புதன், ஆகஸ்ட் 06, 2014

கட்டிப்புடி வைத்தியம்



ஆக்கம்:செ.சஞ்சயன், நோர்வே 
அண்மையில் ஒரு நாள் காலை நோர்வேயின் மிகப்பெரிய வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியேற்பட்டது. எனக்கு மிகவும் பழக்கமுள்ள சிறு குழந்தையொன்று கடந்த சில நாட்களாக அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறாள். அவளைப் பார்ப்பதற்காகவே வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன்.

பால்ய காலத்தில் இருந்து வைத்தியசாலைகளுடன் எனது உறவு நெருக்கமாய் இருந்திருக்கிறது. இதற்கு எனது தாயார் வைத்தியராக இருந்தது முக்கிய காரணமாயிருக்கலாம். கடந்த சில வருடங்களாக நானும் ஏதோ ஒரு விதத்தில் தவறாது வருடத்துக்கு ஓரிரு தடவைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறேன். ஆக புலம் பெயர்ந் பின்பும் வைத்தியசாலைகளுடனான உறவு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

வைத்தியசாலைக்கு பார்வையாளராயோ, நோயாளியாயோ, தொழில் நிமித்தமோ செல்லும் போது ஏற்படும் உணர்வுகள் வித்தியாசமானவை. பார்வையாளனாய் செல்லும் நேரமே எனக்கு சிரமமானதாய் இருக்கிறது. இந் நேரங்களில் எனது சிந்தனைகள் காணும் காட்சியை அடிப்படையாக வைத்து மாறிக்கொண்டேயிருக்க, அதற்கேற்ப மனநிலையும் மாறிக்கொண்டிருக்கும். ஒரு குழந்தை பிறக்கும் நிகழ்வில் இருந்து மரணம் வரை மகிழ்ச்சியான நேரங்களும்,  வேதனையான நேரங்களும் வைத்தியசாலைகளில் உண்டல்லவா?

எனது நினைவில் இருக்கும் முதல் வைத்தியசாலை பயணம் கொழும்பில் நடந்தது. அப்போ எனக்கு 7 வயதிருக்கும். எனது தாயாருக்கு தாடையில் ஒரு சத்திரசிகிச்சை செய்திருந்தார்கள். வைத்தியசாலைக்கு தாய்மாமாவுடன் சென்றிருந்தேன். எனது தாயார் அயர்ந்து தூங்கிப்போயிருந்தார். நானோ அவர் இறந்துவிட்டார் என்று ஆர்ப்பாட்டம் பண்ணியதும் என்னை சமாதானப்படுத்த எனது தாயை அவர்கள் எழுப்பவேண்டியிருந்தது. இன்றும் அவ் வைத்தியசாலையின் வாசனைக‌ளும், பளுப்பு நிற துருப்பிடித்த கட்டில்களும், உயரத்தே தூசு படிந்த சிலந்திவலைகளுடன் இருந்த காற்றாடிகளும் மங்கிப்போன சித்திரங்கள் போன்று இன்னும் நினைவில் இருக்கின்றன. 


எனது தந்தை மாரடைப்பின் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நாள் மதியம் போல் அப்பாவை பார்ப்பதற்குச் சென்றிருந்தேன். ஏறாவூரில் இருந்து பஸ் எடுத்து மட்டக்களப்பு சென்று ‌வைத்தியசாலைக்குள் புகுந்து அப்பாவின் வார்ட்டுக்குள் நுழைகிறேன் அப்பாவை சுற்றி டாக்டர்களும், தாதிகளும் நின்றிருந்தனர். அம்மா அப்பாவின் கால்மாட்டில் நின்றிருந்தார். அம்மாவிடம் சென்ற போது அம்மா என்னை அணைத்துக்கொண்டார். அப்பாவோ மூச்சு விடுவதற்கு சிரப்பட்டபடியே தலையை மேல் நோக்கி துக்கியபடி சுவாசிப்பதற்கு காற்றை தேடிக்கொண்டிருந்தார். அம்மா, அப்பா எங்களை விட்டு போகப்போகிறார் என்றார். டாக்டர்கள் அப்பாவின் நெஞ்சில் கையைவைத்து அவரை மூச்சு எடுக்கவைக்க முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். அப்பாவோ இயக்கமின்றி படுத்திருந்தார். டாக்டர்களின் பதட்டத்தை அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. துருப்பிடித்த காற்றாடி ஒன்று எங்கள் தலைக்கு மேல் சுற்றிக்கொண்டிருக்க, அம்மா "அப்பா போயிட்டார்டா" என்றார். எனக்கு புரிந்தது. வைத்தியசாலை ஊழியர் ஒருவர் அப்பாவின் பெருவிர‌ல்களை சேர்த்துக் கட்டி வெள்ளைத் துணியால் அப்பாவை முழுவதுமாக மூடினார்கள். 

இது தான் மரணத்தை நெருங்கியிருந்து பார்த்த சம்பவம். அதன் பின் பல நாட்கள் அப்பா மூச்சு எடுப்பதற்காய் நெஞசை உயர்த்தி உயர்த்தி காற்றை தேடிய காட்சி மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

இன்று வைத்தியசாலையில் அக் குழந்தைக்கு அறுவைச்சிகிச்சை என்று கூறப்படட்டிருந்ததனால் குழந்தை சோர்ந்து போயிருந்தாள். குழந்தையின் தாய் பெரும் பதட்டத்தில் இருந்தார். குழந்தையை பராமரிக்கும் தாதியர்கள் இருவர் அத் தாயையும் ஒரு குழந்தைபோல் பராமரித்ததை கண்டபோது நம்மூர் அரச மருத்துவமனை தாதிகளின் ஞாபகம் வந்து போன போது மனதுக்குள் ஏதோ நெருடிக்கொண்டிருந்தது. நோயுற்றவருக்கும், அவரின் உறவுகள், நட்புகளுக்கும் வைத்தியரின், தாதியர்களின் அன்பான வார்த்தைகளும், அவர்களின் துயரங்களை, சந்தேகங்களை கேட்டு, ஆறுதலாய் பதிலளிக்கும் தன்மையும் அவர்களின் துயரின் கனத்தை இலகுவாக்கிப்போகிறது. எத்தனை பெரிய படிப்பை மேற்கொண்டிருந்தாலும் ஒரு வைத்தியனால் நோயாளியின் மனதை புரிந்துகொள்ளாவிடின் அவர் ஒரு சிறந்த வைத்தியராகவே கடமையாற்றவே மு‌டியாது போகிறதல்லவா?.

நாம் நோயுறும் போது தான் எமது பதவி, பணம், பலம், கௌரவம், ஆணவம் அனைத்தையும் கடந்ததொரு இயலாமையை உணருகிறோம்.  பலருக்கும் ‌அவர்கள் நோய்மையுறும் போது ஒரு வித 'ஞானம்' பிறக்கிறது. அதனாலோ என்னவோ வைத்தியசாலையில் அருகில்  உள்ளவரிடம்(பக்கத்துக் கட்டிலில் படுத்திருப்பவரிடம்) எம்மையறியாமல் ஒரு வித உறவை ஏற்படுத்திக்கொள்கிறோம். நோய்களைப்பற்றி பேசுகிறோம், ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்திக்கொள்கிறோம். மொழிபுரியாத இரு நோயாளிகள் நட்புக்கொள்வதும், அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும் நடக்கத்தான் செய்கிறது. அதுவும் அவர்களை நோய்மையின் வலிகளில் இருந்து மீட்டும் போகிறது போலவே உணர்கிறேன்.

1970 களின் இறுதியில் எனது தாயார் பிபிலை வைத்தியசாலையில் வைத்தியராகத் தொழில் புரிந்துகொண்டிருந்தார். நானும் தம்பியும் மட்டக்களப்பில் விடுதியில் தங்கியிருந்து பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தோம். பிபிலயைில் இருந்து 15 - 20 மைல் தூரத்தில் ஒரு தமிழ் முதியவர் சிங்களவர்களின் பிரதேசத்தில் ஒரு அம்மன் கோயில் கட்டி அதற்காகவே வாழ்ந்திருந்தார். அம் முதியவர் ஒரு முறை நோய்வாய்ப்பட்ட போது எங்கள் வீட்டிலேயே பல நாட்கள் தங்கியிருந்து அம்மாவிடம் சிகிச்சைபெற்றார். நான் விடுமுறைக்குச் சென்ற போது அவர் எப்போதும் தனக்குத் தானே பேசிக்கொண்டும், தேவாரங்களை பாடிக்கொண்டும் இருப்பார். என்னையழைத்து அம்மன் தனக்கு கனவில் தோன்றி தனக்கு ஒரு ”கோயில் கட்டு” என்று கட்டளையிட்டு, அதன் பின் அவர் எப்படி அந்த கோயிலை கட்டி முடித்தார் என்னும் கதையை தினமும் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டேயிருப்பார். அவருக்கு யாருடனாவது பேசவேண்டும் என்று ஆசையிருந்து அதனால் தான் அக்கதையை திரும்ப திரும்ப சொல்லிலிக்கொண்டிருந்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. நோயாளிகளின் தனிமை மிகக் கொடியது.  தனிமை பல வித விகாரமான எண்ணங்களை ஏற்படுத்துவதால் நோய்மையின் வலியை, நிர்க்கதியான நிலையை தனிமை பல மடங்கு அதிகரித்துப்போகிறது போலவே உணர்கிறேன். அதனாலேயே நோயாளிகள் தனிமையை வெறுக்கின்றனர்.

அதன் பின்னான காலங்களில் அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பமும் மிகவும் நட்பாக இருந்தன. அப் பெரியவர் இறந்த போது அம்மாவும் நானும் மரணச்சடங்கில் கலந்து கொண்டோம். இன்று அம்மாவிடம் அவரைப்பற்றிக் கேட்டேன். அவருக்கும் அச் சம்பவம் சற்று நினைவில் இருந்தது. ஆனால் அவர்களுடனான தொடர்புகள் அற்றுப்போய்விட்டதாகக் கூறினார்.  நோயுறும்போது ஏற்படுத்தப்படும் உறவுகள் மேலோட்டமான உறவுகள் போலல்லாமல் ஆழமான உறவுகளை உடையதாக இருக்கின்றன என்றே எண்ணத்  தோன்றுகிறது.

வட மேற்கு நோர்வேயில் வாழ்ந்திருந்த காலங்களில் மனதுக்கு பிடித்தமான ஒரு வைத்தியர் இருந்தார். அவரிடம் பேசுவதே நோய்மையைக் குறைப்பது போலுணர்வேன். பல தமிழர்களும் அவரையே வைத்தியராகக் கொண்டிருந்தனர். 
ஒஸ்லோவுக்கு இடம் பெயர்ந்த பின் அண்மைக் காலங்களில் நானும் மன, உடல் உபாதைகளுடன் அடிக்கடி வைத்தியர்களை நாடிச் சென்று கொண்டிருக்கிறேன். இன்று வரை 'மனதுக்கு பிடித்தமான' வைத்தி‌யர் கிடைக்கவில்லை. ஏனோ என் மனதில் "நோயாளிகளின் மனதை உணர்ந்து, புரிந்து, மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் அருகிக்கொண்டே போகிறார்கள்" என்றே எண்ணத் தோன்றுகிறது. என் கணிப்பு பொய்த்துப்போகட்டும்.

எனக்குள் நோய்கள் பற்றிய சில சிந்தனைகளையாவது தூண்டிவிட்ட எஸ்.ராவின் ”துயில்” நாவலுக்கு நன்றி.

1 கருத்து:

hn சொன்னது…

வைத்தியசாலை, பாடசாலை என்று எமது சமூகம் அவற்றை தொழில் புரிகிற சாலைகளாகத்தான் பார்க்கின்றன. நீங்கள் கூறுவதுபோல் வைத்தியர்கள் மட்டும் அல்ல ஆசிரியர்களும் இருத்தல் அவசியம்.

கருத்துரையிடுக