திங்கள், அக்டோபர் 10, 2011

தாரமும் குருவும் . பகுதி - 4.7


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)

பகுதி 4.7

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

தமிழ்நாட்டில் நிலைமை இப்போதும் மோசமாகத்தான் உள்ளது. Pre.KG, LKG, UKG வகுப்புகளில் பயிலும் இளம் குருத்துகளை, மெல்லிய மொட்டுகளை, இளம் பிஞ்சுகளை அடிக்கின்ற ஆசிரியைகள் தமிழ்நாட்டுத் தனியார் பாடசாலைகளில்(Matriculation Schools) கல்வி கற்பிக்கிறார்கள்.

"சாந்தி மிஸ் என்னைய ஸ்கேல்(அடிமட்டம்) கொண்டு அடிச்சாங்க", "ராதா மிஸ்ஸு என்னைய குச்சிய(பிரம்பு) வைச்சு அடிச்சுட்டாங்க" நந்தினி 
மிஸ் என் தலையில பலமா குட்டு வைச்சாங்க", "லல்லி மிஸ்ஸு ஏங் காதுல கிள்ளினாங்க" என்று தன் பெற்றோர்களிடம் முறையிடும் பிஞ்சுகள் எத்தனை? மேற்படி குழந்தையின் குற்றச்சாட்டின்மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாமல் திணறி, விழி பிதுங்கி நிற்கும் பெற்றோர்கள் எத்தனை ஆயிரம் பேர்? பிள்ளைகளுக்கு ஆதரவாக எதுவுமே செய்யமுடியாது, கண்கலங்கி, கைபிசைந்து நிற்கும் தாய்மார்கள் எத்தனை? தமது 'குரூரமான குணத்தை' குழந்தைகளின்மீது காட்டுகின்ற ஆசிரியைகளின்மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் பெற்றோர்கள் திண்டாடுவதற்குக் காரணம் மேற்படி பாலர் பள்ளியின் நிர்வாகம்(management) மிகவும் பலம் வாய்ந்ததாக(பணம், மற்றும் அரசியல் செல்வாக்கு) இருப்பதுதான். மேற்படி பிரபலம் வாய்ந்த, பலமான பள்ளியில் பிள்ளையைச் சேர்ப்பதற்கு அனுமதி கிடைப்பதற்கே சராசரிப் பெற்றோர் 'படாத பாடு' படவேண்டிய நிலையில் அப்பள்ளியின் தலைமைத்துவத்துடனோ, ஆசிரியர்களுடனோ மோதுவதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் விரும்பாமல், பின்வாங்கி விடுவதற்குக் காரணமே "இன்னொரு பிரபலமான பள்ளியில் பிள்ளையைத் திரும்பவும் சேர்ப்பதற்கு "நாயாய்ப் பேயாய்" அலையவேண்டியிருக்கும் என்பதுதான். பெற்றோர்கள் முறையீடு(Complaint) செய்தாலும் பள்ளி நிர்வாகங்கள் மேற்படி குற்றச் சாட்டின்மீது நடவடிக்கை எடுக்குமா? என்பதும் 'மில்லியன் டாலர் கேள்வியாகும்'.இத்தகைய காரணங்களால் பெற்றோர்கள் 'பின்வாங்கி' விடுகின்றனர்.
மேற்படி பாடசாலைகளில் "மிஸ்ஸு' அடிச்சாங்க" என்று 'ஆசிரியைகளை' நான் குறிப்பிட்டதற்குக் காரணம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் ஆரம்பப் பள்ளிகளில், பாலர் பாடசாலைகளில் பெரும்பாலும் 'பெண்களே' ஆசிரியப் பணி புரிகிறார்கள் என்பதை தமிழகம் தவிர்த்து வேறு நாடுகளில் வாழும் வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும்.
சரி, பிள்ளையை அடிப்பது, ஒரு பெரிய குற்றமா? "அடியாத மாடு படியாது", "அடிச்சு வளர்க்காத பிள்ளையும், ஒடிச்சு(முறித்து) வளர்க்காத முருங்கையும் உருப்படாது"என்றெல்லாம் நம் முன்னோர்கள் பழமொழிகள் உருவாக்கிப் போயினரே? அப்படியானால் அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கும் பெரியோர்களுக்கு நான் கூற விரும்புவதெல்லாம் முற்காலத்தில் தமிழில் புலமை உள்ளவர்களில் சிலர் உருவாக்கிய 'எதுகை மோனையை' மட்டுமே அடிப்படையாகக் கொண்ட, சமுதாய அக்கறை சிறிதும் இல்லாத பழமொழிகள் இருபதாம் நூற்றாண்டு வாழ்க்கைக்கு உதவாது என்பதுதான். அது மட்டுமல்லாமல் அக்கால மக்கள் வாழ்ந்த, கிடைப்பதைக் கொண்டு வாழுகின்ற(Primitive life) வாழ்க்கையில் சில பழமொழிகள் உபயோகத்திலும், நடைமுறைக்குச் சாத்தியமாகவும் இருந்திருக்கும். ஆனால் நாம் வாழும் கம்பியூட்டர் யுகத்தில்??? மேலே நான் கூறிய இரண்டு இலங்கைப் பழமொழிகளில் முதலாவது பழமொழியில்கூட 'மாட்டைப்' பற்றித்தான் குறிப்பிடப் பட்டிருக்கிறதே ஒழிய, 'குழந்தையைப் பற்றி அல்ல என்பதைப் பெற்றோர்களும், ஆசிரியப் பெருமக்களும் கவனத்தில் கொள்க.
நான் வாழுகின்ற டென்மார்க் நாட்டில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதை 1961 ஆம் ஆண்டிலேயே அரசு சட்டம் போட்டுத் தடுத்து விட்டது. இதே போலவே 1960, 1970 களிலேயே ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் தடுக்கப் பட்டு விட்டது என்பது எனது ஊகம். 
(தொடரும்) 

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Nallevidajam.

vinothiny pathmanathan dk சொன்னது…

சென்ற வாரம் பிரசுரிக்கப்பட்ட அல்லைபிட்டி பெயருக்கான காரணம் என்ற பகுதியில் அல்லை என்றால் என்ன என்பது பற்றி ஆசிரியரிடம் கேட்டிருந்தேன் .அதற்கான விளக்கத்தினை இந்தப்பதிப்பில் எதிர்பார்த்து காத்திருந்தேன் .பதில் ஏமாற்றமே .

இ.சொ.லிங்கதாசன்.,டென்மார்க் சொன்னது…

அன்பான சகோதரி வினோதினி பத்மநாதன் டென்மார்க் அவர்கட்கு,
மேற்படி 'தாரமும் குருவும்' எனும் தொடரைத் தாங்கள் தவறாமல் வாசித்து வருபவராக இருப்பின் ஒரு விடயம் தங்களுக்குப் புலப்பட்டு இருக்கும். அஃதாவது 'பாலர் வகுப்பு' எனும் துணைத் தலைப்பின்(உப தலையங்கம்) கீழ் ஆசிரியர்களைப் பற்றியும், கற்பித்தல் பற்றியும் அலசி வருகிறேன் என்பதையும், 'அல்லைப்பிட்டி 1977' எனும் உப தலையங்கத்தின் கீழ் 'அல்லைப்பிட்டி' சம்பந்தப்பட்ட சில விடயங்களையும் உங்களோடு பகிர்ந்து வருகிறேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அல்லைப்பிட்டி 1977 என்ற உப தலைப்பின் கீழ் கேட்டிருந்த கேள்விக்கு மேற்படி தலைப்பின்கீழ் அடுத்த தடவை தொடரும்போது பதில் எழுதலாம் எனக் காத்திருந்தேன்.நீங்கள் அவசரப்பட்டு விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.மேலும் கடந்த 1.10.2011 அன்று எழுதிய இத்தொடரின் பகுதி 4.6 இல் 'அல்லைப்பிட்டி' பற்றி அறிவதற்கு இரண்டு வாரங்கள் பொறுத்திருங்கள் என்று எழுதியிருந்தேன் கவனித்தீர்களா? ஏனெனில் ஒரு வாரம் அல்லைப்பிட்டி பற்றி எழுதினால் அடுத்த வாரம் ஆசிரியர்களைப் பற்றியும் எழுதி இரண்டு வெவ்வேறு தலைப்புகளை சமாந்தரமாக நகர்த்திச் செல்லவேண்டிய ஒரு கடினமான பணியில் என்னையறியாமலே நான் இறங்கி விட்டேன்.உங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்புக் காரணமாகவே என்னால் தொடர்ந்தும் இத்தொடரை வெற்றிகரமாக எழுத முடிகிறது. உங்கள் கேள்விக்கு நிச்சயமாக எனது தொடரில் பதில் கிடைக்கும்.
உங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

கருத்துரையிடுக