செவ்வாய், டிசம்பர் 25, 2012

கிறிஸ்துமஸ் தினக் கவிதை

ஆக்கம்: 'கவி வித்தகர்' சேவியர் வில்பிரட் 
அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை.
 
பொங்கும் இதயத்தில் பூத்த ஒளி

• திங்கள் ஒளி தங்கக் கதிர் பரப்ப
தமிழும் திருப்புகழ் பாடி மகிழ
எங்கும் மானிடம் மகிழ்ச்சி பொங்க
ஏதிலியானவர் வாழ்வு மலர்ந்திட
பொங்கும் இசையினில் புனிதம் மலர்ந்திட
புலம்பும் இதயங்களில் புதுமை வளர்ந்திட
அங்கம் நொடியினில் சிலிர்த்து பணிந்திட
அன்பர் யேசு அவனியில் உதித்தார்
 
• வேதனை உலகில் என்றும் மறைந்திட
வீடுகள் தோறும் அவலங்கள் நீங்கிட
தூதனாம் யேசுவின் வரவைப் புகழ்வோம்
துயரங்கள் போக அவரடி பணிவோம்
சாதனை வீரனாய் உலகில் தோன்றிய
சீரிய செம்மலை சிரம் தாழ்த்தி பணிவோம்
சோதனை விலக்கும் சோதரர் யேசுவை
செந்தமிழாலே பாடிப் பணிவோம்
 
• உத்தமர் யேசுவின் சத்திய வேதம்
உலகம் அழிவதைக் கூறிநின்றதா?
எத்தனை இடர்கள் உலகில் வருமென்று
எம்மான் யேசு மொழிந்து நின்றாரா?
ஒத்து வாழ்வதும் ஒற்றுமை காப்பதும்
ஒவ்வொரு மனங்களில் யேசு போதனை
கர்த்தராம் யேசுவின் ஒளியினில் வாழ
கரங்கள் இணைத்து நிற்போம் அனைவரும்
 
• எப்படியும் உலகில் வாழலாமென
எத்தனை இதயங்கள் வாழ்ந்திட்ட போதும்
செப்படி வித்தையில் வாழ்வெலாம் இழந்துமே
செழுமை நலங்கள் அழிந்தும் சிதைந்தும்
இப்படி வாழ்வது மனித பலமென
இகலுக்கு நல்ல நெறிகள் வகுத்த
ஒப்பிலா இயேசுவின் பிறப்பை
ஒன்றுபட்டே வாழ்த்தி மகிழ்வோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக