வியாழன், ஜனவரி 06, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 12


ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
அவர்களின் பேச்சின் இடையிடையே 'மீனவர் தலைவன்' படகு செல்ல வேண்டிய திசை பற்றியும், பாய்மரத்தையும், பாயையும் சுருக்க வேண்டிய விதம் பற்றியும் உரத்த குரலில் கட்டளைகளை பிரெஞ்சு மொழியில் பிறப்பித்துக் கொண்டிருந்தான். அவர்களின் உரத்த குரலிலான பேச்சுக்கள் கொலம்பசுக்கு சிறிது அச்சத்தை ஏற்படுத்தியது, இருப்பினும் சில மணி நேரங்களின் பின்னர் அவன் கண்ணில் தனது 'ஜெனோவா' கடற்கரை தென்படவும் பயமெல்லாம் பறந்து போனது, உள்ளத்தில் எல்லையில்லா ஆனந்தம் பிறந்தது.
 
இதோ கடந்த 24 நான்கு மணி நேரங்களுக்கு மேலாக அவன் காண்பதற்குத் துடித்துக்கொண்டிருந்த தனது சொந்த நாட்டின் கடற்கரை தென்படுகிறது, இதை விடவும் அவனுக்கு ஆனந்தம் அளிக்கும் காட்சி வேறெதுவும் உண்டோ? தன் தாயை, தந்தையை, சகோதரர்களை இனி எப்போது காண்போம் என்று ஏங்கியிருந்த அந்தச் சிறுவன் உடலில் புது இரத்தம் பாய்ந்ததுபோல் 

Kids smiling boy 2உணர்ந்தான். அவன் உள்ளத்தில் தோன்றிய ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இவ்வளவு நேரமும் பணிவோடு படகில் அமர்ந்திருந்த அவன் முதலில் படகில் எழுந்து நின்றான். தன்னை யாருமே, கடிந்து அல்லது அதட்டி எதுவும் கூறவில்லை என்று தெளிந்ததும் படகிலேயே துள்ளிக் குதித்தான். ஊ, ஊ, என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பினான். "என் தாயகம் வந்து விட்டது, என் தாயகம் கண்ணில் தெரிகிறது, ஆண்டவரே நன்றி, ஆண்டவரே நன்றி" என்று கூவியபடி இரண்டு கைகளையும் விரித்து வானத்தை நோக்கி நீட்டினான். இன்று காலைமுதல் தங்கள் படகில் மிகவும் கவலையோடு, அமைதியாக அமர்ந்திருந்த சிறுவனின் தற்போதைய செய்கை படகிலிருந்த மீனவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் தன் தாயகத்திற்கு வந்து சேர்ந்தவுடன் ஒரு சிறுவன் எவ்வாறு மகிழ்வான் என்பதை உணர்ந்த அந்த வயது முதிர்ச்சியுள்ள மீனவர்கள் அனைவருமே சிறுவனது செய்கையால் நெகிழ்ந்தனர்.


அரை மணி நேரப் பயணத்தின் பின்னர் அவர்கள் ஜெனோவாக் கடற்கரையில் தங்கள் படகை நங்கூரமிட்டனர். ஓரளவு ஆழமான கடற் தண்ணீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தனர். அவர்கள் நடக்கும்போது சிறுவனாகிய கொலம்பஸ்ஸை  மீனவர் தலைவன் தனது தோளில் தூக்கி வைத்துக் கொண்டான். அவர்கள் கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். கரையில் ஜெனோவா நாட்டு மீனவர்கள் தங்கள் வலைகளைக் காயவிட்டபடியும், படகுகளைப் பழுது பார்த்துக் கொண்டும், மீன்களை வெயிலில் உலர்த்தும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர். அன்று ஒரு வெயில் நாள் என்பதால் கடற்கரையில் பல சிறுவர்கள் விளையாடிக் கொண்டு நின்றனர். கொலம்பஸ் என்ற தங்கள் நண்பனைச் சுமந்தபடி ஒரு இராட்சத உருவமுள்ள மனிதன், பல மீனவர்கள் சகிதம் வருவதைக் கண்டு முதலில் பயந்தனர். பின்னர் ஆச்சரியத்தோடு நோக்கினர். அவர்களில் ஒருவன் கொலம்பஸ்ஸை நோக்கி "கொலம்பஸ், கொலம்பஸ், உனக்கு என்னவாயிற்று, நீ எங்கே போய்விட்டாய்? உன்னை உன் பெற்றோர் ஊர் முழுதும் தேடுகிறார்கள் தெரியுமா? என்று உரத்த குரலில் கூறினான். கொலம்பஸ் சத்தம் வந்த திசையை நோக்கினான். அங்கு நின்றது 
வேறு யாருமல்ல, அவனது உற்ற நண்பன் அண்டோனியோவே அங்கு நின்றிருந்தான். மீனவர் தலைவன் கொலம்பஸ்ஸை தனது தோளிலிருந்து இறக்கி விட்டான். கொலம்பஸ் ஓடோடிச் சென்று தனது நண்பனைக் கட்டி அணைத்து முத்தமிட்டான். நண்பனின் செய்கை அண்டோனியோவைத் திகைப்பில் ஆழ்த்தியது. இதற்கிடையில் வேற்று நாட்டு மீனவர்கள் தங்கள் கரையில் வந்திறங்கிய செய்தியறிந்து ஜெனோவாவின் மீனவர்களின் தலைவன் அவ்விடத்திற்கு விரைந்து வந்து சேர்ந்தான். அவனோடு கரையில் இருந்த மீனவர்களும் சேர்ந்துகொண்டு, கொலம்பஸ்சைக் கூட்டி வந்த மொனாக்கோ நாட்டு மீனவர்களைச் சுற்றி வளைத்தனர்.
(தொடரும்)         
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக