புதன், ஜனவரி 26, 2011

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 17

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
நெல்லுச் சோறுக்கும், நெத்தலி மீனுக்கும் அத்தகைய ஒரு அரிய சுவை (Combination) இருக்கிறதா? என்றேன் அவரிடமிருந்து மேலும் தகவல்களை அறியும் நோக்கத்தில்."என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள், நெத்தலி மீனாகட்டும், நெத்தலிக் கருவாடு ஆகட்டும் தமிழ் மக்களில்(அசைவம் உண்பவர்களில்) ஒரு அங்கமாயிற்றே, இதை  நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்". என்று ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தபடியே கேட்டார்.
அவர் கேள்வியை முடிக்குமுன்னரே இடையில் குறிக்கிட்ட நான் "இல்லையில்லை, நீங்கள் நினைப்பதுபோல் எனக்கு 'நெத்தலி மீன்' என்றால் என்னவென்றே தெரியாது என்று அர்த்தமல்ல, சிறு வயதில் என் பேர்த்தியார் சமைத்த நெத்தலி மீன் குழம்பையும், நெத்தலிமீன் பொரியல், நெத்தலிக்கருவாட்டுப் பொரியல் போன்றவற்றையும் நாக்கைச் சப்புக்கொட்டி சாப்பிட்டு வளர்ந்தவன் நான், இப்போதும் அதை நினைக்கையில் வாயூறுகிறது. இருப்பினும் நெத்தலிக் கருவாடும், நெத்தலி மீனும் இன்றுவரை இலங்கையில் அடித்தட்டு மக்களின் உணவாகவே இருந்து வருகிறது, மேல்தட்டு மக்கள் நெத்தலி மீனையோ, நெத்தலிக் கருவாட்டையோ விரும்பி/தேடி உண்பார்கள் என்று நான் எண்ணவில்லை" என்று எனது பங்கிற்கு கூறினேன்.
அவர் தொடர்ந்தார். நீங்கள் கூறுவது ஓரளவுக்குச் சரியானது, ஆனால் இந்த நெத்தலி மீன் (Anchovy/White Bait), கருவாடு தமிழகத்தில் அடித்தட்டு மக்களின் உணவு என்று உறுதியாகக் கூற முடியாது காரணம் அதன் சுவை. அதன் சுவையில் கிறங்கிப் போயிருக்கும் பல பணக்காரக் குடும்பங்களை நான் அறிவேன். நெத்தலி மீனாகட்டும், கருவாடு ஆகட்டும் ஏனைய மீனினங்களை விடவும் சுவை அதிகமானவை. அத்துடன் இந்த மீனினம் அத்தனை மீன் இனங்களிலும் மிகவும் சிறியது, குறிப்பாக ஒரு முழு வளர்ச்சியடைந்த 'நெத்தலி மீன்' 6 சென்டி மீட்டர்களுக்குமேல் வளர்வதில்லை. மிகவும் சிறிய மீனினமாக இருப்பதால் ஏனைய மீன் இனங்களைவிடவும் அதிக அளவில் உயிர்ச் சத்துக்களையும் (Vitamins), கல்சியம், இரும்பு போன்ற தாதுப் பொருட்களையும், குறைந்த அளவில் கொழுப்பையும், அதிக அளவில் புரதத்தையும் கொண்டுள்ளது. இது கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற ஒரு மிகச் சிறந்த உணவாகும். குழந்தைகளின் பல், எலும்புகள் வளர்ச்சியடைவதற்கும், வலுப் பெறுவதற்கும் உதவும் ஒரு மலிவான திட உணவாகும். ஏனைய மீன்களைப்போல் சாப்பிடும்போது 'தொண்டையில் முள் சிக்கிவிடும்' என்று குழந்தைகள் பயப்படத்தேவையில்லை. ஏனென்றால் நெத்தலி மீனின் முட்கள் மிகச் சிறியவை, அவை குழந்தைகளின் பற்களாலேயே அரைபடக் கூடிய தன்மை உடையவை. மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் நாடுகளில் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப் பட்டு கடைகளில் விற்கப்படும் 'தின் பண்டங்களில்' நெத்தலிக் கருவாடு சேர்க்கப் படுகிறது" என்று நிறுத்தினார்.
"என்னது குழந்தைகளின் தின்பண்டங்களில் நெத்தலிக் கருவாடா? என்றேன் வியப்புடன். அவர் தொடர்ந்தார். "நான் ஏற்கனவே கூறியதுபோல், குழந்தைகளுக்கு மட்டுமின்றி, கர்ப்பிணித் தாய்மாருக்கும் மிகச் சிறந்த ஒரு சத்துள்ள உணவு இது. இதன் மகத்துவம் தெரியாமல் பாட்டிமார்கள் சொல்கின்ற செவி வழி வந்த நம்பிக்கையாகிய "நெத்தலி மீன் ஒவ்வாமையை (Alergi) ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள். இது மருத்துவ ரீதியாக இன்றுவரை ஏற்றுக் கொள்ளப் படவோ, நிரூபிக்கப் படவோ இல்லை"
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

முருங்கைக்காய் நெத்தலிக் கருவாடு குழம்பு


ஆயத்த நேரம் : 15 நிமிடம்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடம்
பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு

முருங்கைக்காய் - 2
நெத்தலிக் கருவாடு - 50 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
புளி - ஒரு எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


நெத்தலிக் கருவாட்டை தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும்.
முருங்கைக்காயை ஓரளவு துண்டுகளாக்கி இரண்டாக பிளக்கவும்.
புளியைக் கரைத்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, மிளகாயையும் நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
பின்பு வெங்காயம், பெருஞ்சீரகத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் முருங்கைக்காய், தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
புளிக்கரைசல் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதி வந்ததும் நெத்தலிக் கருவாட்டை சேர்த்து வேகவிடவும்.
முருங்கைக்காய் நன்கு வெந்ததும் இறக்கவும். இதை சோறு, புட்டு, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
Note:
விரும்பினால் பால் அரை கப் சேர்க்கலாம்.

 நன்றி: www.arusuvai.com




2 கருத்துகள்:

Sakthy, Denmark சொன்னது…

Thanks for the recipe

பெயரில்லா சொன்னது…

i am very like

கருத்துரையிடுக