இணைய நிர்வாகி,
தீவகன் இணையம் (www.theevagan.com)
இலங்கை.
அன்புடையீர்,
கடந்த 23.09.2011 அன்று 'தீவகனில்' தாங்கள் இணைத்திருந்த "மண்டைதீவில் இருந்த சரணாலயத்தை மறக்காத பறவைகள்" எனும் தலைப்பிட்ட ஒன்றரை நிமிடக் காணொளியையும், புகைப்படத்தையும் பாராட்டும் முகமாகவும், அது சம்பந்தமான சில மேலதிகத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும் முகமாகவே இக்கடிதத்தை வரைகிறேன்.இது ஒரு கடிதம் என்பதை விடவும் எனக்குத் தெரிந்த சில தகவல்களையும், என் சிந்தனைகளையும் உங்கள் வாசகர்களோடும், 'அந்திமாலையின்' வாசகர்களோடும் பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறிய கட்டுரை என்று கூறுவது பொருத்தமாகும்.
சைபீரியன் வாத்து |
மேற்படி பகுதி இலங்கையை ஆண்டவர்களாகிய ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியர்களாலேயோ அல்லது இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் வந்த ஆட்சியாளர்களாலேயோ 'பறவைகள் சரணாலயம்' எனப் பிரகடனப் படுத்தப் படவில்லை என்பது ஒரு துரதிர்ஷ்டமே.
விசிலடிக்கும் வாத்து |
ஆசிய நாடுகளில் இந்தியாவின் தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கும், இலங்கையின் பதினைந்திற்கும் மேற்பட்ட 'பறவைகள் சரணாலயங்கள்' அமைந்துள்ள பகுதிகளுக்கும் பறந்து வருகின்றன. இவை நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து தை மாத நடுப்பகுதி வரையும்(சில சமயங்களில் மாசி மாதம் வரை) 'விசா' இல்லாமல் தங்கியிருக்கின்றன. இவைகளில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 'வேடந்தாங்கல்' பறவைகள் சரணாலயத்திற்கு மட்டும் வருடமொன்றிற்கு 40,000 தொடக்கம் 70,000 வரையான பறவைகள் வெளி நாடுகளில் இருந்து வருவதாக மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. இலங்கைக்கு வருடமொன்றிற்கு மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் வருகை தருவதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இலங்கையில் மொத்தமாக 210 வகையான பறவையினங்கள் உள்ளன.ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து 129 வகையான வெளிநாட்டுப் பறவையினங்கள் வந்து சேர்கின்றன. நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் இலங்கையில் வசிக்கும் பறவையினங்களின் வகைகள் மொத்தமாக 339 ஆகும். ஆச்சரியம் என்னவெனில் இலங்கைக்கு 'அழையா விருந்தாளிகளாக' வந்து சேர்கின்ற மேற்படி பறவைகளை இலங்கைப் பறவைகள் துன்புறுத்துவதும் இல்லை, துவேஷம் பாராட்டுவதும் இல்லை. வெளிநாட்டு விருந்தாளிப் பறவைகளும் 'பிழைப்புக்கென்று' வந்த இடத்தில் 'சண்டித்தனம்' செய்வதும் இல்லை. இவைகள் உலக ஆச்சரியம் அல்லவா? இதேபோல் விருந்தாளிப் பறவைகள் இலங்கையின் சிறு கடற் பிரதேசத்திலும், நீர் நிலைகளிலும் உள்ள மீன் இனங்களை "ஒரு கை பார்த்து விடுகின்றன". ஒரு சராசரி வெளிநாட்டுப் பறவை நாளொன்றுக்கு இரண்டு தொடக்கம் ஐந்து கிலோ வரையான மீனைப் பிடித்து உண்கிறது. இவற்றில் 'சைபீரியன் டக்' எனப்படும் 'கூளக் கிடாய்தான்' மோசமான பேர்வழி. நாளொன்றிற்கு ஐந்து கிலோவுக்கும் மேற்பட்ட அளவில் மீன்களைப் பதம் பார்க்கின்றது. இலங்கையில் சுமாராக மூன்று மாதங்கள் தங்கி நிற்கும் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட பறவைகள் தின்று தீர்க்கும் மீனின் அளவைக் கணக்கிட்டுப் பார்த்தால் "கண்ணைக் கட்டிக் கொண்டு வரும்" ஆனாலும் இயற்கையின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
இலங்கையில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட பகுதிகள் பறவைகள் சரணாலயமாக அரசினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. யாழ் குடா நாட்டில் மண்டைதீவு, அராலித்துறை, கல்லுண்டாய்வெளி போன்ற பகுதிகள் பல்லாயிரக் கணக்கில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும் இடமாக இருப்பினும் 'பறவைகள்' சரணாலயமாகப் பிரகடனப் படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. யாழ் குடாவில் ஒரேயொரு பறவைகள் சரணாலயமாகத் திகழ்ந்த 'சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயமும்' 1990 களுக்குப் பின்னர் நிகழ்ந்த கொடிய போர்கள் காரணமாகப் பொலிவிழந்து, கவனிப்பாரின்றிக் கிடக்கின்றது.
இது போன்ற இயற்கையோடு சம்பந்தப் பட்ட விடயங்களுக்கும் தங்கள் இணையத்தில் இடமளிக்குமாறு வேண்டுகிறேன். இத்தகைய விடயங்களில் அக்கறையும், ஆர்வமும் உள்ள பல்லாயிரக் கணக்கான வாசகர்கள் பூமிப்பந்தில் வாழ்ந்துகொண்டு இருப்பர். பொழுதுபோக்குக் கேளிக்கை நிகழ்ச்சிகளை அள்ளி வழங்குகின்ற ஏராளமான தொலைக்காட்சிச் சேவைகள் உலகம் முழுவதும் இருந்தபோதிலும் National Geographich மற்றும் Animal Planet(Discovery) போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகள் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் இடம்பிடித்துத் தமக்கெனத் தனி முத்திரை பதித்துள்ளதன் காரணம் என்ன? "மனிதன் இயற்கை பற்றியும், விலங்குகள் பற்றியும் அறிந்துகொள்ள, புதிது புதிதாகத் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறான்" என்பதுதான்.
உங்கள் சேவை சிறக்கவும், தொடரவும் எல்லாம்வல்ல பிரபஞ்ச சக்திகளின் அருள் உங்களுக்கு நிறைவாகக் கிடைக்கட்டும்.
நன்றி, வணக்கம்.
அன்புடன்
இ.சொ.லிங்கதாசன்
ஆசிரியர்
www.anthimaalai.dk
3 கருத்துகள்:
நல்ல ஒரு பதிவு இது . நன்றி
Very good
Super.
கருத்துரையிடுக