ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
கொலம்பஸ் தனது நண்பன் அன்டோனியோவிடம், தனது நீண்டகால உள்ளக் கிடக்கையை வெளியிட்டான். "நண்பா அதோ தூரத்தில் தெரிகிறதல்லவா 'பல்மாரியா' தீவு, அந்தத் தீவுக்கு நாமிருவரும் ஒரு சிறிய படகுப்பயணம் செய்துவிட்டுத் திரும்பிவிடுவோம், தீவு ஒன்றும் அவ்வளவு தூரமில்லை, நம்மால் முடிந்தளவு துடுப்பால் வலிப்போம், அதற்கப்பால் காற்றுவீசும் திசைக்கேற்ப ஒரு பாய்மரத்தையும், பாயையும் உபயோகிப்போம்" என்றான். தனது நண்பன் கொலம்பஸின் இந்தத் திட்டத்தைக் கேட்ட அன்டோனியோ, ஒருகணம் திகைத்துப் போய்விட்டான். 'துடுப்பு வலித்தல்', 'பாய்மரம்', பாய்' போன்ற வார்த்தைகள் அவனுக்கு அந்நிய மொழி வார்த்தைகள்போலக் காதில் விழுந்தன, அதுமட்டுமன்றி அந்தச்சிறுவன் நடுங்கிப்போனதற்குப் பல காரணங்கள் இருந்தன. 1. அவர்களிருவரும் கடற்கரையில் கட்டுமரங்களில் மட்டுமே படகுப்பயணம் செய்து பயிற்சி பெற்றுள்ளார்கள், ஆனால் 'பல்மாரியா' தீவு, மிகவும் ஆழமான கடலைத்தண்டி வெகுதொலைவில் இருந்தது(உண்மையில் பல்மாரியா தீவு அவர்களது ஜெனோவா கடற்கரையிலிருந்து 20 மைல்கள் தொலைவிலேயே இருந்தது ஆனால் அந்தச் சிறுவனாகிய அன்டோனியோவுக்கு அது நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவுபோலத் தென்பட்டது) 2. கொலம்பஸ் பயணம் செய்யத் திட்டமிட்ட அந்தப் 'பல்மாரியா' தீவில் பேய்களும், பூதங்களும், ராட்சத முதலைகளும் அல்லது 'டிராகன்களும்' (வேதாளங்கள்) வாழ்வதாகவும் பேசப்பட்டதை அன்டோனியோ நன்கு அறிவான். உண்மையில் இவைகள் எல்லாம் கட்டுக்கதைகளே என்பதை அந்த அப்பாவிச் சிறுவர்கள் அறியர். இடைநடுவில் மேற்படி 'பல்மாரியா' தீவைப் பற்றியும், மேற்படி பயமூட்டும் கட்டுக்கதைகளுக்கான பின்னணிகளையும் சிறிது பார்ப்போம்.
'பல்மாரியா தீவு' (PalMaria Island)
'பல்மாரியா' என்ற இத்தாலிய வார்த்தைக்குத் தமிழில் 'பனைமரம்' என்று அர்த்தம். ஆகவே மேற்படி தீவானது 'பனைமரத்தீவு' என்று பொருள் கொள்ளப்பட்டது. பனைகளே இல்லாத ஐரோப்பிய மண்ணில் பனைமரத்தீவு எப்படி இருக்கமுடியும்? அதாவது ஐரோப்பியர்கள் பனையைப் போல தோற்றமளிக்கும் கடற்கரையோர தாவரமாகிய, ஒரு தாவரத்தை (பேரீச்சமரம் அல்லது ஈச்சம்பற்றை போலக் காட்சியளிக்கும்) பல்மைரா(palmyra) அல்லது பாம்(palm) என்றே அழைக்கின்றனர். மேற்படி தீவில் அந்தத் தாவரங்கள் அதிகம் காணப்பட்டதால் அது 'பல்மாரியா தீவு' என்று அழைக்கப்பட்டது. மேற்படி தீவில் பகலில் மீனவர்களும், இரவில் கடற்கொள்ளையர்களும் தங்குவது வழக்கம். கடற்கொள்ளையர்கள் தங்களது நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலாக மீனவர்கள் எவரும் அந்தத் தீவிற்கு வரக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு பேய்கள், பூதங்கள் பற்றி கட்டுக்கதைகளைப் பரப்பியிருந்தனர்.பி.கு.: தற்காலத்தில் மேற்படி தீவு இத்தாலிக்கு அதிக வருமானம் பெற்றுத்தரும் உல்லாசப் பயணிகள் தீவாக விளங்குகிறது.
கொலம்பஸின் கேள்வியால் மிரண்டு போய்விட்ட சிறுவன் அன்டோனியோ தனது பயத்தை வெளியே காட்டாமல், தற்காலச் சிறுவர்கள் போலவே ஒரு நடிப்பை அரங்கேற்றினான். அதாவது தனக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டிருப்பதாகவும், தான் உடனடியாகத் தனது அன்னையிடம் செல்லவேண்டும் என்றும் கொலம்பசிடம் கூறியவன், அந்த இடத்தைவிட்டே ஓடிப்போய்விட்டான்.
(அடுத்த வாரமும் தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக