திங்கள், அக்டோபர் 03, 2011

தாய்லாந்துப் பயணம் - 21


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
தாய்லாந்தில் மிகப் பெரிய விற்பனை நிலையமான Big C  க்குப் போய் மிக்ஸி வாங்கும் போது
ஒரு இளம் பையன் நின்றிருந்தான். அவன் சீனாவில் செய்த பொருள் நல்லதல்ல. மலேசியாவில் செய்தது தான் நல்லது வாங்குங்கள் என்று ஆலோசனை கூறினான். நாம் மலேசியாவில் செய்ததையே வாங்கினோம். அங்கும் எமது வாங்கும் பொருட்களின் பட்டியலில் வேறு இடங்களில் அகப்படாத சில பொருட்களை வாங்க முடிந்ததும் மகிழ்ச்சியாகவே இருந்தது. Big C யில் பொருட்களை வாங்கியதும்,
நேராக எமது காகோ ஏஜென்சிக் கடைக்கு வந்தோம்.
இப்போது நாம் வாங்கிய எமது பொருட்களைக் கடல் வழிப் பொதியாகக் கட்டும் இறுதி வேலையைச் செய்யக் கேட்டோம். பொருட்களின் பற்றுச் சீட்டுகள் எல்லா இடத்திலும் இரண்டு பிரதிகள் வாங்கி வைத்திருந்தோம். ஒன்றைக் கட்டும் பொதியுடனும் ஒன்றை எம்முடனும் வைத்துக் கொண்டு நாம் பார்த்துக் கொண்டிருக்கவே அனைத்தையும் பெரிய அட்டைப் பெட்டிகளில் கட்டி ஒட்டினார்கள். மறுபடி பொலிதீன் உரப் பைகளால் சுற்றிக் கட்டி, அடுக்கினார்கள்.
எல்லாம் எழுதி பணத்தையும் கட்டினோம். ஆமாம் முதலே கூறியிருந்தனர் காசாகவே தர வேண்டும், வங்கி மூலமோ, காசோலையோ வேண்டாம் என்று. நாமும் தயாராகவே இருந்தோம். அவர்களுக்குப் பயணமும் கூறிவிட்டு. வாடிவீட்டு வாசலில் நின்ற வாடகைக் காரை மாலை 8.00 மணிக்கு சுவர்ணபூமி விமான நிலையத்திற்குப் போகப் பேசி வைத்து விட்டு அறைக்கு வந்தோம்.
இரவு 11.55க்கு ஒஸ்ரியா வீயென்னாவிற்கு விமானம்.
வாடிவீட்டில் எப்போதும் நாம் வர கதவு திறந்து சேவை புரிந்தவர்கள், அறை துப்பரவாக்கி படுக்கைத் துணிகள் மாற்றிய பெண்கள் என்று சிலருக்கு அன்பளிப்புப் பணங்கள் கொடுத்தோம்.
இரவு 8.00 மணிக்கு ராக்சி ஏறினோம் 9.00 மணிக்கு சுவர்ணபூமியில் இறங்கினோம். சில சுவர்ணபூமி விமான நிலையப் படங்களை நீங்கள் பார்க்க வேண்டும். பாற்கடலைப் பரந்தாமன் கடைகிறாரோ என்று எண்ணும் படி இவை இருந்தது. அதன் கருத்து, ஏன், என்பவை எமக்குப் புரியவில்லை. பாருங்கள்.  ஆச்சரியத்தில் போய் இறங்கியதும் நான் விரும்பி எடுத்த படங்கள்.
பயணம் சுலபமாக முடிந்தது.
சனிக்கிழமை நமது வீடு டென்மார்க் வந்து சேர்ந்தோம்.
பயணத்தில் இங்கிருந்து போகும் போது யன்னலூடாக இமாலயாப் பனி மலைக்காட்சியைப் பார்த்தது மறக்க முடியாதது. நான் பார்க்க, சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஆவலாக அதைப் பார்த்தது மறக்க முடியாதது. நான் பார்த்துக் காட்டியதால் பலர் அக்காட்சியை ரசித்ததும் மறக்க முடியாதது. இன்னும் சில விமான நிலையப் படங்களையும் பாருங்கள். So beautiful.    
இந்தப் பயண அனுபவத்தை உங்களுடன் நான் பகிர்ந்ததில் மிகவும் மகிழ்கிறேன்.
கவிதை எழுதுவது எப்படி எனக்கு மிகவும் பிடித்தமானதோ அப்படியே, இரண்டாவதாகப் பயண அனுபவம் எழுதுவதிலும் மகிழ்வடைகிறேன். இந்த சந்தர்ப்பம் உருவான இலண்டன் தமிழ் வானொலிக்கும், கருத்துகள் தந்த நேயர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இறுதியாக தாய்லாந்தின் தாய்லாந்து மொழிப் பெயரை உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன். தயவு செய்து பொறுமையாக நான் 2 மைல் நீளமான பெயரைக் கூறும் வரை ப்ளீஸ்! கேளுங்கள். எனக்கும் இது புரியவில்லை. ஏன் இப்படி இவ்வளவு நீளப் பெயர் என்று மொழி பெயர்ப்பாளரைக் கேட்டேன். அவருடன் அன்று ஒரு தாய்லாந்துப் பெண்ணும் வந்திருந்தார். சிரிக்கிறர்கள்.
முதல் தடவை இதைக் கூறும் போது எழுதி வைத்தேன். இரண்டாம் தடவை தாய்லாந்து மொழி பெயர்ப்பாளன் நிக், ” வேதா! தாய்லாந்துப் பெயரைக் கூறுகிறாயா?” என்று கேட்டார். மறுபடி நான் அதைக் கூறி அவர்களை அசத்தினேன். எழுதியதைப் பார்த்துத் தான் கூறினேன். இதோ கேளுங்கள். இது தான் அந்தப் பெயர்.
Grunteb /city of angels)
Mahanakon Armon Tathna Kosin Mahindra Ayothiya Mahadilok Popnoprat Rajathany purirum yadomratchnywet Mahachadan amoniman akuathan chasith saka vishnu gampasit
"மகானக்கோன் ஆர்மோன் ரத்னா கோசின் மகின்டிறா அயோத்தியா மகாடிலொக் பொப்னோப்றாற் ராஐதானி புறிறும் யதோம்றட்சினிவெற் மகாசடன் அமோனிமான் அக்குஆதன் சாசித் சகா விஸ்ணு கம்பாசிற்."
இது தான் அந்தப் பெயர்.
நான் என் கணவருக்குக் கூறினேன், ‘ ‘தாய்லாந்துப் பயணக் கதை முடிகிறதப்பா”  என்று.  ”ஓகோ! தாய்லாந்தின் தாய்லாந்து மொழிப் பெயர் கூறிவிட்டாயா?”     என்றார் இறுதியில் கட்டாயம் கூறுவேன் என்றேன். இதோ கூறிவிட்டேன்.
சரி நேயர்களே! ஆண்டவன் சித்தம் இருந்தால் மறுபடியொரு பயணக் கதையில் சந்திப்போம்.
நன்றியுடன் வணக்கம்.
வேதா. இலங்காதிலகம்.  
ஓகுஸ், டென்மார்க்.

4 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

தாய்லாந்திற்கு நீங்கள் பணம் செலவழித்து சென்றிருக்கின்றீர்கள் நாங்களோ நீங்கள் சுற்றிப்பார்த்த அனைத்து இடங்களையும் இலவசமாகவே பார்த்த ஒரு நிறைவை உங்கள் பயணக் கட்டுரை ஏற்படுத்தியது . மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள் வேதா அன்ரி

RAJAN, DK சொன்னது…

அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள். தாய்லாந்துக்கு பிறகு எந்த நாடு? ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறேன்.

Lakshmi Srinivasan, Brunei சொன்னது…

Really good story

vetha (kovaikkavi) சொன்னது…

My dear Vinothini, Rajan DK,Lakshmi Srinivasan- Brunei மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும். இது இறுதி அங்கம். பயணத்தில் கூட வந்து கருத்துரையிட்ட அனைத்து நேயர்களுக்கும், மிக நன்றி. ஆனைவருக்கும் இறை ஆசி கிட்டட்டும். அந்திமாலையும் இப்பயணக் கட்டுரையை எடுத்து பிரசுரித்தமைக்கு மனம் நிறைந்த நன்றியைக் கூறுகிறேன். நன்றி. வணக்கம்.

கருத்துரையிடுக