திங்கள், செப்டம்பர் 26, 2011

தாய்லாந்துப் பயணம் - 20



ஆக்கம்:
 வேதா இலங்காதிலகம், டென்மார்க்.

தாய்லாந்து வளைகுடாவில் வாழைப்பழ உருவப் படகில் இருந்தோம். (படத்தில் படகினூடு நீரை ஊடுருவிப் பார்க்கும் வசதியை நீங்கள் காணக் கூடியதாக இருக்கிறது).
வேகப் படகு எமக்குக் கிட்ட வந்தது. அதில் மாறி ஏறினோம். நடுக் கடலில் அப்படி மாறுவது நல்ல திறிலிங் ஆக இருந்தது.
 ’இந்த உல்லாச, அற்புத அனுபவத்திற்காகவே பலர் மாதக்கணக்கில் கடலில் படகில் போய், சட்டி முட்டியுடன் சமைத்துச் சாப்பிட்டு வாழ்ந்து விட்டு வருகிறார்கள்.  அது ஏன் என்பது இப்போது புரிகிறது’ என்றேன் நான் கணவரிடம். அவரும் ஒத்துக் கொண்ட மாதிரி ஆமோதித்துச் சிரித்தார்.
கோலான் தீவிலிருந்து மாலை 5.00 மணிக்குப் புறப்பட்டு 5.15க்கு 'பற்றியா' கரையோர நகருக்கு வந்தோம்.
மாலை நேரமாகியதால் பல இளம் பெண்கள் கடற்கரையில் அலங்காரமாக வந்திருந்து உல்லாசப் பயணிகளுக்கு வலை வீசியபடி இருந்தது தெரிந்தது. அதைக் கவனிப்பதும் நல்ல முசுப்பாத்தியாக(வேடிக்கையாக) இருந்தது. எல்லாப் பெண்கள் கையிலும் ஒரு சிறிய அழகு சாதனப் பெட்டி இருந்தது. அடிக்கடி முகத்தைச் சரி செய்தபடியே இருந்தனர்.
பாய்கள் விரித்துப் பெண்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தனர். சும்மா சொல்லக் கூடாது! அங்கே இங்கே என்று உடலில் சதைகள் தொங்காது சிக்கென்று அவர்கள் சிறு உடலுக்கு ஏற்ற ஆடைகளுடன் மாடல் பெண்கள் போலவே இருந்தனர்.
வேறு சிலர் ஆண்களும் சிறு சிறு கொறிக்கும் பணியாரங்களையும் மீன், றால் பொரியல் ஆகியனவும், தேனீரும் தட்டுகளில் காவியபடி விற்றனர். கடற்கரை கலகலக்கத் தொடங்கி விட்டது.
இந்திய சினிமாத் துறை 'மனோபாலா' ஏதோ படத்திற்கு ரௌடியாக வேடம் போட்டு மோட்டார் சைக்கிளில் ஓடும் போது பற்றியாவில் தான் பொலிஸ் பிடித்ததாம் பின்பு மொழி பெயர்ப்பாளர் வந்து விளக்கிக் கூற விடுபட்டாராம் என்று இங்கு வர வாசித்தேன். சிரிப்பு வந்தது.
உல்லாசப் பயணக் கந்தோருக்குப் போனோம். முதலில் எம்மைப் படம் எடுத்தனர் என்று கூறினேன் அல்லவா! அதை அழகாக சட்டம் போட்டு, பிரேம் போட்டு மேசையில் வைக்கக் கூடியதாகச் செய்து, விரும்பினால் 100பாத் கொடுத்து வாங்கலாம் என்றனர். 16 குறொனர் தான். பற்றியா தாய்லாந் என்று எழுதி, கீழே ஆழக்கடல் அதிசய உலகு, வண்ண மீன்கள், கடற் பாசிகளுடன், மிக அழகாக வரைந்து உருவமைத்து வெள்ளை நிறத்தில் இருந்தது. வேண்டாம் என்று கூற முடியவில்லை. வாங்கினோம். (அந்தப் படம்.)
நாமிருவரும் சேர்ந்து நின்ற படம் அது. வீட்டில் அதைப் பார்த்து ” Thats nice !  So sweet! ” என்று பிள்ளைகள் சந்தோசம் கொண்டனர்.
எம்மோடு பற்றியா வந்த சிலர் அங்கேயே 2, 3 நாட்கள் தங்கிச் சுற்றிப் பார்த்து தமது இடத்திற்குப் பயணமாக இருந்தனர். சே! எமக்கு இப்படிச் செய்ய முடியவில்லையே! மறுபடி பட்டுனாம் போக வேண்டுமே! என்று இருந்தது.
பற்றியாவில் முதலைகள், விலங்குகள் வனம், யானைகள் என்று பல சங்கதிகள் பார்க்க இருக்கிறது. பார்த்தவர்கள் அது பற்றிப் பிரமாதமாகக் கூறியிருந்தனர். அவையெல்லாம் ஒரு இரவுக்கும் மேலாக 2 நாட்கள் என்ற கணக்கில் தங்கிப் பார்க்கும் சுற்றுலாக்கள் தான். அதனாலேயே நாம் அதைத் தெரிவு செய்ய வில்லை.
மாலை 8 மணியளவில் பட்டுனாம் வந்தோம். மிகவும் பிந்தினால் அல்லது வெளியே போக அலுப்பானால் அப்படியே ரென் ஸரார் உணவகத்திலேயே இரவு உணவை முடிப்போம்.
அறைக்கு வந்தோம். உப்புத் தண்ணீரில் தோய்ந்ததால், உப்பு எல்லாம் போக குளித்து ஆடை மாற்றி அங்கேயே இரவு உணவை முடித்தோம்.
முன்பு எமது கணனிக்கு நிற மைகள், (கலர் இங்க்) வாங்கவென்று கம்பியூட்டர் சென்ரர் சென்று சுற்றி வாங்கினோம். அங்கு வீட்டுக்கு ஒரு மிக்ஸி வாங்க வேணும் என்று தேடித் தேடிப் பார்த்துக் களைத்து விட்டோம். மிக்ஸியை வாங்குவது எங்கு என்று புரியவில்லை. விடுமுறை முடியும் நாளும் வந்தவிட்டது. அதை எங்கு வாங்கலாம் என்று யோசித்து இறுதியாக இந்திய உணவகத்தில் சென்று கேட்டோம். அவர்கள் முகவரியை எழுதித் தந்தனர்.  Big   C என்ற வியாபார நிலையத்தில் வாங்கலாம் என்றனர்.
அடுத்த நாள் புரட்டாதி 12-2008 வெள்ளிக்கிழமை காலையில் அந்த  Big C  க்கு சென்றோம். பட்டுனாம் சந்தைக்கு அருகிலேயே அது இருந்திருக்கிறது. எமக்குத் தெரியவில்லை. நினைக்க நினைக்கச் சிரிப்பாக இருந்தது.
-
—பயணத்தின் இறுதி அங்கம் அடுத்த வாரம் வரும்.———

1 கருத்து:

Paransothinathan, Denmark சொன்னது…

Very interesting. Well written.

கருத்துரையிடுக