புதன், செப்டம்பர் 14, 2011

'ஆயிரத்தில் ஒருவன்' - 'திரைப்படம்' என் பார்வையில்

ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர்
'நான் கடவுள்', 'உன்னைப் போல் ஒருவனுக்கு' அடுத்து தியேட்டரில் பார்த்த படம் இது தான். வலைப்பதிவுகளில் வந்த விமர்சனங்களை படித்து விட்டு எதிர்பார்ப்புகளை வெகுவாக குறைத்துக்கொண்டு சென்றது நல்லதாக போய்விட்டது. பலரின் விமரிசனங்களை படித்தால் ‘மவனே ! பாயிண்ட் பாயிண்டா’ பிரிச்சு மேஞ்சுடணும்’ -னு நோட்டும் கையுமா போய் குறிப்பெடுத்துக் கொண்டு எழுதுவார்களோ என சந்தேகமாயிருக்கு. அதிலும் ஆங்கிலப்படங்களை அதிகமாக பார்ப்பவர்கள் தங்கள் மேதமையை காட்டுவதற்காக ‘சொதப்பிட்டான்யா’ என 1000 கோடி செலவில் எடுத்த ஆங்கிலப்படத்தையும் 30 கோடியில் எடுத்த இந்த படத்தையும் ஒப்பிட்டு ஒற்றை வரியில் தீர்ப்பு வழங்குவது நல்ல தமாசு .
இதுவரை செல்வராகவன், பாலாவைப் போல மிகக்கவர்ந்த இயக்குநர் இல்லை எனக்கு. முந்தைய நாள் தான் தொலைக்காட்சியில் "7Gரெயின்போ காலனி" பார்க்க நேர்ந்தது. இது போன்ற அப்பார்ட்மெண்ட் காதலை சொதப்பல் நடிகர்களை வைத்து நகர்ப்புற ரசனைக்கேற்றவாறு கொஞ்சம் மந்தகாசமான கோணத்துடன் பெரும்பாலும் பாடல்களை நம்பி களமிறங்கும் ஒரு இயக்குநர் என்ற என் பொதுவான கருத்தை வலுப்படுத்திக் கொண்டு இந்த படத்திற்கு சென்றால் எதிர்பாராத மாற்றம். எனக்கு தெரிந்து தமிழில் இந்த அளவுக்கு முன்னேற்பாடுகள், காட்சியில் வரும் அதிகபட்ச மனிதர்களின் ஒருங்கிணைப்பு, அரங்க அமைப்பு போன்றவற்றுக்கு அதிகபட்ச உழைப்பு தேவைப்பட்டிருக்கும் படம் இதுவாகத் தானிருக்கும்.

“சோழர் பாண்டியர் உண்மை வரலாற்றுக்கும் இதற்கும் தொடர்பில்லை. இது முழுக்க கற்பனையே” என முதலிலேயே போட்டு விட்ட பின்னரும் பலர் வரலாற்றுத் தவறுகளை நோண்டுவதுவும் பிடிபடவில்லை. ஒரு வரலாற்றுப் புத்தகத்தை படித்து விட்டு கேள்வி கேட்கலாம். வரலாற்றுப் புதினத்தில் வரும் கற்பனைகளையும், வர்ணனைகளையும் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி? அதான் புதினம் -ம்னு சொல்லியாச்சேப்பா (இதுவரை வரலாற்று புதினம் எதுவும் நான் படித்ததில்லை, அதனால என் கண்ணோட்டம் தவறோ என்னவோ?)

படத்தின் கதை, நடிப்பு, இசை பற்றியெல்லாம் பலரும் அலசி விட்டார்கள். என்னைப் பொறுத்தவரை ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு, காட்சி கோணங்களில் பிரம்மாண்டம். குறைந்தபட்சம் இவைகளில் இந்த படம் தமிழ்சினிமாவின் உச்சத்தை தொட்டிருக்கிறது. காட்சிகளின் நம்பகத்தன்மையை மட்டும் வைத்து முற்றிலும் நிராகரிப்பதை விட அந்த காட்சியை ஒருங்கிணைப்பதில் எடுக்கப்பட்டிருக்கும் உழைப்பை கருத்தில் கொள்வதும் முக்கியம். அந்த வகையில் செல்வராகவன் கற்பனையில் தோன்றுவதை காட்சிப்படுத்தியதில் தமிழ் சினிமாவின் பொருளாதார வரைமுறைக்குட்பட்டு கொடுத்துள்ள பிம்பங்கள் கண்டிப்பாக பாராட்டுக்குரியவை. மீண்டும் 
1000 கோடிகளை 30 கோடிகளுடன் ஒப்பிட்டு ஒற்றை வரியில் நிராகரிப்பது ஏற்புடையதல்ல.

கார்த்தியின் உடம்பில் புலி வண்ணத்தையெல்லாம் ஆராய்ந்து கேள்வி கேட்கும் சோழ மன்னன் புஜத்தில் பச்சை குத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர் உருவத்தை பார்த்து “யார் இந்த அரசன்
?” என ஏன் கேள்வி கேட்கவில்லை? என நானும் வம்புக்கு கேள்வி கேட்கலாம். படம் முழுவதும் கற்பனையென்றான பின் இதற்கெல்லாம் விடையில்லை.

படத்தின் இறுதிக்காட்சிகள் ஈழத்தின் சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பின் செல்வராகவனுக்கு தோன்றியதாக சிலர் நினைப்பதற்கு முகாந்திரம் அதிகமே. ஒரு நாட்டின் ராணுவம் என்பது 'தேசபக்தியின் அடையாளம்', 'ஒழுக்க சீலர்களின் கூடாரம்', 'புனிதப்பசுக்கள்' போன்ற பாடப்புத்தக பொதுப்புத்தியிலிருப்பவர்களுக்கு கடைசி காட்சிகளை ஜீரணிக்க முடியாதிருக்கலாம். ஆனால் அதை துணிந்து பதிவு செய்த செல்வாவை பாராட்ட வேண்டும். சோழர் காலத்து மொழியில் வரும் வசனங்கள் "பலருக்கும் புரியவில்லை" என பரவலாக குற்றச்சாட்டு உள்ளது .எனக்கு ஒரு சில வார்த்தைகள் தவிர அனைத்தும் தெளிவாக புரிந்தது.

செல்வா இன்னொன்றை செய்திருக்கலாம். படத்தை முடித்த பின்னர் வெளிப்படையாக கருத்து சொல்ல வாய்ப்பில்லாத, தன் உள்வட்டத்தில் உள்ளவர்களை தவிர்த்து தனக்கு வெளிவட்டத்தில் ஒரு சில தரப்பினரிடம் படத்தை காண்பித்து கருத்து கேட்டிருந்தால், இரண்டாம் பாதியில் சில குறைத்தல், சரிப்படுத்துதல் செய்திருந்தால் இந்த படம் தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப ரீதியில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் .

குறைகளைத் தாண்டி கண்டிப்பாக இது புறக்கணிக்கப்படவேண்டிய படமல்ல, கொட்டப்பட்டிருக்கும் உழைப்புக்காகவேனும் .


2 கருத்துகள்:

Rajan, Skjern DK சொன்னது…

Very good..

Paransothinathan, Denmark சொன்னது…

நல்ல கட்டுரை

கருத்துரையிடுக