திங்கள், ஜூன் 09, 2014

"தந்தனத்தோம்" என்று சொல்லியே!

அச்சுவேலி கலை பண்பாட்டுப் பெருவிழாவில் 'அச்சூர்க்குரிசில்' விருது பெறும் சான்றோன். 
ஆக்கம்: சந்திரமௌலீசன், லலீசன், யாழ்ப்பாணம்
வில்லிசைக் கலைஞர் நாகலிங்கம் கணபதிப்பிள்ளை
சின்னமணி என உலகோரால் அறியப்பட்ட நாகலிங்கம் கணபதிப்பிள்ளை 30.03.1936இல் வடமராட்சி மாதனையில் பிறந்தவர். 1960 இல் அச்சுவேலியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் அன்னமுத்துவை மணம் முடித்ததன் வாயிலாக எம்மூரைத் தனது வாழ்பதியாக்கிக் கொண்டார்.
சின்னமணி கணபதிப்பிள்ளை அரச சேவையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1957 இல் ஆசிரிய நியமனம் பெற்று இரத்மலானை கொத்தலாவலபுரம் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் புகழ் பெற்ற நாடக மேதைகளான ரீ.கே.எஸ். சகோதரர்களுடன் இணைந்து நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற நாடக நிகழ்வுகளில் பங்கு கொண்டார். கொழும்பில் தங்கியிருந்து பணியாற்றிய காலத்தில் திரைப்படநடிகரும் வில்லிசையாளருமாகிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் தொடர்பு இவருக்குக் கிட்டியது. நாடக உத்திகளையும் வில்லிசை நுட்பங்களையும் கலைவாணிரிடமிருந்து கற்றுக்கொண்ட இவர் வண்ணை. கலைவாணர் நாடக மன்றத்தின் உருவாக்க உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அக்காலத்தில் வில்லிசைத்துறையில் புகழ்பெற்றிருந்த திருப்பூங்குடி ஆறுமுகத்துக்குப் பக்கப்பாட்டுக் கலைஞராகவும் நகைச்சுவையாளராகவம் பணியாற்றிப் பின் அவரது ஆசீர்வாதத்துடன் 02.02.1968 இல் செல்வச்சந்நிதி சந்நிதானத்தில் தான் தலைமையேற்று முதல் வில்லிசை நிகழ்ச்சியை நடாத்தினார். தான் அமைத்த வில்லிசைக் குழுவுக்குத் தனது ஆதர்சக் கலைஞராகிய கலைவாணரின் பெயரைச் சூட்டினார்.
வில்லிசை என்றால் சின்னமணி என்னும் அளவிற்கு இவரது புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. தமிழ்ப் புராண, இதிகாச, காப்பியங்களில் இருந்து சமூகம் கற்க வேண்டிய செய்திகளை நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புக்களில் மேற்கொண்டுள்ளார். வில்லிசையின் ஊடாக ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டிருக்கிறார். படித்தவர்களும் பாமரர்களும் இரசிக்கும் படியாக வில்லிசை மூலம் கதை சொல்லக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பது இவரது பலம் ஆகும்.
வில்லிசையில் மாத்திரமன்றி மரபு வழி நாடகத்துறையிலும் ஆளுகை பெற்றுள்ளார். காத்தவராயன் கூத்து மற்றும் இசை நாடகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டுள்ளார். சத்தியவான் சாவித்திரி இசை நாடகத்தில் இவர் ஏற்கும் இயமன் வேடத்தைக் கண்டு சபையோர் கலங்குவர். அவ்வளவிற்குத் தன்னை மறந்து கதாபாத்திரத்துடன் ஒன்றிக்கும் சுபாவம் கொண்டவராகச் சின்னமணியை இனங்காட்டலாம்.
சின்னமணி நா.கணபதிப்பிள்ளையின் கலைச்சேவைகளுக்காகக் கிடைத்த பட்டங்களும் விருதுகளும் எண்ணிலடங்காதவை. வில்லிசை வேந்தன், வில்லிசை மன்னன், வில்லிசைப் புலவர், முத்தமிழ் மாமணி, வில்லிசை அரசன், வில்லிசைக் கலைஞானசோதி, பல்கலைவேந்தன், மூதறிஞர், முத்தமிழ் வித்தகர், ஜனரஞ்சக நாயகன், கலாவினோதன் என்பன அவற்றுட் சிலவாகும். இவரது பெயரின் அடையாகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் கலாவினோதன் என்ற பட்டம் 30.06.2002இல் கனடாவில் வழங்கப்பட்டதாகும். 1998 இல் இலங்கை அரசின் கலாபூஷண விருதையும் 2003 இல் வடமாகாண ஆளுநர் விருதையும் பெற்றுள்ளார். சின்னமணியின் வாரிசுகள் இன்று எம்மண்ணில் வில்லிசைக் கலையை வளர்த்து வருகின்றனர். அச்சுவேலியின் கலை அடையாளம் சின்னமணி என்றால் மிகைப்படாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக