ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:கடந்த அத்தியாயத்தின் நிறைவில் கர்ப்பத்தடை முறைகளைப்பற்றியும், அவைகளில் ஏற்படும் ஒழுங்கீனங்கள் பற்றியும் எதிர்வரும் வாரங்களில் விரிவாக எழுதவிருப்பதாக வாசகர்களுக்கு உறுதியளித்திருந்தேன், ஆனால் கடந்த வாரம் டென்மார்க் வீதியொன்றில் நான் கண்ட காட்சி ஒன்று என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்ததால் அதைப்பற்றிய விபரங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொண்டபின், ஏனைய குறிப்பிட்ட அம்சங்களைப் பற்றி ஆராயலாம் என்று எண்ணுகிறேன்.
நான் டென்மார்க்கில் வீதியொன்றில் கண்ட, என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய காட்சி இதுதான்:
"ஒரு பெண்மணி , ஏறக்குறைய முப்பது அல்லது 35 வயது மதிக்கக்கூடிய பெண்மணி , ஏழு அல்லது எட்டு மாதக் கர்ப்பிணியாக இருப்பார் என்று நினைக்கிறேன், வீதிகளால் சைக்கிளில் செல்வது மிகவும் ஆபத்தானது என்று கருதி, அனைவரும் சைக்கிளில் செல்வதைத் தவிர்த்திருந்த ஒரு நாளில் எதைப்பற்றியும் கவலையில்லாமல், சைக்கிளில் ஓரளவு வேகமாகச் சென்றுகொண்டிருந்தார். இந்தச் சம்பவமே என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அப்பெண்மணி எந்தவிதமான ஆபத்துமில்லாமல்,(கருவிலிருக்கும் சிசுவுக்கும்) வீடு போய்ச் சேர்ந்திருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாக இருந்தது."
சரி அப்பெண்மணி சைக்கிளில் சவாரி செய்வதில் என்ன தவறு? ஐரோப்பாவில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாலும், ஆண்களுக்கு அல்லது சராசரி பெண்களுக்கு உரிய வேலைகளை செய்வது சாதாரண விடயம்தானே? இதில் அதிர்ச்சியடைவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கக்கூடிய, ஆசிய நாடுகளில் வாழ்கின்ற வாசகர்களுக்கு நான் கூற விரும்பும் விளக்கம் இதுதான்:-
இங்கு மேற்கத்திய நாடுகளிலும், அவுஸ்திரேலியாவின் சில மாநிலங்களிலும் பனிப்பொழிவு நிகழும் கார்த்திகை தொடங்கி மாசி மாதம் வரையிலான காலப்பகுதி மிகவும் ஆபத்தான கால கட்டமாகும். ஏனெனில் இக்காலப் பகுதியிலேயே குறிப்பிட்ட சகல நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான வீதி விபத்துக்கள் நடைபெறுகின்றன. பாதசாரிகள், சைக்கிளில், மோட்டார் சைக்கிளில், வாகனங்களில்(குறிப்பாக கார்களில் செல்வோர்) மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலப்பகுதி இதுவாகும். ஏனெனில் வானிலிருந்து 'மணல்போல' (தேங்காய்ப் பூப்போல) நிலத்தில், வீதிகளில் விழும் பனிப்பொழிவானது, வீதிகளை, நடைபாதைகளை மூடியிருக்கும். இவைகள் அந்தந்த நாட்டு அரசு நிறுவனங்களாலும், பொதுமக்களின் பங்களிப்பின் மூலமும் உடனுக்குடன் வழித்துத், துடைத்துச் சுத்தம்
செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு பனிப்பொழிவு சில வேளைகளில் தொடர்ந்தாற்போல் இரண்டு மூன்று நாட்களுக்கு தொடருமானால் அதனைச் சுத்தம் செய்ய முடியாது போய்விடும். அதன்பின்னர் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். காரணம் இரண்டு மூன்று நாட்களாகக் கொட்டிய பனி மிகவும் உயரமாக வீதிகளை மூடியபடி கிடக்கும். உறைபனி நிலையிலிருந்து வெப்பம் சிறிது அதிகரிக்குமானால் அந்தப் பனிக்கட்டிப் படலம் முதலில் இறுகிப் பின்னர் உருகித் தண்ணீராக ஓட ஆரம்பிக்கும். இக்கால கட்டமே மேற்கத்திய நாடுகளில் வீதிப் போக்குவரத்தில் மிகவும் ஆபத்தான கால கட்டமாகும். காரணம் பனிக்கட்டிப் படலம் வீதிகள் முழுவதையும் (நடைபாதை உட்பட) பளிங்குக் கல்போல மூடியிருக்கும். இது மிகவும் வழுக்கும் தன்மையுள்ளதாக இருக்கும். இத்தகைய வீதிகளால் பயணம் செய்கின்ற பாதசாரிகள், சைக்கிளில் செல்வோர், வாகனங்களில் செல்வோர் என அனைத்துத் தரப்பினரும் விபத்துக்கு உள்ளாகின்றனர். டென்மார்க்கில் மட்டும் ஒவ்வொரு வருடமும் பனிப் படலத்தில் வழுக்கி, விபத்துக்குள்ளாவதால் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர், ஆயிரக் கணக்கானவர்கள் காயங்களுக்கு உள்ளாகின்றனர்.(இவர்களில் பலர் கை, கால் முறிவுக்கும் உள்ளாகின்றனர்) டென்மார்க்கில் மட்டும் ஒரு வருடத்தில், பனிப் பொழிவுக் காலத்தில் மட்டும் நாலாயிரம் கார்கள் விபத்துக்குள்ளாகின்றன என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக