வியாழன், அக்டோபர் 07, 2010

வாசகர் பக்கம் - ஆன்மீகம்

நவராத்திரி

ஆக்கம்: சு. சண்முகநாதன், டென்மார்க் 
பண்டைய நாகரிகத்திற் சிறந்து விளங்கிய எகிப்திய, பபிலோனிய,  கிரேக்க, உரோம நாடுகளிலும் தாய்த் தெய்வ வழிபாடே சிறந்து விளங்கியதாக உலக வரலாறு கூறுகின்றது. இந்து நதிக்கரை நாகரிகத்திலும் சக்தி வழிபாடு இடம்பெற்றமைக்கான  சான்றுகள் பல உள.

சங்ககாலத் தமிழகத்திலும் மிகப்பழமைவாய்ந்த வழிபாடாக தாய்த் தெய்வ வழிபாடே நிலவியது. இழையணி சிறப்பிற் பழையோள் என கொற்றவை போற்றப்படுகிறாள். இன்றும் தாய்மொழி, தாய்நாடு என சக்தியை போற்றுகின்றோம்.
சக்திக்குரிய விரதங்களுள் நவராத்திரி விரதமும், கெளரி நோன்பும் முக்கியமானவையாகும்.                        

லோக மாதாவாகிய ஆதிபராசக்தி, கிரியாசக்தி,இச்சாசக்தி, ஞானாசக்தி என மூன்றுவித தேவிகளாக, துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி எனும் நாமங்கள் பூண்டு பிரபஞ்சம் முழுவதற்கும் அருள்பாலிக்கிறாள்.
ஆண்டு தோறும் புரட்டாதி மாதம் பூர்வபக்கப் பிரதமை முதல் நவமி ஈறாக ஒன்பது இரவுகளே நவராத்திரி எனப்படும்.
அவற்றுள் முதல் மூன்று நாட்களும் வீர வாழ்வையளிக்கும் துர்க்காதேவியின் வழிபாடாகும். நடு மூன்று  நாட்களும் பொருட் செல்வத்தைப் பெருக்கும் இலக்குமி வழிபாடாகவும் இறுதி மூன்று நாட்களும்  அறிவுச்செல்வந் தரும் சரஸ்வதி வழிபாடாகவும் அமைகின்றன.
மகாநவமியில் சைவ சமயத்தவர் புத்தக பூசை, ஆயுதபூசைகளை தங்கள் இல்லங்களில் பக்திசிரத்தையுடன் செய்வர்.
பத்தாவது தினம் வெற்றிக்குரிய விஜயதசமி எனப்படும். இத்தினத்தில் ஆரம்பிக்கப்படும் எந்தச்செயலும், இனிது விருத்தி அடையும் என்ற நம்பிக்கையில்  சிறார்களுக்கு ஏடுதொடக்குதல் அல்லது வித்தியாரம்பம் எனப்படும் அரிச்சுவடி எழுத தொடக்கி வைக்கப்படுதலும்  சங்கீதம், நடனம், வாத்தியக்கலைகள் முதலிய கலைகள் பயில ஆரம்பித்தலும் ஆலயங்களிலும்  பாடசாலைகளிலும் ஆசிரியர், அந்தணர் சமூகப்பெரியார் போன்றவர்களினால்  நடாத்தி வைக்கப்படும்.       

அன்னை பராசக்தி மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் யுத்தம் செய்து, வெற்றி கண்ட பத்தாம் நாள் விஜயதசமி. இந்த வெற்றித் திருநாளன்று வன்னிமரக்கிளை/வாழை வெட்டும் நிகழ்ச்சி ஆலயங்களில் இடம்பெறும். இந்த விஜயதசமி விழா 'தசரா' என வடஇந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அசுரனை அழித்த சக்திக்கு ஆண்டுதோறும் நன்றி தெரிவிக்கவும், நோயற்றவாழ்க்கை, வலிமை, செளபாக்கியம், செல்வம், ஞானம், கல்வி, ஆற்றல்,  நீண்டஆயுள்  இவற்றைப் பெறவேண்டி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழாவை இந்து ஆலயங்களிலும், இந்துக்களின் இல்லங்களிலும், கல்விநிலையங்களிலும், சில  காரியாலயங்களிலும், சனசமூகநிலயங்களிலும் கும்பம் வைத்து நவதானியம் விதைத்து சங்கீதம், நடனம், நாடகம், சொற்பொழிவு முதலிய கலை நிகழ்ச்சிகளுடன் இலங்கை இந்தியா தவிர தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 


விசேடமாக தென்னிந்தியாவில் கொலு வைக்கும் வைபவமும் முக்கியமாக இடம்பெறும். கொலுவில் மனிதர் விலங்குகள் பறவைகள் போன்ற பல்வேறு பொம்மைகளும், தெய்வத் திருவுருவங்களும் இடம்பெறும். அண்டசராசரம் அனைத்துமாகியுள்ளவள் தேவியே என்பதை இக்கொலு உணர்த்துகின்றது.             
துர்க்கா  சரஸ்வதி இலட்சுமி என நாமங்கள் கொண்ட ஆதிபராசக்தியின் திருவடியினை வணங்கிச் சகல செளபாக்கியங்களும் பெற்றுப் பேரருள் பெறுவோமாக.

 "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு 
அம்பிகையைச் சரணடைந்தால் அதிகவரம் பெறலாம் "   










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக