புதன், மார்ச் 30, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 2.1

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

இப்போது என் முன்னாலும், என் அண்ணன் முன்னாலும் மிகவும் சிக்கலானதொரு 
சூழ்நிலை தோன்றியிருந்தது. அதாவது எனது கைகளில், தோளில், முகத்தில் கருக்கு மட்டை (*கூரான பனை மட்டை) கீறியதால் ஏற்பட்ட காயங்களைப் பற்றி வீட்டில் அம்மா,அப்பா விசாரித்தால் என்ன கூறுவது.? "திருட்டுத் தனமாக இலந்தைப் பழம் பொறுக்கப் போனதால் ஏற்பட்ட காயம் என்று கூற முடியுமா? "தர்ம அடியல்லவா விழும்? என்ன செய்வது என நான் மூளையை கழற்றி வைத்து யோசித்துக்கொண்டிருந்தபோது 'எதற்கும் அஞ்சாத' என் அண்ணன் ஒரு 'புத்தி சாதூர்யமான' திட்டமொன்றை முன்வைத்தார். அதாவது "இந்தக் காயங்கள் எவ்வாறு ஏற்பட்டன? என வீட்டில் அம்மா அல்லது அப்பா வினவினால், உடனடியாக "இது முன் வீட்டு 'சுதன்'(*ஒரு சிநேகிதனின் பெயர்) பிறாண்டியதால் ஏற்பட்ட காயங்கள்" என்று கூறித் தப்பித்துக் கொள்வோம். என்பதுதான் திட்டமாகும்.
இவ்வளவு புத்திசாலித் தனமாக திட்டம் தீட்டித் தந்த என் அண்ணனாலும், என்னாலும் அவ்வாறு ஒரு 'மாபெரும்' பொய்யைக் கூறுவதால் ஏற்படக் கூடிய 'பின் விளைவுகள்' பற்றிச் சிந்திக்க முடியாமல் போனது பெரும் துரதிர்ஷ்டமே.
இந்த இடத்தில் இதை வாசிக்கும் பெற்றோர்களுக்கு ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன்.
###############################################
உங்கள் பிள்ளை தன்னோடு படிக்கின்ற இன்னொரு பிள்ளை/அயல்வீட்டுப் பிள்ளை அடித்ததாகவோ, கடித்ததாகவோ, கிள்ளியதாகவோ, உங்களிடம் புகார் கூறினால் 'பிள்ளைப் பாசம்' காரணமாக விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்னால் சில கேள்விகளை உங்களை நீங்களே கேளுங்கள்:
  1. எங்கள் பிள்ளை கூறுவது எத்தனை சதவீதம் உண்மை?
  2. பிரச்சனையின் வீரியம்(Seriousness) எத்தகையது?
  3. பிள்ளையின்மீது கொண்ட பாசத்தினால் அயலவருடன் பிணக்கு ஏற்படாமல், இப்பிரச்சனையை எவ்வாறு அணுகலாம்?
  4. நாங்கள் பெற்றோர்களாக இல்லாமல் ஒரு 'சராசரி மனிதராக' இருப்பின் இப்பிரச்சனையை எவ்வாறு கையாளுவோம்?
  5. இப்பிரச்சனையைக் கையாளும் மிகவும் சிறந்த உத்தி(technic) அல்லது ராஜதந்திரம் (Diplomacy) எது?
ஏனெனில் இலங்கையில் பெரியவர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளில்(Conflict) சுமார் 40% ஆனவை சிறுவர்களால்(தம் பிள்ளைகளால்) ஏற்படுகின்றன எனப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையிலும், தமிழகத்திலும் பிள்ளைகளால் பெற்றோர் மத்தியில்  ஏற்பட்ட விரோதங்கள் அடிதடி,வெட்டுக், குத்து, கொலையில் முடிவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
###############################################

நாங்கள் நினைத்தது போலவே, வீட்டிற்குத் திரும்பியதும் அம்மாவின் பார்வையில் எனது காயங்கள் பட்டது. கேள்விகள் ஆரம்பித்தன. நாங்களும் எங்களால் தயாரிக்கப் பட்டு, தயாராக வைத்திருந்த கதை,திரைக்கதை, மற்றும் வசனத்தை அம்மாவிடம் ஒப்புவித்தோம். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அண்ணனிடமிருந்து 'டாண், டாண்' என்று பதில் வந்தது. நானோ 'மோதகத்தை முழுங்கியவன்' போலக் காட்சியளித்தேன்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

 நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக