திங்கள், அக்டோபர் 17, 2011

தாரமும் குருவும் . பகுதி - 4.8

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன் 
அல்லைப்பிட்டி 1977
கடந்த இரு வாரங்களுக்கு முன்னால் எழுதிய இத்தொடரின் 'அல்லைப்பிட்டி' பற்றிய பதிவில் எங்கள் கிராமமாகிய 'அல்லைப்பிட்டி' என்ற பெயரைக் கேட்டதும் உங்களுக்கு ஏதாவது நினைவிற்கு வருகிறதா? என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன். இத்தொடரைத் தவறாமல் வாசித்து வரும் நூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் உலகப் பரப்பின் நான்கு திசைகளிலும் வாழ்ந்தாலும் டென்மார்க்கில் வாழும் சகோதரி வினோதினி பத்மநாதன் மட்டுமே எனது கேள்விக்கான பதிலை தனது 'ஊகம்' என்ற அடிப்படையில் 'கருத்துரை' பகுதியில் எழுதியிருந்தார். அவருக்கு எனது உளமார்ந்த நன்றிகள். இருப்பினும் அவர் என்னை சிக்கலில் மாட்டிவிடக் கூடிய ஒரு கேள்வியையும் கேட்டிருந்தார். அதாவது 'அல்லை' என்றால் என்ன? என்பதுதான் அந்தக் கேள்வி. அந்தக் கேள்வியைப் பார்த்ததும் எனக்கு 'தர்ம சங்கடமாகிப்' போய்விட்டது. காரணம் என்னவென்றால் 'அல்லைப்பிட்டி' என்ற பெயருக்கான காரணத்தை விளக்குவதிலேயே இத்தொடருக்கான ஒரு நாலு வாரத்தை 'நகர்த்திச் செல்லலாம்' என்ற திட்டத்தில் 'தொலைக்காட்சித் தொடர்' தயாரிப்பாளர்களின் உளப்பாங்கில் இருந்த எனது திட்டம் தவிடுபொடியானது. ஏனென்றால் அவரது கேள்விக்கு பதிலளித்தால் இத்தொடரின் முக்கியமான சில விடயங்களை 'போட்டுடைக்க' வேண்டியதிருக்கும். அதன் பின்னர் தொடரைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு சில தகவல்களை வழங்க முற்படுகையில் அது 'அரைத்த மாவை' அரைப்பதற்குச் சமம் என்பதை சகோதரி வினோதினி அவர்கள் புரிந்து கொள்வார் என்பது எனது நம்பிக்கை.
சரி 'அல்லைப்பிட்டி' என்ற பெயரைக் கேட்டதும் உங்களில் சிலருக்கு கடந்த 2006 ஆம் ஆண்டில் இலங்கையில் நோர்வீஜிய மற்றும் நோர்டிக் நாடுகளைச்(டென்மார்க், சுவீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து) சேர்ந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு கடமையில் இருந்த சூழ்நிலையில் நடைபெற்ற ஒரு சனிக்கிழமை 'இரவுப் படுகொலைகள்' நினைவிற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. அதேபோல் ஏதாவது ஒரு காரணத்திற்காக தீவகத்திற்கு செல்பவர்களோ, அல்லது தீவகக் கிராமங்களில் வாசிப்பவர்களோ தீவகத்தில் நுழையும் புள்ளியாக விளங்கிய, கடந்த 1998 ஆம் ஆண்டு தொடக்கம் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுச் சோதனை செய்யப்படும் அல்லைப்பிட்டிச் 'சோதனைச் சாவடி' உங்கள் நினைவிற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.
எங்கள் அல்லைப்பிட்டிக் கிராமம் 1970 கள் வரையில் மிகவும் அழகிய கிராமமாகத் திகழ்ந்தது. தீவக் கிராமங்களிலேயே இக்கிராமத்திற்கென்று சில விசேடங்கள் இருந்தன. யார் கண் பட்டதோ? யாழ் மாவட்டத்தில் 'மணல்' வியாபாரம் செய்யும் வியாபாரிகள், தரகர்களின் கண்ணில் அந்த அழகிய கிராமம் பட்டது. போர்த்துக்கேயர்கள் மெது மெதுவாக இலங்கை எனும் நாட்டிற்குள் நுழைந்தது போல இவர்களும் அல்லைப்பிட்டிக்குள் நுழைந்தார்கள். அல்லைப்பிட்டியில் வாழ்ந்துவந்த மக்களில் அரைவாசிப் பேருக்குமேல் அவர்கள் குடியிருந்த நிலத்திலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் ஒரு பனங் காணியோ(பனைகள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் நிலம்) தரவைக் காணியோ(புறம்போக்கு நிலம்), வயல் காணியோ, தோட்டக் காணியோ, கடற்கரையை அண்டிய மணற்பாங்கான மேட்டு நிலமோ(இதனை இலங்கைத் தமிழில் 'பிட்டி' அல்லது 'புட்டி' என்பர்) உரிமையாக இருந்தது. இவற்றில் தோட்டக் காணியையும், வயற்காணியையும் ஓரளவு பராமரித்து அதிலிருந்து பலாபலன்களை(விளைச்சலைப்) பெற்று வந்த மக்கள் ஏனைய பகுதி நிலங்களை கவனிக்காமல் விட்டு விட்டனர். மேற்படி கவனிக்காமல் விடப்பட்ட நிலத்தில் மிகவும் பெறுமதி வாய்ந்த வளமாக 'மணல்' இருந்தது. யாழ் மாவட்டத்தில் கட்டிடங்கள், வீடுகள் கட்டுவதற்கு யாழ் குடாநாட்டில் கடற்கரையோரக் கிராமங்களிலிருந்தே மணல் ஏற்றுமதி செய்யப்பட்டது. வல்லிபுரம், மணல்காடு,அம்பன் குடத்தனை,  நாகர்கோவில், குடாரப்பு, செம்பியன்பற்று, தாளையடி, மருதங்கேணி, ஆழியவளை, முள்ளியான் போன்ற கிராமங்களில் இருந்தே யாழ் நகருக்கும் யாழ் குடாநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் 'மணல்' எனும் கட்டிட வேலைகளுக்கான மூலப்பொருள் கிடைத்தவண்ணம் இருந்தது.
மேற்படி கிராமங்கள் யாழ் நகரத்திலிருந்து மிகவும் தொலைவில் இருந்த காரணத்தாலேயே மணல் விற்பனையாளர்களின் கண்ணில் தீவகக் கிராமங்களும், குறிப்பாக 'அல்லைப்பிட்டிக்' கிராமும் பட்டது. யாழ் குடாநாட்டின் 'வடமராச்சி' கிராமங்களில் இருந்து ஒரு லோடு(ஒரு லாரி, அல்லது டிராக்டர் நிரம்ப) மணலை ஏற்றிவந்து சேர்ப்பதற்கு எடுக்கும் நேர இடைவெளிக்குள் யாழ் நகரத்திலிருந்து ஐந்தே கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள 'அல்லைப்பிட்டிக்' கிராமத்தில் இருந்து ஐந்து தடவைகள் மணலை ஏற்றி வந்துவிடலாம். மணல் வியாபாரிகள் விடுவார்களா என்ன?
அல்லைப்பிட்டியிலிருந்து இரவு பகலாக மணல் லாரிகளும், டிராக்டர்களும் அல்லைப்பிட்டியின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு பறக்க ஆரம்பித்தன. உலக சாதனை செய்யத் துடித்தவர்கள் போலவும், 'கின்னஸ்' புத்தகத்தில் தமது பெயர்களைப் பதிக்க வேண்டும் எனத் துடிப்பவர்கள் போலவும் மணல் வியாபாரிகள் இரவு பகலாக, ஊண் உறக்கமின்றி அல்லைப்பிட்டியின் மணல் வளத்தை அபகரித்து யாழ் நகரத்தில் நல்ல விலைக்கு விற்றனர்.
செல்லையாத் தாத்தாவின் நிலத்தில் கிடந்த மணலை அள்ளுவதற்கு ஒரு குறிப்பிட்ட விலையைப் பேசி(அவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் பத்திலொரு மடங்கு) செல்லையாத் தாத்தாவிற்குப் பணம் தந்தனர். இதே செல்லையாத் தாத்தாவின் காணிக்கருகில்(நிலத்திற்கு அருகில்) கவனிப்பாரின்றிக் கிடக்கும் 'பொன்னையாத் தாத்தாவின்' காணியில் இரவு வேளைகளில் அவரிடம் கேட்காமலும், அவருக்குப் பணம் தராமலும் மணலை ஏற்றிச் சென்றனர். தனது காணியில் மணல் திருடப்பட்டு, மணல் மேட்டிற்குப் பதிலாக ஒரு மிகப்பெரிய கிடங்கு(பள்ளம்/குழி) ஒன்று ஏற்பட்டுள்ளதை, பொன்னையாத் தாத்தா அடுத்த நாளோ, அடுத்த வாரமோதான் அறிந்து கொள்வார்.
மேற்படி விடயத்தை இந்த வாரம் இத்துடன் நிறுத்திக் கொண்டு இரண்டு வாரங்களில் மீண்டும் தொடர்கிறேன். அதற்கு முன்னதாக சகோதரி வினோதினி மற்றும் ஏனைய வாசகர்களின் பொறுமையை மேலும் சோதிக்காமல் பதில் கூறி முடிக்கிறேன். 'அல்லை' என்றால் 'வற்றாளங் கிழங்கை' ஒத்த ஒரு வகைக் கிழங்கு ஆகும். வற்றாளங் கிழங்கு இனிப்பாக இருக்கும். ஆனால் 'அல்லைக் கிழங்கு' இனிப்பாக இருக்காது. மணற்பாங்கான நிலத்தில் படரும் கொடியில் உருவாகும் இக்கிழங்கை மிருகங்கள் மாத்திரமன்றி மனிதர்களும் உணவாக உட்கொண்டனர்.சரி, அல்லைப்பிட்டிக்கும் 'அல்லைக் கிழங்கிற்கும்' என்ன சம்பந்தம்? விடை தெரிந்து கொள்ள 'தாரமும் குருவும்' தொடரில் 'அல்லைப்பிட்டி 1977' பகுதியைத் தொடர்ந்து வாசியுங்கள்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி.
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.


(தொடரும்)

4 கருத்துகள்:

Akilan சொன்னது…

Thanks Thasan,good for reading

vinothiny pathmanathan dk சொன்னது…

இந்த வாரத்தின் தாரமும் குருவும் கட்டுரையில் அல்லைப்பிட்டி என்ற காரணப் பெயரை அறியத்தந்த சகோதரர் தாசனுக்கு நன்றி. அல்லை என்பது ஒரு வகையான கிழங்கு என்று குறிப்பிட்டிருந்தீர்கள் .உண்மையை சொன்னால் அப்படியொரு கிழங்கின் பெயரை நான் இதுவரை அறிந்ததே இல்லை .இந்தக் கிழங்கு அல்லைப்பிட்டியில் மாத்திரம் தான் கிடைக்குமா ? அல்லது நாட்டின் ஏனைய பாகங்களிலும் வேறு பெயர்களில் கிடைக்குமா? எனக்கு ஊர்களுக்கான பெயர்களின் காரணங்களை அறிவதிலே ஒரு ஆர்வம் இருக்கிறது. அல்லைப்பிட்டியை சேர்ந்த ஒரு நண்பருடன் உரையாடிய போது அல்லிராணி ஆண்டதனால் அந்த இடம் அல்லிப்பிட்டிஎன்று அழைக்கப்பட்டதாகவும் நாளடைவில் அது மருவி அல்லைப்பிட்டியானதாகவும் ஒரு கதை இருப்பதாக சொன்னார் . இப்போது பார்த்தீர்களா ஒரு ஊரின் பெயரை அறியப்போய் ஒரு கிழங்கின் புது பெயர் ஒன்றை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி தாசன் .தகவலுக்கு .தொடர்ந்து எழுதுங்கள் .(தாங்கள் குறிப்பிட்டிருந்தபடி அல்லைப்பிட்டி 1977 என்ற பகுதியினை மீண்டும் ஒருமுறை வாசித்து பார்த்தேன் )

இ. சொ. லிங்கதாசன், டென்மார்க். சொன்னது…

சகோதரி வினோதினி மற்றும் சகோதரர் அகிலன் ஆகியோரின் கருத்துக்களுக்கும், ஊக்குவிப்பிற்கும் நன்றிகள்.
"எனது தொடரை தொலைக்காட்சித் தொடர் போல ஒரு 1500 எபிசோட் இழுத்துக்கொண்டு போகலாம் எண்டு நினைச்சால் விடமாட்டீங்க போல இருக்கே"(Just a joke)
'அல்லைக் கிழங்கு' பற்றியும், 'அல்லிராணி' பற்றியும் எதிர்வரும் வாரங்களில் (இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை)விரிவாகக் கூறுவேன்.இருப்பினும் 'அல்லைக்கிழங்கு' அல்லைப்பிட்டியில் மட்டும் கிடைப்பது அல்ல. அது பெரும்பாலான கடற்கரைக் கிராமங்களில் கிடைப்பது. விதிவிலக்காக கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் உள்ள சாவகச்சேரி பகுதியிலும் கிடைத்தது.

V.Elangathilakam. சொன்னது…

நல்ல முசுப்பாத்தியாக உள்ளது தொடரும், கருத்துகளும். ரசிக்கிறோம். நன்றி. வாழ்த்துகள்.

கருத்துரையிடுக