திங்கள், மார்ச் 28, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 1.9

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

அது மனிதர்கள் குடியிருக்கும் ஒரு வளவு என்பதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப் படவில்லை. ஆனால் அந்த இலந்தை மரத்தருகே எவ்வாறு செல்வது என்பதுதான் கேள்வி. அதற்கும் வழி கண்டுபிடித்தான் அந்த 'மேதாவி' கந்தையாப்பாவின் நான்கு பக்க வேலிகளில் ஒன்றில் ஒரு ஓட்டை(யாழ்ப்பாணத்துத் தமிழில் 'பொட்டு' எனவும் *தமிழக வழக்கில் 'பொத்தல்' எனவும் அறிக) ஏற்படுத்தப் பட்டிருந்தது. அந்த ஓட்டை வழியாக எங்கள் அணியிலேயே மிகவும் 'குண்டான' மேதாவி உட்பட நாங்கள் அனைவரும் அந்த இலந்தை மரம் நோக்கித் தவழ்ந்து சென்றோம். 'இலந்தை' மரம் ஒரு 'முட்கள் நிறைந்த' மரம் என்பதை வாசகர்களாகிய உங்களில் பலர் அறிவீர்கள். ஆதலால் மரத்தில் ஏறிப் பழங்களைப் பறிப்பது எமது நோக்கமாக இருக்கவில்லை.அது மிகவும் ஆபத்தான முயற்சி. ஆதலால் எமது மேதாவியின் 'புலனாய்வுத் தகவலின்படி' அம்மரத்தின் கீழே விழுந்து கிடக்கும் பல்லாயிரக்கணக்கான 'இலந்தைப் பழங்களை' பொறுக்குவதே எமது நோக்கமாக இருந்தது. ஆனால் அந்த இலந்தை மரத்தை நெருங்கியபோதுதான் எங்கள் 'மேதாவி' எங்களிடம் கூறியிருந்த தகவல்கள் யாவுமே வெறும் 'பம்மாத்து'(*தமிழகத்து தமிழில் 'டாவு', அல்லது 'பேத்தல்')என்பது எங்கள் அனைவர்க்கும் தெரிய வந்தது. அங்கே இலந்தை மரத்தின் கீழே அங்கொன்றும் இங்கொன்றுமாக நன்றாகப் பழுத்த, புழு அரித்த, அல்லது  வெயிலில் வெதும்பிய இலந்தைப் பழங்கள் சில மண்ணில் வீழ்ந்து கிடந்தன. அவற்றைப் பொறுக்குவதில் நமது பிரிவினரிடையே பலத்த போட்டி காணப் பட்டது. இவ்வளவு நேரமும் நண்பர்களாக இருந்த அனைவரும் 'பழம் பொறுக்கும்' முயற்சியில் 'பரம எதிரிகளாயினர்'. "இது நான் கண்டுபிடித்த பழம் அதை நீ எப்படி எடுக்கலாம்"? என்ற விசாரணையுடன்,சேட்டைப் பிடித்து இழுத்தபடி(*சட்டையைப் பிடித்தபடி)  நாயே, சனியனே, மூதேசி(*மூதேவி) என்ற 'அசுத்த வார்த்தைப் பிரயோகங்கள்' பொறி பறந்தன.நான்  இவற்றையெல்லாம் கண்களில் திகைப்புடனும், "ஒரு பழமாவது கிடைக்காதா"? என்ற ஏக்கத்துடனும் பார்த்துக் கொண்டே நின்றேன். இறுதியில் என் அண்ணனின் 'கருணையால்' எனக்கு ஒரு பழம் கிடைத்தது. 'பை நிறைய இலந்தைப் பழம்' எனும் கனவில் நின்ற எனக்கு கிடைத்த ஒரு பழம் அது 'புழு' அரித்ததோ,வெம்பிப் பழுத்ததோ தெரியாது 'தேனாமிர்தமாக', மிகவும் தித்திப்பாக இருந்தது.
அந்தப் 'பழம் பொறுக்குதல்' என்ற சாதாரண நடவடிக்கையுடன் நாங்கள் எமது அன்றைய முயற்சியை நிறுத்தியிருக்க வேண்டும். "ஆசை யாரைத்தான் விட்டது?" எங்கள் குழுவில் ஓரிருவர்(என் அண்ணன் உட்பட) ஒரு 'அதிரடி' நடவடிக்கையில் இறங்கினர்.அதாவது கையில் கிடைக்கும் கற்களை எடுத்து பலம்கொண்ட மட்டும் அந்த மரத்தில் இருந்த பழங்களை நோக்கி வீசி எறிந்தனர். "இதை அவர்கள் செய்திருக்கவே கூடாது" இவர்களில் ஒருவன் வீசிய கல் ஒன்று கந்தையாப்பாவின் வீட்டிற்குப் பின் பக்கத்தில் 'சிவனே' என்று மேய்ந்துகொண்டிருந்த 'கோழிகள்+சேவல்கள் மீது பட்டது. அவ்வளவுதான் கோழிகளும், சேவல்களும் பெருங்குரலெடுத்து கத்த(ஓலமிட) ஆரம்பித்தன. கோழிகளின் சத்தத்தினால் தனது ஆழ்ந்த உறக்கம் கலைக்கப் பட்டதால் சினமடைந்த கந்தயாப்பாவின் 'செல்ல நாயனார்'(*நாய்) கடுமையாகக் கர்ச்சனை செய்தபடி எங்களை நோக்கி ஓடி வர, எங்கிருந்தோ "டேய், டேய்" என்ற சொற்கள் எங்களை நோக்கி எறிகணைகளாக வந்து வீழ்ந்தன. அவ்வளவுதான் நாங்கள் அனைவரும் 'ஓட்டம் பிடிப்பதைத்' தவிர எங்களுக்கு வேறு 'தெரிவு' இருக்கவில்லை.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
இந்த நிறத்தில் எழுதப்பட்டிருக்கின்ற, *அடையாளமிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக