வெள்ளி, மார்ச் 25, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 1.7

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

அந்தப் பாலர் பாடசாலையின் முதலாவது நாள் பல பிள்ளைகளின் அழுகையோடு ஆரம்பிக்கப் பட்டது. எனக்கு எங்கள் வீட்டில் என் தாயாரால் நிலத்தில்(வீட்டுத் தரையில்) மணலைப் பரப்பி '' ''என்ற தமிழ்த்தாயின் முகவரியை எழுதுவதற்குப் பயிற்றுவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்றோ எனக்குப் புதியதொரு அனுபவம் அதாவது 'அ' 'ஆ' வை கையிலுள்ள 'slate' என அனைத்துத் தமிழ் மக்களாலும் அழைக்கப் படும் 'எழுத்துப் பலகையில்(இது எனது மொழிபெயர்ப்பாகும்,ஏனெனில் 'slate' இற்கு தமிழில் என்ன பெயர் என்று நானறியேன். தமிழ் மக்கள் அனைவருமே இதனை சிலேற்(இலங்கைத் தமிழ்) என்றோ அல்லது சிலேட்(இந்தியத் தமிழ்) என்றோதான் அழைக்கிறார்கள்) எழுத வேண்டும். இது எனக்கு ஒரு சவாலாகவே இருந்தது. காரணம் வீட்டில் சிலேட்டில் எழுதிப் பழக்கமில்லையே, தவிரவும் எனக்கு நேற்றைய தினம்தானே வாழ்வில் முதல்தடவையாக ஒரு 'சிலேட்' எனது தந்தையாரால் வாங்கித் தரப்பட்டிருந்தது. அதைப் 'புதுப் புடவையை'சில பெண்கள் பத்திரமாகப் பெட்டியில் பூட்டி வைத்துப் பாதுகாப்பார்களே, அதைப் போலவே நானும் பத்திரமாகப் பூட்டி வைத்துப் பாதுகாத்தேன். என் அண்ணன் அதைத் தொட முனைந்தால் கத்திக் கதறித் தீர்த்தேன், தம்பி அதைத் தொட முனைந்தால் 'அடி போட்டு' தடுத்தேன்.
இப்படியாகப் பாதுகாக்கப் பட்ட அந்தச் 'சிலேட்டுக்கு' இன்று 'வெள்ளோட்டம்'.நான் ஏற்கனவே கூறியிருந்த அந்த ஆசிரியை என்ற 'தேவதை' எல்லாப் பிள்ளைகளுக்கும் சிலேட்டில் எழுதுவதற்கு மிகவும் பொறுமையாக இருந்து கற்பித்தார். கரும்பலகையில் மிகப் பெரிய இராட்சத  '','','' போன்றவற்றையும் எழுதிக் காட்டியதாக ஞாபகம். அத்தோடு மிகப்பெரிய அட்டையில் வண்ணப் படத்தில் அச்சிடப் பட்டிருந்த 'அணில்', 'ஆடு', 'இலை' போன்ற சொற்களையும் எங்களை சேர்ந்து உரத்த குரலில் சொல்ல வைத்ததாக ஞாபகம்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக