புதன், பிப்ரவரி 02, 2011

ஓர் அறிமுகம்

ஒரு விஞ்ஞானி - அத்தியாயம் 1
கடந்த இரண்டு வாரங்களாக எமது நண்பரும், விஞ்ஞானியுமாகிய திரு.க.பொன்முடி அவர்களின் தொலைக்காட்சி நேர்காணல்கள் அந்திமாலையின் அறிவியல் பகுதியில்  இடம்பெற்று வருவது வாசகர்கள் அறிந்ததே. மேற்படி விஞ்ஞானியை முறைப்படி வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவேண்டிய கடப்பாடு எமக்குள்ளது இதோ அவரைப்பற்றிய சில குறிப்புகள் வாசகர்களின் பார்வைக்கு.
விஞ்ஞானி க.பொன்முடி 
தற்போது நாற்பத்தியாறு வயதாகும் திரு. கணபதி பொன்முடி அவர்கள் 1.04.1965 இல் தமிழ்நாட்டின் மலைப்பிரதேச மாவட்டமாகிய நீலகிரியில்(உதகமண்டலம் அல்லது ஊட்டி) உள்ள 'குன்னூர்' எனும் சிறிய நகரத்தில் பிறந்தார்.
தனது பிறந்த தினத்தைப் பற்றி அடிக்கடி வேடிக்கையாகப் பின்வருமாறு கூறுவார். "எனது பிறந்த தினத்திற்காக 'மிட்டாய்' வாங்கி நண்பர்களிடம் நீட்டினால், என்னை ஒரு தடவை ஏற, இறங்கப் பார்ப்பார்கள், யாருமே உடனடியாக மிட்டாயை எடுத்துக் கொள்ள மாட்டார்கள், அன்று 'முட்டாள்கள்' தினமல்லவா? நான் ஏதோ கிண்டல் செய்கிறேன் என்றுதான் முதலில் நினைப்பார்கள்" என்பார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை ஈரோட்டிலும், பட்டப் படிப்பை ஈரோட்டிலுள்ள 'சிக்கைய நாயக்கர் கல்லூரியிலும்' கற்றார். கல்லூரியில் இளநிலை அறிவியலில் 'விலங்கியல்' பாடத்தைக் கற்றார். சிறுவயது முதலே அறிவியலின்மீது அதீத ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இவர் தனது சிறு வயதில் தனது தாயாரிடம் "அம்மா அதற்கு என்ன காரணம் தெரியுமா?, இதற்கு என்ன காரணம் தெரியுமா? என்று 'அறிவியல்' ரீதியிலான கேள்விகளை அடிக்கடி கேட்பதுடன், பதிலையும் தானே தன் தாயாரிடம் கூறுவார் என இவரது தாயார் தற்போது நினைவு கூருகிறார்.
ஏழாம் வகுப்பில் படிக்கும்போதே நூலகங்களில் அமர்ந்து மணித்தியாலக் கணக்கில் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் நாள் முழுவதும் கூட ஊண், உறக்கத்தை மறந்து வாசித்துக் கொண்டேயிருப்பார். அதன்பிறகு ஒரு நல்ல நண்பன்மூலம் 'பழைய புத்தகக் கடைகளில்' குறைந்த விலைக்கு, நல்ல நல்ல புத்தகங்கள் எல்லாம் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பழைய புத்தகக் கடைகளுக்குத் தொடர்ந்து செல்லும் வழக்கம் ஏற்பட்டது.
ஆனால் பள்ளியில், கல்லூரியில் பின் தங்கினார், பல பாடங்களில் தோல்வி.....
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக