இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 1.3
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
எனது அண்ணன் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட ஒரு சிலநாட்களுக்குள்ளேயே நானும் அவர் கல்விகற்ற பாடசாலைக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு பாலர் பாடசாலையில் சேர்க்கப் பட்டேன். அந்த நாளை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. ஏனெனில் பள்ளிக்கூடம், படிப்பு, ஆசிரியை என்ற வார்த்தைகளை எல்லாம் என் அண்ணன் கூறும் 'அனுபவக் கதைகளில்' மட்டுமே கேட்டு வந்த எனக்கு, இவற்றை எல்லாம் நேரில் காணப்போகிறேன் என்ற தாங்க முடியாத, விபரிக்க முடியாத மகிழ்ச்சி. அந்த நாளும் வந்தது. என் அண்ணன் பாடசாலையில் சேர்க்கப்பட்ட நாளில் என் தாயார் பாடசாலைக்கு அருகில் இருக்கும் 'பிள்ளையார் கோவிலுக்கு' அண்ணனையும் என்னையும் அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், கையிலிருந்த ஒரு தேங்காயையும் உடைத்து 'தேங்காயின் உள்ளே' இருந்த இளநீரைக் கோவில் வாசலுக்கு 'தானம்' செய்து, பிள்ளையாரை மனமுருகி வேண்டிக்கொண்ட சம்பவம் நடைபெற்றது. ஆனால் என் விடயத்தில் இது நடைபெறவே இல்லை. இது எனக்கு ஆச்சரியத்தை, கோபத்தை ஏற்படுத்தியதா? என்பது நினைவில் இல்லை. ஆனால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். பிள்ளையைப் பள்ளிகூடத்தில் முதலாம் வகுப்பில் சேர்க்கும்போது மட்டுமே பெற்றோர்கள் கோவிலுக்குத் தேங்காய் உடைப்பார்கள், வசதி படைத்த பெற்றோர் அன்றைய தினம் கோவிலில் பூசை/அர்ச்சனை செய்வார்கள், பிள்ளையின் கையால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கற்கண்டு பரிமாறுவார்கள். ஆதலால் நான் பாலர் வகுப்பில் சேர்க்கப்பட்ட நாளில் இத்தகைய விடயங்கள் எதுவும் நடைபெறாதது ஒன்றும் ஆச்சரியப் படத்தக்க விடயம் அல்லவே.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக