இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 1.4
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
அது ஒரு மிகச்சிறிய பாலர் பள்ளி. நான் நினைப்பது சரியாக இருக்கும் பட்சத்தில் அந்தப் பாலர் பள்ளியானது நாம் வாழ்ந்துவந்த மண்டைதீவுக் கிராமச் சங்கத்தினால்(Village Council) நிர்வகிக்கப் பட்டிருக்க வேண்டும்.சரி இது எனது முதலாவது 'பாலர் பாடசாலை' நாள். வழமையாக பிள்ளைகள் தாய்மார்களால் பாலர் பாடசாலையில் ஒப்படைக்கப் படும் முதலாம் நாளில் 'குய்யோ முறையோ' என ஓலமிட்டு அழுவார்கள். அவர்களைத் தேற்றுவதற்குள் பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு 'போதும் போதும்' என்றாகிவிடும். சில பிள்ளைகள் "அம்மாவின் தோளிலிருந்து இறங்கவே மாட்டேன்" என அடம் பிடிப்பார்கள். ஏனெனில் 'ஆசிரியை' முன்பின் தெரியாத ஒரு 'மனுஷி' அல்லவா?. சில பிள்ளைகள் அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டோ, காலைக் கட்டிக் கொண்டோ 'டீச்சரின்'(Teacher) பக்கமோ அல்லது அந்தச் சின்னஞ்சிறிய வகுப்பறையின் பக்கமோ செல்ல மாட்டேன் என ஆர்ப்பாட்டம், அட்டகாசம் செய்வார்கள். இன்னும் சில பிள்ளைகளோ அம்மாவின் அருகில் அழாமல் அமைதியாக நின்றபடி, மேற்படி வகுப்பில் இருக்கும் ஏனைய பிள்ளைகளையும், ஆசிரியை என்ற அந்தப் 'புதிய பெண்மணியையும்' 'வேற்றுக் கிரக வாசிகளைப் பார்ப்பதுபோல்' பார்த்துக்கொண்டு நிற்பார்கள். அவ்வகுப்பில் தங்களுக்குத் தெரிந்த ஒரு பிள்ளையாவது அமர்ந்திருந்தால் அந்தப் பிள்ளையைப் பார்த்துப் புன்னகை ஒன்றை 'பரிசாக' வழங்குவார்கள். ஆனால் வகுப்பறைக்குள் செல்வதற்கு சம்மதிக்க மாட்டார்கள். மேற்படி விடயங்கள் எல்லாமே பள்ளியில் முதல்நாள் பிள்ளையைக் கொண்டுபோய்ச் சேர்த்த அம்மாக்களுக்கும், ஒரு சில அப்பாக்களுக்கும் தெரிந்த விடயங்கள். இருப்பினும் எதிர்காலத்தில் 'பெற்றோர்கள்' ஆக 'பதவி உயர்வு' பெற இருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கு இவ்வாறான விடயங்களை நினைவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இதை எழுதினேன்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக