வியாழன், மார்ச் 17, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா? கொடியவனா? அத்தியாயம் 20

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
இவ்வாறு பல காதலிகள் அல்லது ஆசைநாயகிகள் வைத்திருக்கும் ஒரு மனிதனுக்கு அவனது 'செல்வம்' அல்லது 'பதவி' யைக் காரணமாக வைத்துத் தமது புதல்விகளுள் ஒருத்தியை திருமணம் செய்து வைப்பதற்கு ஒரு தந்தையானவன் தயங்குவதில்லை. இவ்வாறு ஒரு வணிகனுக்கோ அல்லது வணிகப் பங்காளனுக்கோ, படையதிகாரிக்கோ தனது மகளைத் திருமணம் செய்து வைப்பது ஒரு 'கௌரவமான' நடவடிக்கையாக அக்காலத் தந்தையர்களால் கருதப் பட்டது. இந்த வகையில் 1479 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் போர்த்துக்கல் நாட்டின் போர்ட்டோ சண்டோ(Porto Santo) தீவின் ஆளுநராகிய பார்டோ லோமியோ பெரேஸ்டெறேல்லோ(Bartolomeu Perestrello) தனது மகளாகிய பிலிப்பா (FilipaMoniz Perestrello) என்பவளைக் கொலம்பஸ்சிற்கு திருமணம் செய்து வைத்தான். அப்போது அந்தத் தந்தைக்குத் தெரியாது கொலம்பஸ் இன்னொரு நாட்டில் குடியேறும்போது தனது மகளாகிய பிலிப்பா, கொலம்பஸ்சால் கைவிடப் படுவாள் என்பது.
இந்தத் திருமணத்தின் ஊடாக கொலம்பஸ்-பிலிப்பா தம்பதிகளுக்கு 1479-1480 காலப் பகுதியில் டீகோ கொலம்பஸ்(Diego Columbus அல்லது போர்த்துக்கேய மொழியில் Diogo Colombo/Diego Colón Moniz) என்ற மகன் பிறந்தான். இவனும் பிற்காலத்தில் தனது தந்தையைப் போலவே புகழ் வாய்ந்த கடலோடியாகவும், போர்த்துக்கல் நாட்டினரால் ஆளப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் சாண்டோ டொமிங்கோ போன்ற(தற்போதைய டொமினிக்கன் குடியரசு/ கெயிட்டியின் அயல்நாடு) நிலப் பரப்புகளுக்கு ஆளுநராகவும் விளங்கினான் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இக்காலப் பகுதியும் கொலம்பஸ்ஸின் வாழ்வில் மிகவும் எழுச்சியான காலப் பகுதி என்றே கூறவேண்டும் ஏனெனில் 1482 தொடங்கி 1485 காலப் பகுதிக்குள் போர்த்துக்கல் நாட்டின் சார்பில் மேற்கு ஆபிரிக்க நாடுகளில்(மேற்கு சகாரா தொடக்கம் பெனின் வரை சுமார் 16 நாடுகள்) வர்த்தகத்தில் ஈடுபடும் பொறுப்பு போர்த்துக்கேய அரசரால் கொலம்பஸ் இற்கு வழங்கப் பட்டது. இப்பதவியானது அக்காலத்தில் மிகவும் புகழ்வாய்ந்த, பொறுப்புமிக்க, செல்வச் செழிப்பு மிக்க ஒரு பதவியாகும். காரணம் வெளிநாட்டு வாணிபம் மற்றும் கடற்கலங்களைக் கொள்ளையடித்தல் போன்ற முயற்சிகளின் மூலம் சம்பாதிக்கப் படும் ஏராளமான செல்வங்களைக் கையாளும் பொறுப்பு வணிக அதிகாரியாகிய கொலம்பஸ் இற்கு உரியதாகும். இப்பதவியின் மூலம் கொலம்பஸ் தனது போர்த்துக்கேய அரசிற்கும், தனக்கும் ஏராளமான செல்வங்களைச் சேர்த்துக் கொண்டார். இக்காலத்தில் உள்ள அரசாங்க அமைச்சுப் பதவிகளுடன் கொலம்பஸ்ஸின் பதவியை ஒப்பிட்டால் 'வெளியுறவுத் துறை அமைச்சர்' அல்லது, 'வணிகத்துறை அமைச்சர்' போன்ற பதவிகளோடு ஒப்பிட முடியும். ஆனால் ஒரேயொரு வேறுபாடு இக்கால அமைச்சர்களுக்கு அரசினால் வழங்கப்படும் 'சம்பளம்' மட்டுமே 'செல்வம்' என்ற வரையறைக்குள் அடங்குகிறது.ஆனால் அக்காலத்தில் இத்தகைய வணிக அதிகாரிகள் அரசாங்கத்திற்குச் சேர்த்துக் கொடுக்கும் 'செல்வத்தின்' அடிப்படையில் அவர்களுக்கான 'ஊதியமோ' 'பாகமோ' அரசினால்/அரசனால்  தீர்மானிக்கப் படும். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற மேலைத் தேசத்தவர்கள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக 'வியாபாரிகளாகவே' ஆசிய நாடுகளுக்குள் காலடி வைத்தனர் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும்.
இவ்வாறாக கொலம்பஸ் பிலிப்பாவைத் திருமணம் செய்த ஒரு சில ஆண்டுகளுக்குள் போர்த்துக்கல் நாட்டின் வியாபாரக் கேந்திரமாக மேற்கு ஆபிரிக்காவின் கரையோரப் பகுதி நாடாகிய தற்போதைய கானாவில்(Ghana) உள்ள 'எல்மினா'(Elmina) எனும்  பெயர்கொண்ட நகரத்தில் நிறுவப்பட்ட 'போர்த்துகேய வியாபாரத் தலைநகரத்தை' நிர்வகிக்கும் பொறுப்பில் ஏறக்குறைய 6 ஆண்டுகளை கொலம்பஸ் செலவிட்டார்.இதே காலப் பகுதியில் கொலம்பஸ்ஸின் முதலாவது மனைவி பிலிப்பா போர்த்துக்கல் நாட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனாள்.திருமணத்தின் பின் கானாவில்(ஆபிரிக்காவில்) குடியேறிய கொலம்பஸ் ஆறு ஆண்டுகளில் ஒரு தடவைகூட போர்த்துக்கல்லில் வாழ்ந்த தன் மனைவி பிலிப்பாவைச் சந்தித்ததோ, கவனித்துக் கொண்டதோ கிடையாது. இவ்வாறு பிலிப்பாவுக்கு அவளது தந்தையால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட 'மண வாழ்வு' அவளது மரணத்துடன் முற்றுப் பெற்றது.  

(தொடரும்) 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக