ஞாயிறு, டிசம்பர் 30, 2012

ஒரு கலைஞனின் மறைவில்

இலங்கை வானொலி நேயர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'கோமாளிகள்' நகைச்சுவை நாடகத்தின் முக்கிய பாத்திரங்களுள் ஒருவராகிய உபாலி S.செல்வசேகரன் அவர்கள் நேற்றைய தினம்(டிசம்பர் 29) கொழும்பில் காலமானார். இது குறித்து இலங்கை வானொலி அறிவிப்பாளர்  லோஷன் அவர்கள் தனது வலைப்பதிவில் எழுதியிருந்த பதிவை இங்கு அவருக்குரிய நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்.
உபாலி S.செல்வசேகரன் 
இலங்கையின் சிரேஷ்ட நாடக, திரைப்படக் கலைஞர். தமிழ் மட்டுமன்றி சிங்கள மொழியிலும் தனது முத்திரையைப் பதித்த ஒரு அற்புதக் கலைஞர். லண்டன் கந்தையா (சானா) சண்முகநாதன் காலத்தில் உருவாகிய ஒரு நாடக அணியின்  தொடர்ச்சியாக உருவான அற்புதக் கலைஞர்களின் கூட்டணியில் ஒருவர்.

அந்த நாட்களில் இலங்கை வானொலியில் ஒரு கலக்குக் கலக்கி தமிழ் நேயர்கள் மனதில் இடம் பிடித்த கோமாளிகள் கூட்டணியில் - அப்புக்குட்டி ராஜகோபால், மரிக்கார் ராமதாஸ், உபாலி செல்வசேகரன் என்று இந்த மூவரையும் (இவர்களோடு பண்டிதராக அன்புக்குரிய அண்ணன் அப்துல் ஹமீதும்) சிறு வயது முதலே குடும்ப நண்பர்களாகப் பரிச்சயம்.
நான் நடித்த முதலாவது வானொலி நாடகம் ஒரு இலக்கிய நாடகம் - அகளங்கன் அவர்கள் எழுதிய 'அம்பு ஒன்று தைத்தது' - தசரதனின் புத்திர சோக நாடகத்தில் எனக்கு தசரதனின் அம்பு பட்டு இறக்கும் சிறுவன் பாத்திரம். தசரதனாக திரு.K.சந்திரசேகரனும், என்னுடைய பார்வையற்ற தந்தையாக அமரர் செல்வசேகரனும். எழில் அண்ணா தான் தயாரிப்பாளர்.

அன்று முதல் இவருடனும், திரு.ராமதாஸ் அவர்களுடனும் எனக்கும் என் தம்பிக்கும் பல நாடகங்கள் நடிக்கும் வாய்ப்பு. எத்தனையோ தசாப்த அனுபவங்களையும் நுணுக்கங்களையும் தங்களோடு நடிக்கும் எமக்கும் சொல்லித் தந்து வளர்த்துவிட்டவர்கள்.

பின்னாளில் சூரியன் வானொலியில் நான் முகாமையாளராகப் பணியாற்றியவேளை முகாமைத்துவத்தால் நாடகங்கள் செய்வதற்கு அனுமதி கிடைத்ததையடுத்து 'அரங்கம்' என்ற பெயரிட்டு வாரத்தில் நான்கு நாட்கள் நாடகங்களை ஒலிபரப்பி வந்தோம்.

வெளியே ஒரு கலையகத்தில் செல்வா அண்ணா, சந்திரசேகரன் அண்ணன், ராமதாஸ் அங்கிள், ராஜா கணேஷன் அவர்கள் ஆகிய சிரேஷ்ட கலைஞர்களையும் இன்னும் பல வெளிக்கலைஞர்களையும் கொண்டு தயாரிப்பாளராக பிரதீப்பை அமர்த்தி 'அரங்கம்' நாடகங்களை உருவாக்கினோம்.

தமிழ் ஒலிபரப்பில் மறக்க முடியாத கலைஞர்கள் பலரை ஒன்றாகச் சேர்த்து மீண்டும் அவர்களது நேயர்களையும் எங்கள் வசபடுத்திய அந்த வாய்ப்பும், இவர்களின் அனுபவங்களை எங்கள் இளம் ஒலிபரப்பாளர்களுக்கும், எமக்கும் சேர்த்துப் பெற்ற அந்தக் காலம் உண்மையில் எங்களுக்கும் ஒரு பொற்காலம் தான்.

இப்போதும் இந்தப் பெரியவர்கள் எங்கே எம்மைக் கண்டாலும் 'அரங்கத்தை' ஞாபகப்படுத்துவதும் எங்களுடன் மிக இயல்பாகப் பழகுவதும் இன்னும் இவர்கள் மீது எங்கள் மதிப்பை உயர்த்தியவை.

இந்த அற்புதமான செல்வா அண்ணா சிங்களத் திரையுலகிலும், தொலைகாட்சி நாடகங்களிலும் கூட பெரு மதிப்பைப் பெற்றிருந்தவர். மொழிபெயர்ப்பிலும் கெட்டிக்காரர்.

'சரசவிய' விருது பெற்ற ஒரே தமிழ் கலைஞர் உபாலி' செல்வசேகரன் தான். இன்னமுமே இவர் போன்ற எங்களின் அற்புதமான கலைஞர்களை நாம் இன்னமும் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்று வருத்தம் இருந்துகொண்டே இருக்கிறது.

உபாலி செல்வசேகரன் அவர்களுக்கு அஞ்சலிகள்.


தகவலுக்கு நன்றி:www.4tamilmedia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக