செவ்வாய், மார்ச் 29, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 2.00


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

ஒரு நாயும், ஒரு வயோதிபரும் எங்களைத் துரத்தி வருவது எங்களுக்கு நன்றாகவே தெரிந்தது. எங்களைத் துரத்திக்கொண்டு ஓடிவரும் வயோதிபர்தான் 'கந்தையா அப்பாவாக' இருக்க வேண்டும் என்பது எனது ஊகமாக இருந்தது. அவரிடம் பிடிபட்டு அடி வாங்குவதை விட, அவரது நாயிடம் 'கடி' வாங்காமல் தப்புவதே மிகவும் அவசியமாகப் பட்டது. ஏனெனில் நாய் கடிக்கும்போது காலில் ஒரு துண்டு சதையை(*தசை/கறி) எடுத்துவிடும். அதன்பின் தொப்புளைச் சுற்றி பத்திற்கு மேற்பட்ட ஊசிகள் போடவேண்டிய நிலை ஏற்படும். ஓடினோம்,ஓடினோம், வாழ்க்கையின் விளிம்பிற்கே ஓடினோம். உயிரைக் கையில் பிடித்தபடி ஓடினோம். முட்கள், கற்கள், உடைந்த போத்தல்(*பாட்டில்) துண்டங்கள் போன்றவை எங்கள் கால்களைப் பதம்பார்க்க ஓடினோம். வேலியின் ஓட்டை ஏற்படுத்தப் பட்டிருந்த இடத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறுவது மிகுந்த சிரமமான காரியமாக இருந்தது. ஆனால் ஒரேயொரு ஆறுதல் 'கந்தையாப்பா' அதட்டிய அதட்டலில் அவரது நாயும் எங்களை நோக்கி ஓடி வராமல் அரைவாசியில் நின்று விட்டது. எங்கள் குழுவில் அனைவரும் அந்த சிறிய வேலி ஓட்டையால் கண்ணிமைக்கும் நேரத்தில் புகுந்து வெளியேற நான் மட்டும் கடைசியாக வளைந்து,தவழ்ந்து கைகளில் கருக்கு மட்டை(*கூரான பனை மட்டை)கீறியதால் ஏற்பட்ட காயங்களுடன் வெளியேறினேன். ஒரு சிறுவன் கூட தன் கையில் சிக்காத ஆத்திரத்தில் கந்தையாப்பா தன்னால் முடிந்தவரை 'வசவு' வாக்கியங்களை உதிர்க்க ஆரம்பித்தார். "பறக் கீழ்சாதியள், முளைச்சு மூண்டு இலை விடேல்ல, அதுக்குள்ள பொட்டுப் பிரிச்சு களவெடுக்க வெளிக்கிட்டிட்டியளோ "(*"சாதியால் தாழ்ந்தவர்களே! இந்தச் சிறிய வயதிலேயே வேலியில் ஓட்டை செய்து திருட ஆரம்பிச்சிட்டீங்களா?")(மேற்படி வாசகங்களை யாழ் மாவட்டத்துக் கிராமங்களைச் சேர்ந்த சில வயோதிபர்கள், கோபம் வரும்போது உதிர்ப்பது வழக்கம். அவர்களைப் பொறுத்தவரை தவறு செய்கின்ற/அட்டகாசம் செய்கின்ற அனைவருமே கீழ்சாதியள்) மேற்படி வாசகங்கள் காற்றில் பரவி நம் எல்லோர் காதுகளிலும் வீழ்ந்தன. எனக்கு இவ்வார்த்தைகள் அப்போது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனக்கு மேற்படி வார்த்தைகளின் அர்த்தம் புரியாத வயது அல்லவா?
ஒரு விடயம் தெளிவாகியது ஒரு உழுத்துப்போன இலந்தைப் பழத்திற்காக என் உடம்பில் பல 'கீறல்' காயங்களை நான் விலையாகக் கொடுக்க நேரிட்டது. இதேபோல் எங்கள் குழுவில் இருந்த ஏனைய சில சிறுவர்களுக்கும் சில கீறல், சிராய்ப்புக் காயங்கள். ஆக மொத்தத்தில் எங்களுடைய 'ஒப்பரேஷன் இலந்தைப் பழம்' என்ற இராணுவ நடவடிக்கை பலத்த இழப்புக்களுக்கு மத்தியில் 'தோல்வியில்' முடிவடைந்தது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக