வியாழன், ஜனவரி 13, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 13

ஆக்கம். இ.சொ.லிங்கதாசன் 
கொலம்பஸ் ஓடோடிச் சென்று தனது நண்பனைக் கட்டி அணைத்து முத்தமிட்டான். நண்பனின் செய்கை அண்டோனியோவைத் திகைப்பில் ஆழ்த்தியது. இதற்கிடையில் வேற்று நாட்டு மீனவர்கள் தங்கள் கரையில் வந்திறங்கிய செய்தியறிந்து ஜெனோவாவின் மீனவர்களின் தலைவன் அவ்விடத்திற்கு விரைந்து வந்து சேர்ந்தான். அவனோடு கரையில் இருந்த மீனவர்களும் சேர்ந்துகொண்டு, கொலம்பஸ்சைக் கூட்டி வந்த மொனாக்கோ நாட்டு மீனவர்களைச் சுற்றி வளைத்தனர்.


நீங்கள் எல்லாம் யார், எதற்காக இங்கு வந்தீர்கள்? எமது நாட்டில் உங்களுக்கு என்ன வேலை? என்பன போன்ற கேள்விகளே ஜெனோவா நாட்டு மீனவர்களிடமிருந்து பிறந்தன. அது மட்டுமில்லாமல் சில மீனவர்கள் வாள், ஈட்டி, கத்தி, கண்ட கோடரி, போன்ற ஆயுதங்களைக் கையில் ஏந்தியவர்களாய் அவர்களோடு ஒரு போருக்குத் தயாரானவர்களாய், தங்கள் தலைவனின் ஆணைக்காகக் காத்து நின்றனர்.


நிலைமை விபரீதமாகுவதை உணர்ந்துகொண்ட மொனாக்கோ நாட்டு மீனவர்களில் இத்தாலிய மொழி தெரிந்த மீனவன் பேச ஆரம்பித்தான். "கனவான்களே, நான் கூறுவதைக் கொஞ்சம் கேளுங்கள், நாங்கள் யாருமே தங்களுக்கு துன்பம் விளைவிக்கும் நோக்கில் இங்கு வரவில்லை, நாம் தீய எண்ணத்தோடு வந்திருப்போமானால், பகலில் இங்கு வந்திருக்க மாட்டோமே, தவிரவும் கையில் ஆயுதங்களோடு அல்லவா வந்திருப்போம். உங்கள் மத்தியிலிருந்து கடலலையால் அலைக்கழிக்கப் பட்டுக், காணாமல்போன இந்தச் சிறுவனை உங்கள் கைகளில் ஒப்படைப்பதற்காகவே வந்தோம், தயை கூர்ந்து எம்மைப் புரிந்து கொள்ளுங்கள்" என்று அவன் கூறி முடிக்கும்போது ஜெனோவா நாட்டு மீனவர்கள் அனைவரும் தங்கள் செய்கைக்காக வெட்கித் தலை குனிந்தனர். அவர்களில் பலர் தங்களது கைகளில் இருந்த ஆயுதங்களை ஒரு ஓரமாக மறைத்து வைக்கத் தொடங்கினர்.


மேற்படி இத்தாலிய மொழி தெரிந்த அம்மீனவன் சிறிது தூரத்தில் நின்றுகொண்டிருந்த கொலம்பஸ்சைப் பார்த்து "சிறுவனே இங்கே வா, உனக்கு என்ன நடந்தது, என்பதை இவர்களுக்கு எடுத்துக் கூறு." என்று பணித்தான்.
நடந்துகொண்டிருக்கும் விடயங்களை மிகுந்த திகிலுடன் பார்த்துக் கொண்டு நின்ற கொலம்பஸ் அவர்களின் முன்னால் வந்து நின்றானாயினும், அவர்கள் மத்தியில் பேசுகின்ற துணிவை அவன் முற்றாக இழந்துவிட்டிருந்தான். பயத்தினால் அவனது கை,கால்கள் நடுங்க ஆரம்பித்தன. மெதுவாக விம்மிய படியே பேச ஆரம்பித்தான். "படகு...........பல்மாரியா.............காற்று.......மழை...........அந்நிய தேசம்" இவ்வாறு துண்டு துண்டாக உடைந்த வார்த்தைகளில் அவன் பேசியதை யாருமே புரிந்து கொள்ளவில்லையாயினும், சூழ்நிலையை வைத்து அவன் கூறியவைகள் என்ன என்று அவர்கள் புரிந்து கொண்டனர். இது இவ்வாறிருக்கையில் கொலம்பஸ் எடுத்துச் சென்று கடலில் மூழ்கவிட்ட படகுக்குச் சொந்தக்காரனான மீனவன் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான், அவன் மிகவும் சுருக்கமாக நடந்தது என்ன என்று தனது மீனவர் தலைவனுக்கு எடுத்துரைத்தான். அவன் கூறியவைகளை உள்வாங்கிக் கொண்ட ஜெனோவா நாட்டு மீனவர் தலைவன், தனது மீனவர்களின் செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டவனாய் பிரெஞ்சு மொழியில் பேச ஆரம்பித்தான். "ஐயன்மீர் உங்களை வணங்குகிறேன், உங்களை நாம் தவறாகப் புரிந்து கொண்டோம், உங்கள் உதவி மிகவும் விலை உயர்ந்தது, ஜெனோவாவிற்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும், ஜெனோவா-பிரான்ஸ் ஒற்றுமை ஓங்கட்டும்" என்று ஒரு சிறிய ஆனால் மிகவும் பண்பான வரவேற்புரையை நிகழ்த்தினான்.


இடையில் குறுக்கிட்ட மொனாக்கோ மீனவன் "அன்பரே, ஒரு சிறிய திருத்தம்  நாங்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களில்லை 'மொனாக்கோ' நாட்டைச் சேர்ந்தவர்கள்" என்றான். எதுவாக இருந்தாலும் பரவாயில்லை எங்கள் சிறுவனைக் காப்பாற்றிய உங்களுக்கு நன்றிகள், வாருங்கள் எல்லோரும் சேர்ந்து மதுவருந்தி, உணவு புசிப்போம்" என்றான் ஜெனோவா நாட்டு மீனவர் தலைவன் தனது அறியாமையைச் சமாளித்தபடி.
அவர்கள் மதுவருந்திக் கொண்டிருக்கையில் 'கொலம்பஸ் கண்டுபிடிக்கப் பட்டான்' என்ற செய்தி அவன் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது.
(தொடரும்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக