ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர்.
பெரியார் - இந்த பெயரைக் கேட்டதுமே பெரும்பான்மை இன்றைய இளைய தலைமுறையினரிடம் அவரைப் பற்றி அறியப்பட்டுள்ள சிந்தனை "பெரியார் ஒரு நாத்திக தலைவர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவர் கேவலமாக திட்டுவார். கடவுள் சிலைகளை போட்டு உடைத்தவர்" இவ்வளவு தான். இதற்கு மேல் பெரியாரைப் பற்றி அவர்களுக்கு பெரிய அபிப்பிராயம் எதுவுமில்லை. இதற்கு காரணம் பெரியாரை ஒரு பரிமாணத்தில் குறுக்கி அதன் மூலம் சுய தேடல் இல்லாத, வெகுஜன பிரச்சாரங்களை மீறி எதையும் தெரிந்து கொள்ள ஆர்வமில்லாத பெரும்பான்மை இளைய சமூகத்தினரிடையே பெரியார் பற்றிய குறுகிய பிம்பத்தை பதிய வைத்து விடலாம் என்று சிலர் மேற்கொண்ட முயற்சி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. மாறாக பெரியார் தொண்டர்கள் வழி வந்தவர்கள் கூட அவரின் ஒற்றைப்பரிமாணத்தை தாண்டி அவரை முன்னிறுத்த தவறியதும் காரணமே. பெரியார் வழி வந்த அரசுகள் மாவட்ட தலைநகர்களில் நிறுவிய நினைவுத்தூண்களிலும் சரி, சிலைகளிலும் சரி பெரும்பாலும் பொறிக்கப்பட்ட வசனம் "கடவுளை நம்பியவன் முட்டாள்" என்ற வாசகம் தான். இதைத் தாண்டி பெரியாரின் சமூக நீதிக்கருத்துக்கள், சாதி ஒழிப்பு கருத்துக்கள், பெண்ணிய சிந்தனைகள் பொறிக்கப்படுவதில்லை. பெரியாரின் பல முக்கிய பரிமாணங்கள் இளைய தலைமுறையினருக்கு சரியாக எடுத்துச்சொல்லப்படுவதில்லை.அதிர்ஷ்ட வசமாக 'பெரியார்' திரைப்படம் இந்த குறையை சற்று போக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நகரும் இந்த திரைப்படத்தின் முதல் ஒரு மணி நேரம் மிகச்சாதாரணமாக சொல்லப்பட்டிருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் படிப்படியாக சத்தியராஜின் உடலுக்குள் பெரியார் ஆவி புகுந்து கொண்டது போல கன கச்சிதமாக பெரியாரை நம் கண் முன் நிறுத்துகிறார் சத்தியராஜ்.
முதல் மனைவியாக வரும் ஜோதிர்மாயி, இரண்டாவது மனைவியாக வரும் குஷ்பு இருவரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ராஜாஜியின் கதா பாத்திரம் தேவைக்கு அதிகமாகவே வருகிறது. அதே நேரத்தில் ராஜாஜியின் மறைவுக்கு சென்று பெரியார் அழுதது சேர்க்கப்படவில்லை.
இளையராஜா இசையமைத்திருந்தால் மிகச்சிறப்பாக இருந்திருக்கும் என்றாலும் கூட வித்தியாசாகர் எதிர்பார்த்ததை விட நன்றாக இசையமைத்திருந்தார். வைரமுத்துவின் ஆழமான வரிகளின் அர்த்தம் சிதையாமலும், இசைக்குள் வார்த்தைகளை அமுக்கி விடாமலும் வரிகளுக்கு கைதட்டல் கிடைக்கும் அளவுக்கு இசையை வழங்கியிருக்கிறார். 'வைக்கம்' போராட்ட காட்சியில் வரும் ஒரு பாடலில் தீண்டாமை குறித்து "அவர்கள் மட்டும் தானா விந்து-லிருந்து பிறந்தார்கள்? நாங்கள் என்ன எச்சிலிலுருந்தா பிறந்தோம்? என்னும் பொருள் படும் வரிகள் கைதட்டலை அள்ளுகிறது.
தங்கர் பச்சானின் ஒளிப்பதிவும் ,அந்த கால பழைய காற்றாடி போன்றவற்றை நுணுக்கமாக பயன்படுத்திய கலை இயக்குநரும் நிறைவாக செய்திருக்கிறார்கள் .
சத்தியராஜ் பற்றி சொல்ல வேண்டுமென்றால் ... முதல் பாதியில் அதே சத்யராஜ் பாணி உச்சரிப்பை தவிர்த்திருக்கலாம் .இரண்டாவது பாதியில் சத்தியராஜ் சுத்தமாக மறைந்து பெரியார் நம்மை ஆட்கொள்ளுகிறார் .ஆட்சியமைக்கும் போது அண்ணாவின் விஜயம் மற்றும் இறுதிக்காட்சியில் சத்தியராஜ் பெரியாராகவே வாழ்ந்திருக்கிறார் .
95 வருட வாழ்க்கையை 3 மணி நேரத்தில் குறுக்கும் கடினமான பணி இயக்குநருக்கு. காந்தியாரோடு சந்திப்பு, விதவை மறுமணம், தேவதாசி ஒழிப்பு, கள்ளுக்கடை மறியல், வைக்கம் போராட்டம், காங்கிரசில் ஜாதிப்பாகுபாடு, காங்கிரசிலிருந்து வெளியேற்றம் ஆகியவை சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் பின்னர் தி.க உதயம், இரண்டாம் திருமணம், திமுக தொடக்கம், பெருந்தலைவர் காமராஜர் சந்திப்பு, திமுக ஆட்சி அமையும் போது அண்ணா சந்திப்பு, கலைஞர் சந்திப்பு, எம்.ஜி.ஆர் சந்திப்பு என்று துண்டு துண்டாக காட்சிகள் நகர்வதாக தோன்றுகிறது. விஷுவல் ரீதியாக இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
மிகவும் உடல்நிலை பாதிப்பட்ட போதிலும், சொன்ன தேதியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, தனது நெஞ்சில் தைத்திருக்கும் முள் பற்றி வேதனைப் பட்டு விட்டு உரையைத் தொடரும் போதே மயங்கி சாய்கிறார் பெரியார். 95 வயதிலும் தன் இறுதி மூச்சு வரையிலும் சுயமரியாதை, ஒடுக்கப்பட்டோர் இழிவு நீக்கல், விழிப்புணர்வுக்காக பாடுபட்ட மாபெரும் தலைவன் மறைகிறார். பாரம்பரியத்தை மீறி கலைஞர் அரசு வழங்கிய 'அரசு மரியாதை' இறுதி ஊர்வலத்தின் சில நிஜக் காட்சிகளோடு படம் முடிகிறது.
பெரியார் வாழ்க்கை என்பது 3 மணி நேரத்தில் விளக்கப்பட முடிகிற ஒன்றல்ல. இந்த பெரியார் படம் பெரியாரை ஏற்கனவே படித்தறிந்தவர்களுக்காகவோ, புரிந்து கொண்டவர்களுக்காகவோ உருவாக்கப்பட்டதல்ல. மாறாக, பெரியாரின் ஒரு பரிமாணத்தை மட்டுமே அறிந்த இன்றைய தலை முறை "ஆகா பெரியாருக்கு இத்தனை முகங்களா ? இத்தனைக் காலம் தெரியாமல் விட்டுவிட்டோமே" என்றுணர்ந்து அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் பயணத்தின் ஒரு நல்ல அறிமுகப் படலமாக இந்த படம் அமைந்திருக்கிறது. அந்த வகையில் இந்த படம் அதன் இலக்கை வென்றிருக்கிறது.
ஞானராஜசேகரனுக்கும், சத்திய ராஜ்-க்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!
2 கருத்துகள்:
மறு வெளியீட்டுக்கு மிக்க நன்றி
சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி
நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
யாதெனில் ..
சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .
உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு ....
குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.
See this site :
http://www.vallalyaar.com/
கருத்துரையிடுக