் எமது இந்தியப் பாரம்பரியப் பொருளாகிய 'பாசுமதி'அரிசி இவ்வாறு பதியப்படவுமில்லை, அதற்கான தேவையும் எழவில்லை. ஆகவேதான் பாசுமதி அரிசிக்குத் தமக்குக் காப்புரிமை வழங்க வேண்டுமென்று மேற்படி நிறுவனம், வழக்குத் தொடர்ந்தது. "வழக்கில் அந்த நிறுவனம் வென்றதா"? என்றேன் நான் ஆர்வத்துடன். அவர் சிரித்துக்கொண்டே கூறினார் "இல்லை, அதுவரை காலமும் பல விடயங்களைக் கண்டும் காணாமலும் இருந்த நம் இந்தியர்கள் அந்தத் தருணத்தில் விழித்துக் கொண்டார்கள், மேற்படி வழக்கைத் தகுந்த ஆதாரங்களோடு இந்தியாவின் புதுடில்லியிலுள்ள, விவசாய ஆராய்ச்சிக் கழகம் (Agricultural Research Institute-IARI) எதிர்கொண்டது. இந்தியா சமர்ப்பித்த ஏராளமான ஆதாரங்களை ஆய்வு செய்த அமெரிக்கக் காப்புரிமைக் கழகம், இந்தியாவுக்கு ஆதரவாகத் தீர்ப்புக் கூறியதோடல்லாமல் "இனிமேல் இத்தகைய சில்லறைத்தனமான விடயங்களில் ஈடுபடவேண்டாம்" என்று 'Rice Tec' நிறுவனத்தை எச்சரிக்கை செய்தது.

எல்லாம் இருக்கட்டும் சுவிஸ் நிறுவனம் வழக்குத் தொடரும் போது சாதக, பாதக அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமலா தொடர்ந்திருப்பார்கள்? இவர்களுக்கு சாதகமாகத் தீர்ப்புக் கிடைப்பதற்கு என்ன அமெரிக்காவில் அரிசி விளைகிறதா? என்றேன் அப்பாவித்தனத்துடன். அவர் மர்மப் புன்னகையுடன் தொடர்ந்தார் "அமெரிக்காவின் இருபதிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் மட்டுமன்றிக், குளிருக்குப் பேர்போன கனடாவிலும் கோடைகாலத்தில் அரிசி விளைகிறது, விளைவிக்க முடியும்" என்றார். "என்னது கனடாவில் நெல் விளைகிறதா"? என்றேன் ஆச்சரியம் தாங்காதவனாக.

(அடுத்த வாரமும் தொடரும்)  

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக