ஞாயிறு, ஜனவரி 30, 2011

முதற்பரிசு மூன்றுகோடி - அத்தியாயம் 12

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
சிங்கப்பூர் வழிகாட்டுகிறது


மழைத் தண்ணீரைச் சேகரித்து உபயோகித்தல் 
இக்கட்டுரையில் கடந்த சில அத்தியாயங்களின் தலைப்பாக 'சிங்கப்பூர் வழிகாட்டுகிறது' என்று நான் எழுதியதற்குக் காரணம், அந்நாடு மேற்படி திட்டங்களை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்துவது மட்டுமன்றி, மேற்படி 'மழைநீரைச் சேகரிக்கும்' திட்டத்தில் மேலும் ஒரு படி முன்னேறி சிங்கப்பூரின் பிரதான விமான நிலையமாகிய 'சாங்கி விமான நிலையத்தின்' (Changi Airport)  சுற்றாடல், மாடிக்கட்டிடங்களில் மட்டுமல்லாமல் 'விமான ஓடுபாதையிலும்' கிடைக்கும் மழைத் தண்ணீரை மிகவும் கவனமாகத் திட்டமிட்டுச் சேகரித்து விமான நிலையத்தின் தண்ணீர்த் தேவையில் 1/3 (மூன்றிலொரு பங்கு) பங்கை ஈடு செய்கிறது. இதன்மூலம் அப்பகுதியில் மட்டும் வருடமொன்றுக்கு 390,000 அமெரிக்க டொலர்களைச் சேமிக்க முடிகிறது(மிச்சம் பிடிக்க முடிகிறது.


சரி இப்போது இவ்விடத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறதல்லவா? அதாவது மழைநீரைச் சேகரித்து உபயோகிக்கும்போது அத் தண்ணீர் குடிப்பதற்கோ, அன்றேல் சமைப்பதற்கோ ஏற்றதா? என்ற ஒரு கேள்வி எழுவது இயற்கைதானே? இதற்கான பதில் "இல்லை" என்பதாகும். சரி அவ்வாறாயின் ஏன்? என்றொரு புதிய கேள்வியும் எழுகிறதல்லவா? அக்கேள்விக்கான விடை இதுதான்: அதாவது மாடிக் கட்டிடங்களின் மேற்பரப்புகள், வீடுகளின் கூரைகள் போன்றவற்றினூடாக ஓடிவரும் மழைத் தண்ணீரில் காற்றிலுள்ள மாசுக்கள்(தூசிப்படலம், வாகனங்களின் புகையால் உண்டாகிய கார்பன் படலம் போன்றவை) கலப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால் இத்தகைய தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்பதே மேற்படி கேள்விக்கான விடையாகும். சரி அவ்வாறாயின் இத் தண்ணீரை ஏன் சேகரிக்கிறார்கள்? எதற்குப் பயன்படுத்துகிறார்கள்? என்ற புதிய கேள்விகள் முளைக்கின்றன. அவற்றிற்கும் விடை உள்ளது. கடந்த அத்தியாயத்தை ஒரு தடவை திரும்பவும் பார்க்கவும். அதாவது கடந்த அத்தியாயத்தில் நான் கூறியது போல இத் தண்ணீரானது, குடித்தல், சமைத்தல் போன்ற தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகள் அத்தனைக்கும் பயன்படுகிறது. உதாரணமாக: நீச்சற் தடாகங்கள், தீயணைப்பு, குளித்தல், மலசலகூடத் தண்ணீர்த் தேவை, மரம்,செடி, கொடிகளுக்கு நீர்பாய்ச்சுதல் போன்ற இன்னோரன்ன தேவைகளுக்குப் பயன்படுகிறது.
சரி குடிப்பதற்கோ, சமைப்பதற்கோ உபயோகிக்க முடியாத இம்மழைத் தண்ணீரை, மேற்கூறிய தேவைகளுக்குப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? என்றொரு கேள்வியும் எழலாம். அதற்கும் பதில் உள்ளது. அதாவது இம்மழைத் தண்ணீர் மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளிலேயே சேகரிக்கப் படுகிறது. விரிவாகக் கூறுவதாயின் ஒரு நாளில் மழை பெய்யும்போது, மாடிக்கட்டிடங்களின் வழியாகவும், வீட்டுக் கூரைகளின் வழியாகவும் ஓடுகின்ற தண்ணீரில் முதல் பதினைந்து நிமிடங்களும் ஓடுகின்ற தண்ணீர் சேகரிப்பு நிலையத்திற்கு சென்று சேராதவாறும், பதினாறாவது நிமிடத்திலிருந்து மழைத்தண்ணீர் சேகரிப்பு நிலையத்திற்கு செல்லுமாறும் பொறிமுறை(Mechanism) ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. காரணம் மாடிகளிலும், வீட்டுக் கூரைகளிலும் படிந்து கிடக்கும், அழுக்கு, தூசிப்படலம், வாகனங்களின் புகை போன்றவை இந்த முதல் 15 நிமிடமும் பெய்கின்ற மழையில் கழுவிச் செல்லப் பட்டுவிடும். மீதியாக 16 ஆவது நிமிடத்திலிருந்து தொடர்ந்து எத்தனை நிமிடங்கள்/மணித்தியாலங்கள் மழை பெய்கிறதோ, அவ்வளவு மழைநீரும் 'மழைநீர் சேகரிப்பு நிலையத்திற்கு' சென்று சேருகின்ற வகையிலேயே பொறிமுறைகள் அமைக்கப் பட்டுள்ளன.
இவ்வாறு சிக்கலான ஒரு செயற்திட்டமாக இருப்பினும், சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஏன் இத் திட்டத்தை பின்பற்றுகின்றன?. அதற்கும் காரணம் இருக்கிறது. உலகிலேயே தண்ணீர்ப் பஞ்சம் உள்ள நாடுகளின் வரிசையில் 'முதலாமிடத்தில்' இருப்பது சிங்கப்பூர் ஆகும். வழமையாக ஒரு நாட்டில், பல வருடங்கள் மழை பெய்யாமல் விட்டால் மட்டுமே அந்நாடு 'தண்ணீர்ப் பஞ்சம்' உள்ள நாடுகளின் பட்டியலில் சேரும். இவ்வாறிருக்கையில் வருடாந்தம் 2400 மில்லி மீற்றர் மழை பெறும் 'சிங்கப்பூர்' எவ்வாறு 'தண்ணீர்ப் பஞ்சம்' உள்ள நாடுகளின் வரிசையில் முதலிடத்திற்கு வந்தது?
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக