சனி, மார்ச் 19, 2011

தாரமும் குருவும்...,

 இ.சொ.லிங்கதாசன் 
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 1.2

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

அப்போது எனக்கு ஐந்து வயதாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன். நானும் எனது பெற்றோரும் இலங்கையின் யாழ் மாவட்டத்தில் உள்ள மண்டைதீவு என்னும் கிராமத்தில் வாழ்ந்து வந்தோம். எல்லாப் பெற்றோர்களையும் போலவே எனது பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் கல்வியைத் தொடரவேண்டும் என்ற ஆவல் இருந்தது. இருப்பினும் அவர்களுக்கு ஒரேயொரு நடைமுறைச் சிக்கலும் இருந்தது. அதாவது சுமார் இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்று விட்டுவருதல், பின்னர் பாடசாலை விட்டதும் பிள்ளைகளை அழைத்து வருதல் போன்ற விடயங்கள் அவர்களால் இயலுமான விடயங்களாக அவ்வேளைகளில் இருந்திருக்கவில்லை. ஒரு நாளைக்கு ஒரு தொழில் என்ற ரீதியில் ஏனோதானோ என்று ஏதேதோ தொழில்களைச் செய்த என் தந்தையாலோ அல்லது வீட்டில் இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு(எனது தம்பி மற்றும் தங்கை) என்னையும், என் அண்ணனையும் பாடசாலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய வசதியும், வல்லமையும் என் தாயாரிடமும் இருக்கவில்லை.
இந்த வகையில் என்னைப் பாலர்(Nursery) பாடசாலைக்கும், என் அண்ணனைக் கீழ்நிலைப் பாடசாலைக்கும்(Primary) தினமும் அழைத்துச் செல்வது என் பெற்றோர்களுக்கு மிகவும் சிரமமான ஒரு விடயமாக இருந்திருக்க வேண்டும். அத்துடன் கிராமத்தின் நடைமுறை யாதெனில் பிள்ளை பள்ளிக்குச் சேர்ந்த ஓரிரு தினங்கள் பிள்ளைக்குத் துணையாகப் பெற்றோர் வருவர். ஓரிரு நாட்கள் கழித்து பிள்ளைகள் சுயமாகவே பள்ளிக்குச் சென்று, பாடசாலை முடிந்ததும் வீடு திரும்புவர். இந்த நடைமுறையையே எனது பெற்றோரும் கடைப்பிடித்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். ஆனால் "எல்லாப் பிள்ளைகளையும் போலவே எங்கள் பிள்ளைகளும் ஒழுங்காகப் பள்ளிக்குச் சென்று வீடு திரும்புவார்கள்" என என் பெற்றோர்கள் நம்பியது மாபெரும் தவறு.
(தொடரும்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக