இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 1.8
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
நல்ல ஆரம்பம், வெற்றிக்கு அத்திவாரம் என்பார்கள், அதுபோலவே எனது பாலர் பாடசாலையின் முதலாவது நாளும் நல்ல படியாக, இனிதே தொடங்கி, இனிதே நிறைவு பெற்றது. மதியம் ஒரு பன்னிரண்டு மணிக்கெல்லாம் எனது அண்ணன் என்னை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார். அவர் எனது பாலர் பாடசாலைக்கு மிகவும் அருகிலிருக்கும் 'மண்டைதீவு மகா வித்தியாலயத்தில்' முதலாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அவரோடு சேர்ந்து அவரது கூட்டாளிகளும் வந்திருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை நான் ஒரு 'கைக் குழந்தை', என்னைப் பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்வது அவர்களது பொறுப்பு. நானும் அந்தப் 'படையணியின்' பாதுகாப்பில்??? வீதிகளின் ஓரத்தால் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். நல்ல படியாக வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நாம் அனைவரும் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு 'மேதாவியின்' பிரச்சாரத்தினால் திசை திருப்பப் பட்டோம். "கந்தையாப்பா(*இலங்கைத் தமிழில் கந்தையா+அப்பா எனவும் தமிழகத் தமிழில் கந்தையா+தாத்தா எனவும் வாசிக்கவும். வயதான 'தாத்தாக்களை' இலங்கைத் தமிழில் 'அப்பா' எனவும் அழைப்போம்) வளவிற்குள் நிற்கும் 'இலந்தை மரம்' கொப்பாயிரம், குலையாயிரமாக(*இதுவும் யாழ்ப்பாணத்துக் கிராமப் பேச்சு வழக்கு) காய்த்துப், பழுத்துக் கிடக்கிறது, அங்கு போனால் ஒவ்வொருவரும் புத்தக பை நிறைய 'இலந்தைப் பழம்' அள்ளி வரலாம்" என திருவாய் மலர்ந்தருளினான் என் அண்ணனின் பள்ளித் தோழர்களுள் ஒருவனாகிய அந்த 'மேதாவி'.என் அண்ணன் உட்பட அந்தப் பள்ளித் தோழர்கள் அனைவருமே மறு பேச்சின்றி அந்த 'மேதாவியின்' திட்டத்திற்கு சம்மதித்தனர். எனக்கோ ரெண்டுங் கெட்டான் நிலை. ஒன்று 'இலந்தப் பழம் என்றால் என்ன? அதனை ஒருதடவை ருசிபார்த்தே ஆகவேண்டும் என்பது ஒரு பக்க ஆவல், மறுபக்கம். காலையில் என்னைப் பாடசாலைக்கு அழைத்து வரும்போது என் தாயார் கூறிய வாசகங்கள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. "பள்ளிக்கூடம் விட்ட உடன அங்கன இங்கன நிண்டு, ஏமலாந்திக் கொண்டு நிக்காம நேர வீட்ட வந்து சேர வேணும்"(*பள்ளிக்கூடம் விட்டதா,எங்கேயும் 'பராக்கு' பார்க்காம நேரா வீட்டுக்கு வந்து சேரணும்)என்ற எனது தாயாரின் கட்டளையை மீறவும் பயமாக இருந்தது. ஆனாலும் 'இலந்தப் பழத்தின் மீது உள்ள 'ஆசை' பயத்தை வென்றது. காரணம் 'புத்தகப் பை' நிறைய இலந்தப் பழம் அல்லவா கிடைக்கப் போகிறது.
ஒரு வழியாக 'மேதாவி' காட்டிய வழியில் நடந்து 'கந்தையாப்பா' வீட்டடியை அடைந்தோம். அவரது வீட்டிற்குப் பின்புறமாக உள்ள வளவில் வானளாவ வளர்ந்திருந்தது அந்த இலந்தை மரம்.
(தொடரும்)
*இந்த நிறத்தில் நட்சத்திரக் குறியிடப் பட்டிருப்பவையும், எழுதப் பட்டிருப்பவையும் தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக