வியாழன், ஜனவரி 20, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 14

ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன் 
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை எங்கள் சிறுவனைக் காப்பாற்றிய உங்களுக்கு நன்றிகள், வாருங்கள் எல்லோரும் சேர்ந்து மதுவருந்தி, உணவு புசிப்போம்" என்றான் ஜெனோவா நாட்டு மீனவர் தலைவன் தனது அறியாமையைச் சமாளித்தபடி.
அவர்கள் மதுவருந்திக் கொண்டிருக்கையில் 'கொலம்பஸ் கண்டுபிடிக்கப் பட்டான்' என்ற செய்தி அவன் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது.

அவ்விடத்தில் நின்றுகொண்டிருந்த கொலம்பஸ்ஸின் நண்பன் அன்டோனியோ வினாலேயே மேற்படி செய்தி கொலம்பஸ்ஸின் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. கொலம்பஸ்சைக் கண்ட மாத்திரத்தில் தனது வீட்டிற்கு ஓடோடிச்சென்ற அன்டோனியோவுடன், கொலம்பஸ்சும் ஓடிப்போக நினைத்தான் ஆனால் ஜெனோவா நாட்டு மீனவர்களும், மீனவர் தலைவனும் அவனை அதட்டி கடற்கரைக்கு வெகு சமீபமாகவுள்ள ஒரு புற்தரையில் உட்காருமாறு பணித்தனர்.
 தனது நாட்டு மீனவர்கள் ஏன்இவ்வாறு முரட்டுத் தனமாக நடந்து கொள்கிறார்கள் என்பது சிறுவன் கொலம்பஸ் இற்கு புரியவில்லை, இருப்பினும் அவர்கள் சொற்படியே, தரையில் அமர்ந்தான்.
ஒரு சில நிமிடங்கள் இடைவெளியில் கொலம்பஸ்ஸின் தாயும், தந்தையும் சகோதரர்களும், உறவினர்களில் சிலரும் அக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். "காணாமல் போய்விட்டான்" என்றும், 'பிள்ளைகளைப் பிடிப்பவர்களால் பிடித்துச் செல்லப் பட்டுவிட்டான்' என்றும், "கடலில் மூழ்கி இறந்துவிட்டான்" எனவும் கருதப்பட்ட தங்கள் மகன் கொலம்பஸ் 'கண்டு பிடிக்கப் பட்டான்' என்ற செய்தியறிந்தபோது மிகவும் மகிழ்ந்த அவனது பெற்றோர், அவனை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்ற அந்தக் கணத்தில் தம்மை மறந்து, ஒருகணம் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் தாயானவள் ஒருவாறு தெளிந்தவளாய் ஓடோடிச் சென்று தனது மகனை அள்ளி அணைத்து, முத்தமழை பொழிந்தாள்.


கொலம்பஸ்ஸின் அருகில் சென்ற அவன் தந்தையும், உறவினர்களும் அவனது தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்தனர். கொலம்பஸ்ஸின் சகோதரர்கள் அவனுக்கருகில் செல்லாமல் சிறிது தூரத்திலேயே நின்றபடி அவனை ஒரு 'வேற்றுக் கிரக வாசியைப்' பார்ப்பது போலப் பார்த்தனர். மௌனத்தைக் கலைத்தபடி, மீனவர் தலைவன் 'கடந்த 24 மணி நேரத்தில்' கொலம்பஸ்இற்கு என்ன நடந்தது என்பது பற்றிய விளக்கத்தைச் சுருக்கமாக அவனது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறினான். கொலம்பஸ் யாரால் காப்பாற்றப் பட்டான் என்பதையும் கூறி, மொனாக்கோ நாட்டு மீனவர்கள் அமர்ந்திருந்த திசையை காட்டினான், அம்மீனவர்களை நன்றிப் பெருக்கோடு பார்த்த கொலம்பஸ்ஸின் பெற்றோர், அவர்களை நோக்கிக் குனிந்து தங்கள் நன்றியறிதலைத் தெரிவித்தனர்.
ஒரு சில நிமிடங்கள் கழித்து தனது வீட்டிற்கு சென்று திரும்பிய கொலம்பஸ்ஸின் தந்தை ஒரு மிகப் பெரிய கூடையில் 'ஜெனோவா' நாட்டின் பிரபலமான சில காய்ந்த திராட்சைப் பழங்களையும், ஒலிவ மரத்தின் காய்களையும், கொண்டுவந்து 'மொனாக்கோ' நாட்டு மீனவர் தலைவனிடம் கொடுத்தார். அம்மீனவர் தலைவனும் அவற்றை நன்றி கூறிப் பெற்றுக் கொண்டான்.


அவற்றைப் பெற்றுக்கொண்டபின், மொனாக்கோ நாட்டு மீனவர்கள் 'ஜெனோவா' நாட்டு மீனவர்களைக் கட்டியணைத்து, வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றனர். அவர்கள் தங்கள் படகைச் செலுத்துவதற்கு தயாராக தண்ணீருக்குள் கிடந்த 'நங்கூரத்தை' எடுத்து படகில் வைத்தபடி, படகின் பாய்களை விரிப்பதில் ஈடுபட்டிருந்தபோது ஜெனோவா நாட்டு மீனவர்கள் "மொனாக்கோ, ஜெனோவா ஒற்றுமை ஓங்குக" என்று கோஷமிட்டார்கள். அவர்களைப் போலவே படகிலிருந்த மொனாக்கோ நாட்டு மீனவர்களும் "ஜெனோவா, மொனாக்கோ ஒற்றுமை ஓங்குக" என்று கோஷமிட்டார்கள். அவர்களின் படகு நீரைக் கிழித்துக்கொண்டு எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தபோது கரையில் நின்ற ஜெனோவா நாட்டு மீனவர்களோடு சேர்ந்து கொலம்பஸ்ஸின் தந்தையும் கைகளை அசைத்து அவர்களை மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார்.
மிகவும் மகிழ்வோடு அவர்களை வழியனுப்பிவிட்டுத் திரும்பிய கொலம்பஸ்ஸின் தந்தை இப்போது ஒரு மிகப்பெரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியவரானார்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

1 கருத்து:

Aruna Sweden சொன்னது…

Thodar nallai ullathu.

கருத்துரையிடுக