புதன், மார்ச் 16, 2011

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு அத்தியாயம் 18

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
"என்னது குழந்தைகளின் தின்பண்டங்களில் நெத்தலிக் கருவாடா? என்றேன் வியப்புடன். அவர் தொடர்ந்தார். "நான் ஏற்கனவே கூறியதுபோல், குழந்தைகளுக்கு மட்டுமின்றி, கர்ப்பிணித் தாய்மாருக்கும் மிகச் சிறந்த ஒரு சத்துள்ள உணவு இது. இதன் மகத்துவம் தெரியாமல் பாட்டிமார்கள் சொல்கின்ற செவி வழி வந்த நம்பிக்கையாகிய "நெத்தலி மீன் ஒவ்வாமையை (Alergi) ஏற்படுத்தும்"(யாழ்ப்பாணத் தமிழில் 'கிரந்தி')  என்று நம்புகிறார்கள். இது மருத்துவ ரீதியாக இன்றுவரை ஏற்றுக் கொள்ளப் படவோ, நிரூபிக்கப் படவோ இல்லை"
"சரி நெல்லுச் சோறையும், நெத்தலிக் கருவாட்டையும் பற்றி விரிவுரை ஆற்றி விட்டீர்கள், அந்த கண்ணதாசன் அவர்கள் பாடலில் விதந்துரைத்த 'நெய்மணக்கும் கத்தரிக்காயைப் பற்றியும்' கூறுங்கள்" என்றேன்.
"சரி சொல்கிறேன், அதற்கு முன்னால் ஒரு கேள்வி, உங்களுக்குக் 'கத்தரிக்காய்க் கறி' பிடிக்குமா? பிடிக்காதா? என்பதை முதலில் எனக்குக் கூறுங்கள் என்று ஒரு நிபந்தனையுடன் கூடிய ஒரு கேள்வியை' என்னை நோக்கி வீசினார்.
"எனக்கு மிகவும் பிடித்த காய்கறி வகைகளில் கத்தரிக்காயும் ஒன்று, அதிலும் 'கத்தரிக்காய் பொரித்துக் குழம்பு' என்றால், பாடலில் வாணி ஜெயராம் அவர்கள் பாடியது போல் 'நினைக்கையிலே வாயூறும்'. நம்மூரில் கத்தரிக்காயில் மூன்று விதமாகக் கறி சமைப்பார்கள், முதலாவது வகை 'கத்தரிக்காய்ப் பிரட்டல்' அல்லது 'கத்தரிக்காய் பிரட்டல் கறி' என இலங்கைத் தமிழில்(தமிழ்நாட்டுத் தமிழில் 'கறி' என்றால் பெரும்பாலும் மாமிசத்தையே குறிக்கும் என்பதை நினைவில் கொள்வதுடன், இலங்கைத் தமிழும் தமிழ்நாட்டுத் தமிழும் இவ்விடத்தில் வேறுபடுகிறது என்பதையும் நினைவில் கொள்க)   அழைப்போம். இது மிகவும் தடிப்பானதாக(thick) இருப்பதால் இதற்கு 'பிரட்டல்' எனப் பெயர் வந்திருக்கலாம் அல்லது 'பிரட்டல்' என்பது மலையாள வார்த்தையாகவும் இருக்கலாம். இரண்டாவது வகை 'கத்தரிக்காய்க் குழம்பு' என 'இலங்கைத் தமிழில்' அழைக்கப் படுகிறது. இது 'பிரட்டல்' போல தடிப்பானதாக இருக்காது, இதில் தண்ணீரும், தேங்காய்ப் பாலும் அதிகமாகச் சேர்க்கப் படுவதால் 'குழம்பு' அதிகமாக இருக்கும், கத்தரிக்காய் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குழம்புக்குள் கிடக்கும், பெரும்பாலும் கத்தரிக்காய்ப் பிரட்டலுக்குப் பயன்படுத்தப்படும் சகல வாசனைத் திரவியங்களும், மிளகாய்த் தூளும்(மிளகாய் பொடி) இதற்கும் சேர்க்கப் படுவதாலும், எண்ணையில் தாளிக்கப் படுவதாலும் இந்தக் கத்தரிக்காய்க் குழம்பும் வாசனை மிக்கதாக, பக்கத்து வீட்டிற்கும் 'மணக்கும்' வகையில், நாவூறச் செய்கின்ற ஒரு 'கறியாக' 
இருக்கும். இதற்கு அடுத்த படியாக இலங்கைத் தமிழ் மக்கள் கத்தரிக்காயில் மிளகாய்த் தூள் சேர்க்காமல், பச்சை மிளகாய் வெங்காயம் போன்றவற்றையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து 'கத்தரிக்காய் வெள்ளைக் கறி(கத்தரிக்காய்ப் பால்க் கறி எனவும் அழைப்பர்) என ஒரு கறியைத் தயாரிப்பர். இது பெரும்பாலும் ஒரு மீன்கறி, அல்லது கோழிக்கறி, ஆட்டுக்கறி போன்றவற்றோடு சேர்த்து உண்ணுகின்ற உறைப்பில்லாத(காரமில்லாத) ஒரு 'துணைக் கறியாக' இருக்கும். இது தவிரவும் சிறிய மீன்களில் கறி சமைக்கும்போதும், கருவாட்டுக் குழம்பு சமைக்கும்போதும் கத்தரிக்காயைச் சேர்க்கும் வழக்கம் சில பிரிவு மக்களிடம் காணப் படுகிறது. அதேபோல் வாழைக்காய், பலாக்கொட்டை போன்றவற்றை எண்ணையில்பொரித்து உண்பதுபோல் கத்தரிக் காயையும் பொரித்து உண்ணும் வழக்கமும் எமது இலங்கைத் தமிழ் மக்களிடம் காணப் படுகிறது". என்று கத்தரிக்காயைப் பற்றி எனக்குத் தெரிந்த விடயங்களை அவரிடம் ஒப்புவித்தேன்.  
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன  

1 கருத்து:

Mathan Denmark சொன்னது…

Wonderfull

கருத்துரையிடுக